கொரோனா தடுப்பூசியை வீணடிப்பதை கடுமையாக கண்டித்து பேசியிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. மேலும், மாவட்ட நிர்வாகிகளிடம் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகள் பற்றிய தரவுகளை தயாரிக்கவும் அறிவுறுத்தியுள்ளார் அவர்.

இரண்டாவது அலை கொரோனாவில் பலரும் பாதிக்கப்படுவதை தொடர்ந்து, பாதிப்பு அதிகமாக பதிவாகும் மகாராஷ்ட்ரா, கேரளா, உத்தர பிரதேசம், சட்டீஸ்கர், ஹரியானா, ஒடிசா, ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட 11 மாநிலங்களை சேர்ந்த மாவட்ட மாஜிஸ்திரேட்களை வீடியோ வழியாக சந்தித்து பேசினார் பிரதமர் மோடி.

“கொரோனா தடுப்பூசி குப்பிகளை கையாளும் அதிகாரிகள் ஒவ்வொருவரும், மிகமிக கவனமாக அவற்றை கையாள வேண்டும். நாம் மிகவும் இக்கட்டான நிலையில் இருக்கிறோம். ஒரு டோஸை கூட வீணடிக்கக்கூடாது. ஒரு டோஸ் வீணடிக்கப்பட்டாலும், அது ஒரு நபரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது என்பதை நீங்கள் உணரவேண்டும்.

இந்த வைரஸ், அதிவேகமாக தன்னை உருமாற்றிக் கொண்டிருக்கிறது. உருமாறிக் கொண்டே இருக்கும் இதன் தன்மையால், இளம் வயதினரும் குழந்தைகளும் மோசமாக பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக இந்த பி.1.617.2 திரிபு உருமாறிய கொரோனா, இளம் தலைமுறையினரை அதிவேகமாக தாக்கி, மோசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இவர்களை காக்க, அவர்களுக்குள் பரவும் விகிதத்தை நாம் உடனடியாக தடுக்க வேண்டும். அதற்கு அவர்களை நாம் கண்டறிந்து, சிகிச்சையளிக்க வேண்டும். இதற்கு, அவர்களை பற்றிய விவரங்களை இந்தியாவின் அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் சேகரிக்க வேண்டும். தொடர்ந்து அவற்றை ஆய்வுக்கு உட்படுத்தி தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

image

கொரோனாவை தடுக்கும் பேராயுதமான தடுப்பூசிகளுக்கு இப்போது தட்டுப்பாடு நிலவுகிறது. தடுப்பூசி விநியோகிக்கும் மருத்துவ அதிகாரிகள், அவை வீணாகாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். தடுப்பூசி வீணாவதை தடுப்பது கொஞ்சம் கடினமானதுதான் என்றாலும், அதை உறுதிசெய்ய வேண்டியது உங்களின் கடமைதான்.

கொரோனா எனும் இந்த உயிர்க்கொல்லி வைரஸை யாரும் குறைத்து மதிப்பிட்டுவிட வேண்டாம். இதை தடுக்க, புதுப்புது வழிகளையும் முறைகளையும் நாம் யோசித்துக்கொண்டே இருக்க வேண்டும். அதற்கேற்றார் போல செயல்பட வேண்டும்.

கொரோனா பெருந்தொற்றின் போதும் இடைவிடாது சேவையாற்றிய அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும், என் பாராட்டுகள். இந்தக் கொரோனா உங்களின் பணியை அதிகப்படுத்தியுள்ளது. நிறைய சவால்கள் உங்களைக் கொடுத்துள்ளது. சூழ்நிலையை கட்டுப்படுத்த, உங்கள் ஊரில் நிலவும் சூழலை நீங்கள் ஆராய வேண்டும். சிறு நகரங்களிலும் கிராமங்களிலும்தான் கொரோனா அதிகம் பரவுவதை காணமுடிகிறது. அங்கிருக்கும் அதிகாரிகள், கள நிலவரத்தை அறிந்து அதற்கேற்றார்போல செயல்படுங்கள். ஒரு நாடாக இணைந்து, இந்தச் சூழலை நாம் கடக்க வேண்டும்” எனக்கூறியுள்ளார் மோடி.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.