2021 ஐபிஎல் சீசன் நடந்தபோது கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டைவிட பாதிப்பு மிகவும் அதிகமாக இருந்தது, இருக்கிறது. குறிப்பாக ஆக்சிஜன் பற்றாக்குறை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. குடும்பத்தினருக்குக் கொரோனா ஏற்பட்டதாலும், பயோபபுள் கொடுத்த மன அழுத்தத்தாலும் ஒருசில வீரர்கள் விலகினார்கள். அதுமட்டுமல்லாமல் பலதரப்புகளிலும் இருந்தும் பல விமர்சனங்கள் எழுந்தன.

அந்த விமர்சனங்களுக்கு மத்தியிலும் தொடர்ந்த தொடர், பபுளுக்குள் இருந்த வீரர்களுக்கு கொரோனா பரவத் தொடங்கியதும் காலவரையின்றி நிறுத்தப்பட்டது. கொல்கத்தா நைட்ரைடர்ஸ், டெல்லி கேபிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் என பல்வேறு அணியின் வீரர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதனால், வீரர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பினார்கள்.

Tim Siefert

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் டிம் செய்ஃபர்ட்டும் ஒருவர். நியூசிலாந்துக்குத் திரும்பிய அவர் தனக்கு கொரோனா பாசிட்டிவ் என்ற செய்தி தெரிவிக்கப்பட்ட தருணத்தில் எந்த அளவு மன அழுத்தம் ஏற்பட்டது என்பதை தற்போது வெளிப்படுத்தியிருக்கிறார்.

“அப்போது எனக்கு லேசாக சளித் தொல்லை இருந்தது. ஆஸ்துமாவால் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால், கொரோனா பாசிட்டிவ் என்ற செய்தியைக் கேட்டதும் மனமுடைந்துவிட்டேன். உலகமே நின்றுவிட்டதுபோல் இருந்தது. அடுத்து என்ன என்பதை என்னால் யோசிக்கவே முடியவில்லை. அதுதான் மிகவும் பயமுறுத்துவதாக இருந்தது. பல கடினமான விஷயங்கள் காதுகளில் விழுந்துகொண்டே இருந்தது. அது எனக்கும் நடக்குமோ என்று அச்சப்பட்டேன். அப்போது இந்தியாவில் ஆக்சிஜன் பற்றாக்குறை மிகப் பெரிய பிரச்னையாக இருந்தது. நானும் அந்த நிலைக்குப் போய்விடுவேனோ என்று நினைத்தேன். கோவிட் பற்றிய புதிர்கள், அதற்கு எப்படி ரியாக்ட் செய்யப்போகிறோம் என்ற அறியாமை அதெல்லாம் என்னை மிகவும் வருத்தியது” என்று கூறிய செய்ஃபர்ட், தன் இன்னல்களைப் பகிர்ந்துகொள்ளும்போதே மனமுடைந்து கண்ணீர் சிந்தினார்.

கொரோனா எந்த அளவுக்கு மக்களிடையே பயத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது என்பது இதிலிருந்தே புரியும். மற்ற நியூசிலாந்து வீரர்கள் சொந்த ஊருக்குத் திரும்பிவிட்ட நிலையில், பாசிட்டிவாக இருந்ததால், செய்ஃபர்ட் இந்தியாவிலேயே இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. அது அவரது மன உளைச்சலை இன்னும் அதிகரித்திருக்கிறது. அதிலிருந்து ஒரு வழியாக மீண்டுவிட்ட செய்ஃபர்ட், இப்போது ஆக்லாந்தில் இருக்கும் ஒரு ஹோட்டலில் குவாரன்டைனில் இருக்கிறார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.