கொரோனா தொற்றுநோய், இந்திய நகரங்களில் வாழும் ஏழை மக்களை மேன்மேலும் ஏழைகளாகவும் பசியாலும் தவிக்க வைப்பதாக சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. பொதுவாக, ஊர்ப்புறங்களில் வாழும் ஏழை மக்கள்கூட, நகர்ப்புறங்களுக்கு பிழைப்பு தேடி வருவது இந்தியாவில் பல காலமாக நடைபெறுகின்றது. அதற்குக் காரணம், நகரங்களில் ஏதாவதொரு வேலை கிடைக்கும்; அதன்மூலம் தங்கள் குடும்பத்தாரின் பசியைத் தீர்க்க ஒரு வழி கிடைக்கும் என்று நம்பினார்கள்.

ஆனால், இப்போது நிகழ்ந்துள்ள கொரோனா பெருந்தொற்றுப் பேரிடரில் கிராமப்புறங்களில்கூட மக்கள் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் பேரிடர்க்கால பொருளாதாரச் சிக்கலை ஓரளவுக்குச் சமாளிக்கின்றனர்.

Representational Image

ஆனால், நகர்ப்புற மக்கள் இதுபோன்ற வாய்ப்புகள் எதுவுமின்றி, மிகப்பெரிய சிக்கலுக்கு ஆளாகிவருகின்றனர் என்று ஹங்கர் வாட்ச் (Hunger Watch) என்ற அமைப்பு சமீத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.

பல்வேறு சமூக அமைப்புகளின் கூட்டமைப்புதான் ஹங்கர் வாட்ச். இந்திய நகர்ப்புறங்களில் பசி, உணவுத் தேவையின் பூர்த்தி, வாழ்வாதாரம் ஆகியவற்றைப் பற்றி இந்தக் கூட்டமைப்பு ஆய்வு செய்தது. குறிப்பாக, 2020-ம் ஆண்டின் ஊரடங்கு காலகட்டத்தில், இந்திய நகரங்களில் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்ந்த மக்களுடைய நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. 11 மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 4,000 குடும்பங்களிடம் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல் மூலம் இந்த அறிக்கைக்கான தரவுகள் கிடைத்துள்ளன. அக்டோபர் 2020-ம் ஆண்டுவரை இந்தத் தரவுகள் சேகரிக்கப்பட்டு, ஊரடங்குக்கு முந்தைய காலகட்டத்தில் அதே அளவுகோல்களோடு சேகரிக்கப்பட்ட தரவுகளோடு ஒப்பிட்டு பகுப்பாய்வு செய்தனர்.

இந்தப் பகுப்பாய்வில், ஊர்ப்புறங்களில் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் மக்களைவிட, நகர்ப்புறங்களில் 15 சதவிகிதம் அதிகமான ஏழை, எளிய மக்கள் மோசமான சூழ்நிலையில் சிக்கியது தெரியவந்துள்ளது. நகர்ப்புற மக்களுடைய வருமானம் பாதியாகக் குறைந்திருக்கிறது. நகர்ப்புற ஏழை மக்களில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் வருமானமே இல்லாமல் தவிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். மேலும், தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை எடுத்துக் கொள்ளும் மக்களின் அளவு 12 சதவிகிதம் குறைந்துவிட்டது. இதன்மூலம், வேலையின்மை, பசி, வறுமையோடு சேர்த்து ஊட்டச்சத்துக் குறைபாட்டையும் நகர்ப்புற ஏழை மக்கள் சந்திப்பது தெரியவந்துள்ளது.

Representational Image

வருமானம் பாதியாகக் குறையும்போது, குடும்பத்தின் பசியைத் தீர்க்க, வேறு வழியின்றி கடன் வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். அதனால், உணவுக்கு வழி செய்வதில் மட்டுமே அவர்களின் கவனம் இருந்துள்ளது. ஊட்டச்சத்து குறித்து கவலைப்படும் நிலையில் அவர்கள் இல்லை.

