பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

மிழக முதல்வராகிய திரு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு, நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று தமிழக முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் கட்சியினரும், நீங்கள் பணியமர்த்திய தேர்தல் வியூக அமைப்பு நிறுவனமும் கட்டமைத்த அதிமுக எதிர்ப்பு அலை, மத்தியில் ஆளும் பாஜக மீதான வெறுப்பு போன்ற பிம்பங்களை நம்பி இருநூறுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றியை எதிர்பார்த்த உங்களுக்கு வேண்டுமானால் திமுக கூட்டணி 159 தொகுதிகளில் மட்டுமே வென்றது ஏமாற்றமளித்திருக்கலாம்.

ஆனால் இதற்கு முன்னர் திமுக தமிழ்நாட்டில் ஆட்சி செய்த காலங்களின் சில கசப்பான அனுபவங்களையும் , மத்தியில் கூட்டணியிலிருந்த சூழல்களில் நடந்த சில நிகழ்வுகளையும் மறக்காத நடுநிலையான வாக்காளர்களின் கண்ணோட்டத்துடன் திமுகவின் அஸ்திவாரமான திராவிட கொள்கைகளை கட்சியினரே மறந்துவிட்ட சூழலையும் கணக்கில் கொண்டால் நீங்கள் பெற்றிருக்கும் இந்த வெற்றி பெருமைக்குரியது தான்.

மு.க.ஸ்டாலின்

மேலும் இந்த வெற்றி, கருணாநிதியின் அரசியல் வாரிசுக்கு கிடைத்த வெற்றியல்ல. காலம் நீண்ட நெடிய ஆண்டுகள் காக்கவைத்தபோதும் களைப்படையாமல் விவேகமான வியூகங்களுடனும், நிதானமான செயல்பாடுகளுடனும் கட்சியை வழிநடத்தி, மக்கள் குறை கேட்க நீண்ட நெடிய பயணங்களை மேற்கொண்ட திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி ! மறைந்த தலைவர்களின் பிம்பங்களை மட்டுமே முன்னிறுத்தி ஓட்டு அரசியல் நடத்திய திராவிட பாரம்பரியத்தில், கட்சி தன் கட்டுப்பாட்டுக்குள் வந்ததிலிருந்து மூத்த தலைவர்களுக்கும் முட்டுக்கட்டை போட்டு, முடிந்த அளவுக்கு சீர்திருத்தங்களும் செய்து இனி முன்பு போல இருக்காது என்ற செய்தியை மக்களிடையே சென்றடைய செய்த ஒரு புதிய தலைமைக்கு கிடைத்த வெற்றி !

ஆட்சி மகுடத்தை உங்களுக்கு அளித்த தமிழக மக்கள், நீங்கள் ஆட்சி செலுத்த வேண்டிய முறைகள் பற்றி மட்டுமல்லாமல் இனி வரும் காலங்களில் உங்கள் கட்சியின் கொள்கைகள் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதற்கான குறியீட்டுச் செய்திகளையும் தேர்தல் முடிவுகளின் மூலம் கொடுத்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. எதிர்க்கட்சி அந்தஸ்தை வென்ற அதிமுக தொடங்கி, சீமான், கமல்ஹாசன், விஜயகாந்த் ஆகியோரின் கட்சிகள் வாங்கிய ஓட்டு சதவிகிதத்தை தெளிவாக புரிந்துக்கொண்டால் மட்டுமே மக்களின் குறியீட்டுச் செய்திகள் விளங்கும் !

ஸ்டாலின்

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வாழ்த்துக்கு சேர்ந்து பணியாற்ற பதிலிட்டது, பதவியேற்பின் போது முன்னாள் துணை முதல்வர் பன்னீர்செல்வத்துடன் தேநீர் அருந்தியது, தவறிழைக்கும் அமைச்சர்கள் மாற்றப்படுவார்கள் என எச்சரித்தது, நிதி விவகாரங்களில் சர்வதேச அனுபவம் கொண்ட பழனிவேல் தியாகராஜனை நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சராக்கியது, அதிமுக அரசு செயல்படுத்திய மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை விட்டுவைத்தது என, வெற்றிபெற்ற நொடியிலிருந்து உங்களின் செயல்பாடுகள் மாற்றத்துக்கான நேரம் வந்துவிட்டது என நீங்கள் அறைகூவியதை நம்பி உங்களுக்கு வாக்களித்த தமிழக மக்களை ஏமாற்றாமல் தான் இருக்கின்றன.

