கொரோனா 3வது அலையில் மக்கள் உயிரிழப்பை தடுக்க வேண்டுமானால், தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கொரோனா 2ஆம் அலை, நாடு முழுவதும் சுனாமியைப் போல் சுழன்றடித்து வருகிறது. இம்முறை எதிர்கொள்ளும் பாதிப்பு இத்தனை தீவிரத் தன்மையுடன் இருக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. கொரோனாவுக்கு எதிரான போரில் முகக் கவசமும், தனிமனித இடைவெளியும் கேடயமாக பார்க்கப்பட்டாலும், தடுப்பு மருந்து என்பதே பேராயுதமாக உள்ளது. அந்த தடுப்பு மருந்து உற்பத்தியில் முன்னோடி நாடாக இருந்த இந்தியா, தற்போது பின்னடைவைச் சந்தித்தும் வெளிநாடுகளிடம் இருந்து பெறும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

அண்டை நாடுகளில் 2ஆம் அலை தீவிரமாக இருந்தபோது, இந்தியாவில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாததே தற்போதைய பாதிப்புகளுக்கு காரணமென குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. அதுமட்டுமின்றி, கையிருப்பில் இருந்த 6 கோடி தடுப்பூசிகளை இந்தியா ஏற்றுமதி செய்ததும் பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. இது பெரும் விவாதத்துக்கு உள்ளான நிலையில், முன்கூட்டியே ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்ததால் ஏற்றுமதி செய்ய வேண்டிய கட்டாயம் இருந்ததாக விளக்கமளித்தன, தடுப்பூசி நிறுவனங்கள்.

image

இந்நிலையில், இந்தியாவின் மிக முக்கியமான இதய சிகிச்சை நிபுணர் தேவி ஷெட்டி, 2வது அலையின் தாக்கத்தை விட 3வது அலையின் தாக்கம் மிக கொடூரமாக இருக்கும் என எச்சரித்துள்ளார். குறிப்பாக, குழந்தைகளை அது பெரிதும் பாதிக்கும் எனக் கூறியிருக்கிறார். இதற்கு தீர்வாக குழந்தைகளின் பெற்றோர்களுக்கு உடனடியாக தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்றும் அவ்வாறு செலுத்தாவிடில் நிலைமை மிகவும் விபரீதமாகிவிடும் என மருத்துவர் தேவி ஷெட்டி எச்சரித்துள்ளார்.

தற்போது பாரத் பயோடெக் மற்றும் சீரம் நிறுவனங்கள் மாதத்திற்கு 6 முதல் 7 கோடி வரை மட்டுமே தடுப்பூசிகளை உற்பத்தி செய்கின்றன. இதேநிலை நீடித்தால் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த இன்னும் 3 ஆண்டுகள் ஆகும். அதற்குள் 3வது, 4வது அலையில் மக்கள் உயிரிழந்திருப்பார்கள் என அச்சம் தெரிவிக்கிறார் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால். மேலும், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து கோவாக்சின், கோவிஷீல்டு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து வேறு தடுப்பூசிகள் இறக்குமதி செய்யவும் தமிழகத்தில் செங்கல்பட்டு, ஊட்டி தடுப்பூசி உற்பத்தி மையங்களுக்கு மத்திய அரசு உடனடியாக அனுமதி வழங்கவும் தமிழக முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தேவைப்பட்டால் அவசரகாலச் சட்டத்தை பயன்படுத்தி தடுப்பூசி உற்பத்திக்கான பணிகளை விரைந்து எடுக்க வேண்டும் இல்லையென்றால் கொரோனாவை கட்டுப்படுத்துவது இயலாத காரியமாகிவிடும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.