காதல் ஒரு மேஜிக்தான். என்ன சொன்னாலும், எவ்வளவு பட்டாலும் அந்த மேஜிக் எல்லோருக்கும் வேண்டும். அதை விட்டுக்கொடுக்க யாரும் தயாராக இருக்க மாட்டார்கள். முடிந்தவரை தன் காதலனை /காதலியைத் தக்க வைத்துக் கொள்ளவே முனைவார்கள். ஆனால், அவர்கள் இருக்கும் இந்த ரிலேஷன்ஷிப் இருக்கிறதே. அது அப்படியெல்லாம் எளிதில் விடாது. `ஆண்டவன் சோதிப்பான்… ஆனா கைவிட மாட்டான்’ என்பார்கள். ரிலேஷன்ஷிப் கடவுள் அல்ல. சோதித்துக் கொண்டேயிருக்கும். சோதிக்க மட்டுமே செய்யும். சோதனைகளைத் தாண்டத் தாண்டதான் மகிழ்ச்சி கிடைக்கும். இந்தச் சோதனைகளை எதிர்கொள்ள தயங்குபவர்கள் அதை `ஹைஜம்ப்’ அடித்து கடக்க கையிலெடுக்கும் ஆயுதம்… பொய்.

பொய் சொல்லாத மனிதர்களே இருக்க முடியாது. ஒருவர் பொய் சொன்னதேயில்லை என்று சொன்னால் அவர் சொன்ன பொய்களில் அதுவும் ஒன்று எனக் கடந்துவிட வேண்டியதுதான். ஆனால், பொய்களில் பல `வெரைட்டி’ உண்டு. சில பொய்கள் ஆபத்தானவை. சில பொய்கள் `இட்ஸ் ஓகே’ ரகம். இன்னும் சில பொய்கள் ரசிக்க வைக்கும். ரிலேஷன்ஷிப்பில் சொல்லப்படும் பொய்கள் எப்படிப்பட்டவை, அதை எப்படி எதிர்கொள்வது, பொய் சொல்லும் ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பைத் தொடரலாமா? பார்த்துவிடலாம்.

Relationship

ரிலேஷன்ஷிப் பொய்களை நான்காகப் பிரிக்கலாம்.

முதல் வகை, பார்ட்னரைக் காயப்படுத்திவிடக் கூடாது என்பதற்காகச் சொல்லப்படும் பொய்கள்.

உதாரணமாக, காதலியின் பிறந்த நாளுக்கு தனது வாழ்த்துதான் முதலாவதாக இருக்க வேண்டுமென காதலன் நினைக்கிறான். ஆனால், அவனுக்கு முன்னதாக இன்னொருவர் வாழ்த்திவிட்டார். அந்த நபர் காதலிக்கு அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒருவர் கூட கிடையாது. இதைச் சொன்னால் காதலன் நிச்சயம் வருத்தப்படுவார். இதில் காதலியின் மீதும் தவறு கிடையாது. இங்கு, காதலனின் வாழ்த்துதான் முதல் வாழ்த்து எனச் சொல்லும் காதலியைத் திட்டவா முடியும்? ஆனால் அவர் சொன்னது பொய்தான். இது முதல் வகை.

இரண்டாவது வகை, சண்டையை எதிர்கொள்ள விரும்பாமல் அதைத் தவிர்க்க சொல்வது.

காதலன் காத்திருக்கிறான். காதலியும் கிளம்பிவிட்டாள். வரும் வழியில் பள்ளிக்கால தோழன் அல்லது தோழியைப் பார்க்கிறாள். 10 நிமிடம் அங்கே போய்விட்டது. இங்கே காத்திருக்கும் காதலன் கொஞ்சம் நிதான இழந்திருக்கலாம். உண்மையைச் சொன்னால் தேவையற்ற சண்டை வரலாம். கேள்விகள் வரும். இதெல்லாம் தேவையில்லை என நினைத்து வண்டி பஞ்சர் என்றோ, டிராஃபிக் என்றோ அந்தக் காதலி சொல்லிவிடலாம். இதுவும் பொய்தான். ஆனால், நோக்கம் ஏமாற்றுவது அல்ல.

மூன்றாவது, தன்னைக் காப்பாற்றிக்கொள்ள சொல்லும் பொய். இது கொஞ்சம் சிக்கல்தான்.

போன உதாரணத்தில், தற்செயலாகப் பார்த்த பள்ளித் தோழன் அல்லது தோழியை திட்டமிட்டு வரச் சொல்லியிருக்கலாம். பேச்சு சுவாரஸ்யத்தில் அதிக நேரம் அங்கே செலவழித்திருக்கலாம். அதைச் சொன்னால் காதலன் /காதலி `அப்புறம் ஏன் என்னை வெயிட் பண்ண சொன்ன?’ என எகிறலாம். இதில் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள பொய் சொல்லலாம். இது கொஞ்சம் ரிஸ்க் ஆன பொய்தான்.