உங்களின் செயல்பாடுகள் அமைச்சர்கள் மட்டத்திலும் அதிகாரிகள் மட்டத்திலும் எதிரொலிக்க தொடங்கி, மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி என்பது மீண்டும் ஒரு முறை நிருபணமாக தொடங்கியிருக்கிறது.

அரசு முத்திரையை மட்டுமே தாங்கிய மக்கள் நல பொருட்கள், அதிரடி விசிட்டுகள், மேட்டூர் அணை திறப்பு ஆலோசனைக்கு டெல்டா விவசாய பிரதிநிதிகளை அழைத்தது என நீங்கள் விளாசும் சிக்ஸர்களை எதிர்பாராத எதிர்க்கட்சியினர் ஆரம்பம் இப்படித்தான் இருக்கும் போக போக பார்ப்போம் என கைகளை தேய்த்தபடி காத்திருக்கிறார்கள் !

நிர்வாகத்தில் மட்டுமல்லாமல், திமுகவின் கொள்கைகள் தொடங்கி தேர்தல் கூட்டணிவரை கடந்த காலங்களில் நிகழ்ந்த தவறுகள் மீண்டும் நிகழாமல் தவிர்த்தால் மட்டுமே மக்களுக்கான நல்லாட்சியை உங்களால் தொடர்ந்து கொடுக்க முடியும். அதற்கு நடந்து முடிந்த தேர்தலின் குறியீட்டுச் செய்திகளை நீங்கள் தெளிவாக புரிந்துக்கொள்ள வேண்டும் !

ஸ்டாலின், கருணாநிதி

க்கள் செல்வாக்கு இல்லாதவர், சந்தர்ப்ப சூழ்நிலையால் பதவிக்கு வந்தவர், பாஜகவின் பொம்மை என்றெல்லாம் வர்ணிக்கப்பட்டு, தேர்தலுக்கு பிறகு காணாமல் போய் விடுவார் என ஆருடம் கூறப்பட்ட எடப்பாடி பழனிசாமி வலுவான எதிர்க்கட்சி தலைவராக உங்கள் முன்னால் அமர்ந்திருக்கிறார். இந்த முறையும் சறுக்கினால் அடுத்த தேர்தலில் வலுவான இந்த எதிர்க்கட்சியிடம் மீண்டும் ஆட்சியை கொடுத்துவிடுவோம் என்ற மக்களின் நேரடியான எச்சரிக்கையில் இன்னும் இரண்டு எச்சரிக்கைகளும் ஒளிந்திருக்கின்றன…

முதலாவது தமிழக அரசியலில் நிழல் மனிதர்களின் ஆதிக்கம். ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைத்ததை கூட ஓரளவுக்கு ஏற்றுக்கொண்ட மக்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியினை, அதிகாரம் இல்லாதவர்கள் ஆள்பவர்களுக்கு பின்னால் கோலோச்சுவதை கொஞ்சமும் விரும்பவில்லை. தேர்தலில் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் முற்றிலுமாய் துடைத்தெறியப்பட்டதிலிருந்தே நீங்கள் இதை உணர்ந்திருப்பீர்கள்.

கடந்த காலங்களில் சென்னையிலிருந்து மதுரைவரை பரந்து விரிந்திருந்த திமுகவின் குடும்ப அதிகாரத்தை நீங்கள் உங்கள் குடும்பத்துக்குள் சுருக்கி விட்டிருப்பதால் மக்கள் எதையும் மறந்துவிடவில்லை. உங்களுக்கான உதவி என்ற எல்லையை மீறி, ஆட்சியின் மீது மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர்களின் நிழல் அதிகாரம் படருமானால் திமுக நிரந்தர வனவாசத்துக்கு போகும் சூழல் ஏற்பட்டுவிடலாம்.

