இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையேயான சண்டை நீண்ட காலத்துக்கு பிறகு மீண்டும் வலுக்கத் தொடங்கியுள்ளது. இதற்கான காரணிகளை சற்றே விரிவாக பார்ப்போம்.

உலகை ஒருபுறம் கொன்று கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் போதாது என்பது போல, மேற்கு ஆசியாவில் இப்போது நிலவிவரும் சூழல், சர்வதேச நாடுகளை மேலும் கவலைகொள்ள செய்திருக்கிறது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினருக்கும், ஹமாஸ் போராளிக் குழுவினருக்கும் இடையிலான தொடர்ச்சியான மோதல்களில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலோர் பாலஸ்தீனியர்கள். இஸ்ரேல் – பாலஸ்தீனியர்கள் இடையேயான சண்டை இன்று நேற்று தொடங்கப்பட்டது அல்ல. பல வருடங்களாக நடந்து வருவதுதான். எனினும், இந்தமுறை வன்முறை வெடித்ததற்கு பல்வேறு காரணிகள் முன்வைக்கப்படுகிறது.

கடந்த திங்கட்கிழமை அன்று ஜெருசலேமில் உள்ள அல் – அக்சா மசூதிக்கு வெளியே இஸ்ரேலிய காவல்துறையிருடன் நடைபெற்ற மோதலில் 300-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் காயமடைந்ததே இந்த மோதலின் தொடக்கமாக பார்க்கப்படுகிறது. பல வாரங்களாக தொடர்ந்த இந்த வன்முறையின் அடுத்தகட்டமாகவே துப்பாக்கிச் சூடு அமைந்திருக்கிறது. ஹமாஸின் துப்பாக்கிச் சூட்டைத் தடுக்க இஸ்ரேலிய ராணுவம் இரும்பு டோம் ஏவுகணை அமைப்புகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

image

பதிலுக்கு, 38 மணி நேரத்திற்கும் மேலாக இஸ்ரேல் மீது 1,000-க்கும் மேற்பட்ட கச்சா ராக்கெட்டுகளை வீசப்பட்டுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமைகளில் காசாவில் இரண்டு கோபுரத் தொகுதிகளை அழித்து இஸ்ரேலிய அதிகாரிகள் நூற்றுக்கணக்கான வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். திங்கள்கிழமை முதல் ஏற்பட்ட மோதல்களில் 13 குழந்தைகள் உட்பட 43 பாலஸ்தீனியர்களும், ஆறு இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டுள்ளனர் என்று பிபிசி அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் பணிபுரிந்த கேரளாவைச் சேர்ந்த ஒரு பெண்ணும் இந்த வன்முறையில் கொல்லப்பட்டுள்ளார். அஷ்கெலோன் நகரில் வசித்துவந்த 31 வயதான சவுமியா என்ற அந்தப் பெண் தனது கணவர் சந்தோஷுடன் வீடியோ காலில் பேசிக்கொண்டிருக்கும்போது வீட்டில் ராக்கெட் விழ, அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அல் – அக்சா மசூதி இஸ்லாத்தின் மூன்றாவது புனிதமான தளம். இஸ்லாமியர்களால் ஹராம் அல் ஷெரீப் அல்லது நோபல் சரணாலயம் என்றும் யூதர்களால் கோயில் மவுண்ட் என்றும் அழைக்கப்படுகிறது அல் – அக்சா மசூதி. அல் அக்சாவில் திங்களன்று நடந்த வன்முறைக்கு முந்தைய வாரங்களில், யூதர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையேயான பதற்றங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தன. அதுவே நகரத்தைச் சுற்றி நிகழ்ந்த மோதல்களுக்கும் வித்திட்டன.

சில பாலஸ்தீனியர்கள் பூர்விக யூதர்களை குறிவைத்து தாக்கினர். இந்தத் தருணத்தில் யூதர்கள் குழு ஒன்று ஒரு அணிவகுப்பை நடத்தியது. அதில் பங்கேற்றவர்கள் “அரேபியர்களுக்கு மரணம்” என்று கோஷமிட்டனர். இதனால் கூடுதல் பதற்றம் உருவானது. இந்தச் சூழலில் தான் நோன்பு தொடங்கிய முதல் வாரங்களில் நகரத்தின் பிளாசாவில் கூடிவருவதை காவல்துறை தடைசெய்ய பாலஸ்தீனியர்கள் கோபமடைந்தனர். போதாக்குறைக்கு கிழக்கு ஜெருசலேமின் ஷேக் ஜார்ரா சுற்றுப்புறத்தில் உள்ள பாலஸ்தீனிய குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்ற அச்சம் மேலோங்கி இருந்த நிலையில், போலீஸ் செய்த அடக்குமுறைகளால் மோதல் போக்கு நிலவியது. இதுபோன்ற காரணங்களால் பாலஸ்தீனியர்கள், இஸ்ரேலிய போலீஸாருடன் மோதலை தொடங்க, அதுவே தற்போது நிலவி வரும் போர்ச் சூழலுக்கு காரணமாக அமைந்தது.

அதிகரித்து வரும் மோதலை முடிவுக்கு கொண்டுவர சர்வதேச சமூகம் இரு தரப்பினரையும் வலியுறுத்தி வருகிறது. ஐ.நா.வின் சமாதான தூதர் டோர் வென்னஸ்லேண்ட், “உடனடியாக வன்முறையை நிறுத்துங்கள். முழு அளவிலான போரை நோக்கி வன்முறை செல்கின்றன. அனைத்து பக்கங்களிலும் உள்ள தலைவர்கள் இந்த விளைவுக்கான பொறுப்பை ஏற்க வேண்டும். அமைதியை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருக்கிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.