நான்காம் வகை, தன்னைச் சுற்றியிருக்கும் நண்பர், உறவினர்களைக் காப்பாற்றுவதற்காகச் சொல்வது.

உதாரணமாக, காதலியின் அம்மாவுக்கு காதலனைப் பிடிக்கவே பிடிக்காது. ஆனால் அதை மறைத்து `அம்மாக்கு உன் மேல செம மரியாதை’ எனப் பொய் சொல்லலாம். இங்கேயும் நோக்கம் எல்லாம் சுமுகமாக இருக்க வேண்டும் என்பதே.

Love

இந்த நான்கு வகைகளைத் தவிர இன்னொன்று இருக்கிறது. அது `பழக்கம்’. சிலருக்கு வளர்ந்த சூழல், பெற்றோர்கள் எனப் பல காரணங்களால் சின்ன வயதிலிருந்தே பொய்கள் சொல்வது பழகியிருக்கும். `என்ன சாப்ட?’ எனக் கேட்டால் சட்டென `இட்லி’ என்பார்கள். உண்மையில் அவர்கள் வீட்டில் மற்றவர்கள் அதிகம் கேள்விப்படாத எதாவது ஒரு உணவைச் சமைத்திருப்பார்கள். அதைச் சொன்னால், அதைப் பற்றி கேட்பார்களே என நினைத்து இட்லியென முடித்துவிடுவார்கள். எதற்கெடுத்தாலும், காரணமே இல்லாமல் பொய் சொல்வது அவர்களின் சின்ன வயது பழக்கம். அவர்களுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தால் இதைத் தெரிந்துதான் இருக்க வேண்டும்.

சின்னதோ பெரியதோ… எந்த வகை பொய்யோ… ஒன்றை மட்டும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். பொய் சொன்னால், யாருக்கும் கடுப்பாகத்தான் செய்யும். எனவே, அதன் எதிர்வினைகளைப் பொய் சொன்னவர் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.

இனி நான் சொல்லப்போவதெல்லாம், பொய் சொன்னவருக்காக இல்லை. அதை எதிர்கொள்பவருக்காக.

ஒருவர் பொய் சொல்லி, இன்னொருவர் அதைக் கண்டுபிடித்து விட்டால் அந்தச் சூழலில் கண்டுபிடித்தவரின் கை ஓங்கும். அது இயல்புதான். ஆனால், அதற்காக அவர் பொய்யே சொன்னதேயில்லை என்றாகுமா? அவர் மாட்டவில்லை. அவ்வளவுதான். எனவே, அந்தப் பொய்க்கான காரணங்களை நிதானமாக யோசிப்பது அந்த ரிலேஷன்ஷிப்புக்கு நல்லது. சின்னச் சின்ன பொய்களுக்காக `பிரேக் அப்’ வரை போவதும் தவறு. அதே சமயம், எல்லா பொய்களையும் தெரிந்தே அனுமதிப்பதும் தவறு. விட்டுக்கொடுத்தல் வேறு; முட்டாள்தனம் வேறு. முடிந்தவரை அவ்வப்போது பொய்களைப் பேசிப் பேசி தீர்த்துவிட வேண்டும்.

Relationship

Also Read: உங்கள் ரிலேஷன்ஷிப் பற்றி பெற்றோர்களிடம் எப்போது சொல்லலாம், கூடாது?#AllAboutLove – 15

ஓர் உதாரணத்துடன் பேசலாம். காதலனுக்குக் குடிக்கும் பழக்கம் உண்டு. ஆனால், குடிகாரன் அல்லன். அந்தப் பழக்கத்தைக் கட்டுக்குள் வைக்க நினைக்கும் காதலி, தன்னிடம் அனுமதி வாங்காமல் குடிக்கக் கூடாது என்கிறாள்; காதலனும் சரியென சொல்லிவிட்டான். இப்போது காதலிக்குத் தெரியாமல் நண்பனின் திருமணத்தில் காதலன் குடித்துவிட்டான். சந்தேகப்பட்டு காதலி கேட்கும்போது `குடிக்கவில்லை’ எனச் சொல்லிவிடுகிறான் காதலன். காரணம், இதற்கு முன் ஒருமுறை இதே போல அனுமதியின்றி குடித்தபோது காதலி போட்ட `ஓவர் சண்டை’. அதைத் தொடர்ந்து சொன்ன பிரேக் அப். இந்த முறை அதை எதிர்கொள்ள விரும்பாத காதலன் பொய் சொல்லிவிட்டான். இப்போது காதலி என்ன செய்ய வேண்டும்?