ரண்டாவதாக, முன்னாள் அதிமுக ஆட்சியின் மக்கள் நலத்திட்டங்களை தொடாத அரசியல் நாகரீகம் கொண்ட நீங்கள் எடப்பாடியார் தமிழ்நாட்டுக்கு செய்த ஒன்றினை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்…

ஸ்டாலின்

மீண்டும் ஒரு எம்ஜிஆர் வளர்ந்துவிடக்கூடாது என்ற பயத்தினாலேயே தமிழ் திரைத்துறையை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க இடையறாது உழைத்துக்கொண்டிருந்தார் உங்கள் தந்தை கருணாநிதி. கருப்பு எம்ஜிஆராக மாறிவிடுவாரோ என பதறி போட்ட முட்டுக்கட்டைகளினால் மூச்சு திணறித்தான் விஜயகாந்த் கட்சி ஆரம்பிக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டார் ! கருணாநிதியை தொடர்ந்து ஜெயலலிதாவும் தன் பங்குக்கு தமிழ் திரைத்துறை உலகில் தன் ஆளுமையை அழுந்தப்பதிக்க தொடர்ந்து முயன்றார். இந்த இரு பெரும் அரசியல் சக்திகளின் விளையாட்டு மைதானமாக தமிழ்த்திரையுலகம் மாற்றப்பட்டது.

ஆனால், எடப்பாடி பழனிசாமி ஆட்சி செய்த மூன்றாண்டு காலமும் தமிழ் சினிமா இருந்த இடம் தெரியவில்லை. ஆமாம், ஆட்சியிலிருப்பவரை புகழ்ந்து காது கூசும் புகழ் பரணிகளுடன் நட்சத்திர திருவிழாக்கள் நடக்கவில்லை. நிரந்தர முதல்வர், என்றென்றும் தலைவர் போன்ற போற்றல்களுடன் அடிவருடி பட்டிமன்றங்கள் கூடவில்லை. அந்த விழாக்களுக்கு அரசு இயந்திரம் ஓடி உழைக்கவில்லை.

ஆம், பல்லாண்டுகளுக்கு பிறகு, எடப்பாடியாரின் அந்த மூன்றாண்டுகளில் தமிழ் திரைத்துறை, தமிழ்நாட்டின் மற்ற தொழில்துறைகளை போல இயல்பாக இயங்கியது. இதை குறிப்பிடும் போது மக்கள் உணர்த்திய மூன்றாவது குறிப்பை விளக்க வேண்டும்…

மற்றொரு எம்ஜிஆரை உருவாக்க தமிழக மக்கள் விரும்பவில்லை!

கொம்பு சீவி விட்டதால் கட்சி ஆரம்பித்து கொள்கையே இல்லாமல் குடும்ப அரசியல் நடத்திய விஜயகாந்த்தின் தேமுதிக கட்டெறும்பாக தேய்ந்துவிட்டது. இவருக்கும் முன்னால் கட்சி ஆரம்பித்த டி.ராஜேந்தர் இருக்கும் இடம் தெரியவில்லை. சரத்குமாரின் கட்சி லெட்டர் பேட்டில் மட்டும்தான் நிலைத்திருக்கிறது. ரஜினிகாந்த்தின் ரசிகர்களுக்கு ஈடான அல்லது அந்த எண்ணிக்கைக்கு அடுத்த அளவு ரசிகர்களை கொண்ட கமல்ஹாசனுக்கு அவரது ரசிகர்கள் அனைவரும் வாக்களித்திருந்தாலே பல இடங்களில் டெபாசிட் மிஞ்சியிருக்கும்.

`உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’

ரசிகர்களின் எண்ணிக்கைக்கும் வாக்கு வங்கிக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது என்பதை சிவாஜி கணேசன் காங்கிரசிலிருந்த காலத்திலேயே தமிழக வாக்காளர்கள் தெளிவாக நிருபித்துவிட்டனர்.

ஆகையால், நடிகர்களை அரசியலுக்கு கட்டாயப்படுத்தாதீர்கள். உங்களை நம்பிய கடைசி கைப்பிள்ளை நடிகர் வடிவேலுவாகவே இருந்துவிட்டு போகட்டும்!

திராவிடத்துக்கு மாற்றாக தமிழ் தேசியத்தை முன்வைத்த சீமானுக்கு எட்டு சதவிகித மக்கள் வாக்களித்திருந்தாலும் தமிழ் மண்ணில் பெரியாரின் திராவிடம் நீர்த்துப் போவதை தமிழ் மண் விரும்பவில்லை என்பதை தான் தேர்தல் முடிவுகள் கூறுகின்றன !

தேர்தல் முடிவுக்கு முன்னர் வரையிலும் கூட உங்களின் பேச்சையும் உச்சரிப்பையும் ட்ரோல் செய்தவர்கள் கூட, “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினாகிய நான்” என்ற உங்கள் குரலையும், அந்த பதவியேற்பு காட்சியையும் “பாகுபலியாகிய நான்” ரேஞ்சுக்கு கொண்டாடுகிறார்கள் !

உங்களின் ட்விட்டர் மூலம் பிரபலமான ” from Dravidian stock ” வாசகம், அதனை முதன்முதலாக நாடாளுமன்றத்தில் பேரறிஞர் அண்ணா உபயோகித்த காலத்தில் கூட இந்த அளவுக்கு பேசப்பட்டிருக்குமா என்பது சந்தேகமே.

முதல்வர் ஸ்டாலின்

“திராவிட முன்னேற்ற கழகத்தின் மரபணுக்களோடும் ஒரு நல்ல எதிர்காலத்தை உருவாக்கும் கனவுகளோடும் புதிதாய் பிறந்திருக்கிறோம்… இந்தியா முழுவதும் காவி வர்ணம் பூச நினைக்கும் மோடி அரசுக்கு பாடம் புகட்டுவோம் … பகுத்தறிவு, சமூகநீதி, சுயமரியாதை, சமத்துவம் ஆகிய நான்கு தூண்களில் கட்டமைக்கப்பட்டது திராவிட முன்னேற்ற கழகம்… சுயமரியாதை இல்லாத மாநில அரசையும் சமத்துவத்துத்தையும் சமூகநீதியையும் பகுத்தறிவையும் சிதைக்கக்கூடிய மத்திய அரசையும் பார்க்கும் போது நெஞ்சில் வேதனை தோன்றுகிறது…”

இது நீங்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராய் ஆற்றிய முதல் உரையில் தொடக்கம். ஆனால் நீங்கள் குறிப்பிட்ட அந்த நான்கு தூண்களையும் திமுக மறந்துவிட்டது என்பது தான் நிதர்சனமான உண்மை.

இந்திரா காந்தி அமல்படுத்திய மிசாவின் போதான உங்களின் பங்களிப்பை இன்றைய மூத்த அரசியல் பார்வையாளர்களும் விமர்சகர்களும் கூட மறந்துவிட்டார்கள். மிசாவின் போது கைதாகி, சிறைக்கொடுமைகளை அனுபவித்த வாழும் சாட்சியான உங்களை மக்கள் ஆட்சி செய்ய மட்டும் தேர்ந்தெடுக்கவில்லை, மத்திய அரசின் ஒரு மொழி ஒரு கொள்கை கோட்பாட்டினை தத்துவ ரீதியாக எதிர்க்கும் தலைமையாகவும் தான் தேர்வு செய்திருக்கிறார்கள்.

ஆக, சமூகநீதி சுயமரியாதை சமத்துவம் சார்ந்து பெரியார் பேசியவையும், போராடியவையும் இருட்டடிப்பு செய்யப்பட்டு பகுத்தறிவு சார்ந்த விவாதங்கள் அனைத்தும் கடவுள் மறுப்பு என திட்டமிட்டு திசைதிருப்பப்படும் இன்றைய சூழலில், தமிழகத்தை தத்துவரீதியாக காப்பதற்கான பொறுப்பும் திமுகவை தான் சாரும். இனி திமுக திராவிட கொள்கைகளை செயல்படுத்தும் வியூகங்களை பொறுத்தே இனிவரும் தேர்தல்களில் சீமான் போன்றோரின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் அமையும் !