காதலிக்கு இருப்பது சந்தேகம்தான். அவளுக்கு உறுதியாக அவன் குடித்தானா எனத் தெரியாது. ஆனால், அந்த சந்தேகம் உறுத்துகிறது. காதலனிடமே பொறுமையாக `போன தடவ நான் பண்ணது தப்புதான். அதுக்காக இனிமேல குடிச்சா என்கிட்ட மறைக்காத.’ என்று சொல்வதே நல்லது. அதைவிட்டு, காதலன் குடித்தானா என நண்பர்களிடம் விசாரிப்பதோ, அந்த நிகழ்வையே கண்டுகொள்ளாமல் விடுவதோ ரிலேஷன்ஷிப்புக்கு நல்லதல்ல. கண்டுகொள்ளாமல் விட்டால் காதலன் அதையே பழக்கமாக்கிவிடுவான். அதற்காக மற்றவர்களிடம் விசாரித்தால் அது காதலனைக் கடுப்பேற்றும். நிதானமாகப் பேசி, காதலன் உண்மையை ஒத்துக்கொண்டால் `இனிமேல பண்ணாத. அப்படி அவாய்டு பண்ண முடியலைன்னா அடுத்த நாள் வந்தாச்சும் சொல்லு. நான் புரிஞ்சிப்பேன்’ என்றுதான் சொல்ல வேண்டும். காதலனும் அதைத் தொடர்கதையாக்காமல் இருக்க வேண்டும். ஒருவேளை குடிக்காமல் இருக்க முடியாதென நினைத்தால், அந்த உண்மையையும் சொல்லிவிடுவது நல்லது.

பொய்களினால் வரும் விளைவுகளில் மோசமானது `இன்வெஸ்டிகேஷன்’தான். ஒருமுறை தவறு செய்ததற்காக அதை மீண்டும் மீண்டும் கண்காணிப்பது ரிலேஷன்ஷிப்புக்கு நல்லதல்ல. ஒரு நல்ல ரிலேஷன்ஷிப்புக்கு காதலுக்கு இணையான தேவை, நம்பிக்கைதான். பெரும்பாலும், இந்தக் கண்காணிப்பின் நோக்கம் பார்ட்னர் மீது குற்றம் கண்டுபிடிப்பதாகத்தான் இருக்கும். அதனால்தான் அது ரிலேஷன்ஷிப்பையே பாதிக்கும் என்கிறேன்.

Cheating எல்லாம் பொய்களில் வராது. அதைப் பற்றி முன்பே பார்த்துவிட்டோம் என்பதால் அதை விட்டுவிடலாம்.

Relationship

Also Read: காதலிலும் `No means no’ தானா? #AllAboutLove – 16

சுருக்கமாகச் சொன்னால், பார்ட்னர் பொய் சொல்கிறார் என்றால்,

  • உங்கள் மீதான பயத்தால் சொல்கிறாரா?

  • நீங்கள் பொஸெஸிவ் ஆவீர்கள் என்பதற்காகச் சொல்கிறாரா?

  • உங்களை ஏமாற்றச் சொல்கிறாரா?

  • முதல் தடவையா அல்லது தொடர்கதையா?

  • அவர் எப்போதும் போல சொல்வதா அல்லது புதிய பழக்கமா?

  • இதனால் நீங்கள் இழப்பது என்ன?

என எல்லாவற்றையும் யோசித்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு அவரிடம் நேரிடையாக அதைக் கேட்டுவிடுங்கள். பதில் உங்களுக்குத் திருப்தி என்றால் சரி. இல்லையென்றால் உங்களை பாதிக்கும் விஷயங்களை அவருக்கு எடுத்துச் சொல்லுங்கள்.

பொய் சொன்னவரைவிட இன்னொருவருக்கு அதனால் கோபம் கொள்ள எல்லா தார்மீக உரிமையும் இருக்கிறது. ஆனால், சின்னச் சின்ன பொய்களுக்காக ஒரு நல்ல காதலை, நல்ல ஆன்மாவை, நல்ல பார்ட்னரை இழந்துவிடாதீர்கள். அதே சமயம், பொய் சொன்னவருக்கு இதில் கூடுதல் பொறுப்பிருக்கிறது.

`Not only must Justice be done; it must also be seen to be done.’ என்பார்கள்.

அதாவது நீதி வழங்கப்பட்டால் மட்டும் போதாது; அது எல்லோருக்கும் தெரிய வேண்டும். உங்கள் பார்ட்னர் கேட்கும் நியாயமான விஷயங்களை அடுத்த முறை செய்துகாட்டுங்கள். அதுதான் நல்ல ரிலேஷன்ஷிப்புக்கான அடிப்படை.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.