தேர்தலுக்கு தேர்தல் ஜாதி கட்சிகளை முதுகில் சுமந்து வளர்த்துவிட்ட பொறுப்பு இரு பெரும் திராவிட கட்சிகளையுமே சாரும். கல்வி மற்றும் சமூக வளர்ச்சியின் மூலம் படிப்படியாக ஜாதியை ஒழிக்கும் நோக்கத்தில் பெரியார் முன்வைத்த ஜாதிவாரி இட ஒதுக்கீடு, ஓட்டு அரசியலுக்காக ஜாதி இருப்பு தத்துவமாக மாற்றப்பட்டு, ஜாதியை முன்னிறுத்தியே வாக்காளர்கள் தேர்வு செய்யப்படும் சூழல் உருவாக்கப்பட்டுவிட்டது.

விடுதலை சிறுத்தைகள் இரண்டு பொதுத் தொகுதிகளில் வென்றதும், பாமக பல இடங்களில் மண்ணை கவ்வியதும் மக்கள் கண்மூடித்தனமாக வாக்களிக்க தயாரில்லை என்பதை தான் உணர்த்துகிறது. பெரிய கட்சிகள் தகுதியின் அடிப்படையில் தொடர்ந்து வாக்காளர்களை முன்னிறுத்தினால் நாம் வாழும் காலத்திலேயே ஜாதி அரக்கனை முற்றிலும் ஒழிக்க முடியாவிட்டாலும் முக்கியத்துவம் இல்லாமல் செய்யலாம் என்பதே நிதர்சனமான உண்மை.

திரு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே,

கருணாநிதி அளவுக்கான சொல்லாற்றலும் சாதுரியமும் உங்களுக்கு கிடையாது. “மோடியா லேடியா ?” என சவால்விட்ட ஜெயலலிதாவின் முரட்டு தைரியமும் உங்களிடம் இல்லை. ஆனால் சொல்லாற்றல் இல்லாவிட்டாலும் செயலாற்றலை கொண்டும், வீரத்துக்கு பதிலாக விவேகத்தை கொண்டும் சாதித்த தலைவர்களும் நிறைய உண்டு.

சென்னை மேயராக நீங்கள் செயலாற்றியதை மறக்காமலும், கருணாநிதியின் மறைவுக்கு பிறகு கட்டுக்கோப்பாக கழகத்தை வழிநடத்தி, மக்கள் மன்றத்தில் கண்ணியம் காக்கும் உங்களின் விவேகத்தை நம்பியும் வரலாறு காணாத பெருந்தொற்று பாடாய்ப்படுத்தும் காலத்தில் ஆட்சி பொறுப்பை மக்கள் உங்களிடம் ஒப்படைத்திருக்கிறார்கள்.

கிரீடத்தில் முட்கள் உறுத்துகின்றன. ஆட்சி கட்டிலும் மிகவும் கரடுமுரடானதுதான். ஆனாலும்,

” இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்

ததனை அவன்கண் விடல் “

எனும் குறளில் நம்பிக்கை வைத்து மக்கள் உங்களை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். உங்கள் ஆட்சியின் பாணியும் இந்த குறளை பின்பற்றித்தான் தொடங்கியிருக்கிறது !!

யதாகிவிட்டது என புலம்பியதால் கட்சியின் சில மூத்த தலைவர்களுக்கு நீங்கள் அமைச்சரவையில் இடம் கொடுத்ததாக செய்திகள் வந்தன. நீங்களும் இளைஞரல்ல! அனுபவமும் ஆற்றலும் உச்சம் தொடும் வயதில் உலகின் மூத்த குடிகளில் ஒன்றை வழிநடத்தும் பொன்னான வாய்ப்பை காலம் உங்களுக்கு வழங்கியிருக்கிறது…

இந்த முறை மக்களை ஏமாற்றி விடாதீர்கள்… இனியும் ஏமாறவோ அல்லது இனியொருமுறை மன்னிக்கவோ தயாரில்லை எனும் செய்தியை தேர்தல் கல்வெட்டில் தெளிவாகவே பதித்திருக்கிறார்கள் தமிழக மக்கள்!

இவன்

A Common man from Dravidian stock

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.