இப்படி கடன் வாங்கித்தான் தன் குடும்பத்தின் பசியைப் போக்க முடியும் என்ற நிலைக்கு நகர்ப்புற ஏழைகளில் 54 சதவிகித மக்கள் தள்ளப்பட்டனர். கிராமங்களில் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்ந்த மக்களில் இந்த விகிதம் இதைவிட 16 சதவிகிதம் குறைவாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அக்டோபர் 2020 கணக்குப்படி, கிராமப்புறங்களில் சுமார் 45 சதவிகித குடும்பங்கள், தங்களின் உணவுத் தேவை தடைப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, அன்றாட உணவில் ஒருவேளை உணவை நிறுத்திக் கொண்டனர். இதுவே, நகர்ப்புற ஏழைகளில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் ஒரு மாதம் முழுக்க உணவு கிடைப்பதற்காக, தினசரி ஒருவேளை உணவு இன்றி வாழத் தொடங்கினார்கள்.

ரேஷன் கடைகளில் கிடைக்கக்கூடிய பொருள்களைப் பெற்று பொது விநியோகத் திட்டத்தின் கீழ் உணவுச் சிக்கலின்றி வாழ்வது கிராமங்களில் ஓரளவுக்கு எளிமையாக இருந்ததும் நகரங்களில் இருந்த அளவுக்கு பசியால் மக்கள் வாடாமல் இருந்ததற்கு ஒரு முக்கிய காரணம். நகர வாழ் மக்கள் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டதற்கும், இத்தகைய வசதிகள் இவர்களுக்கு முழுமையாகக் கிடைக்காததே முக்கிய காரணம் என்று இந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

“நகர்ப்புற மக்கள் எதிர்கொள்ளும் இந்தச் சிக்கலைக் கருத்தில் கொண்டு, மத்திய பட்ஜெட்டில் நகர்ப்புற வேலைவாய்ப்பு மற்றும் உணவு மானியங்களுக்கான திட்டம் கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதிலும் இந்த மக்களுக்கு மத்திய அரசு ஏமாற்றத்தையே பரிசளித்துள்ளது” என்று அந்த அறிக்கை கூறுகிறது.

Representational Image

அதோடு, மக்களின் உணவுத் தேவை பூர்த்தியாவதிலோ, வேலைவாய்ப்புகளுக்கு வழி செய்வதிலோ எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் போனதால், பசி, உணவுப் பாதுகாப்பின்மை ஆகியவை தீவிரமடைந்ததே ஒழிய குறையவில்லை. ஹங்கர் வாட்ச் அமைப்பு 4,000 குடும்பங்களிடம் மேற்கொண்ட நேர்காணலில் மூன்றில் இரண்டு பங்கு குடும்பங்கள், 2020-ம் ஆண்டு ஊரடங்கின்போது எடுத்துக்கொண்ட உணவு அளவு, அதற்கு முந்தைய ஆண்டு எடுத்துக்கொண்ட உணவு அளவைவிட மிகவும் குறைவு என்பதும் தெரியவந்துள்ளது.

அதிலும் குறிப்பாக, வறுமைக் கோட்டுக்குக் கீழேயுள்ள, பொருளாதாரச் சுமையைத் தனியாகச் சுமக்கும் பெண்களால் வழிநடத்தப்படும் குடும்பங்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ள குடும்பங்கள், கவனித்துக்கொள்ள யாருமின்றித் தவிக்கும் முதியவர்கள் ஆகியோரின் நிலைமை மற்றவர்களுடைய நிலையைவிடவே மிகவும் மோசமானது. உதாரணத்துக்கு, கவனிக்க ஆளின்றி தனியே வாழும் முதியவர்களில் 58 சதவிகிதம் பேர், இரவு நேரத்தில் சாப்பிட ஏதுமின்றி பசியோடுதான் உறங்கச் செல்ல வேண்டியிருந்தது. ஒற்றையாகச் சமாளிக்கும் பெண்களை நம்பியுள்ள ஏழைக் குடும்பங்களில் 56 சதவிகித வீடுகளிலும் மாற்றுத்திறனாளிகளைக் கொண்ட 44 சதவிகித வீடுகளிலும் இதுதான் நிலைமை.

ஒரு நாளின் ஏதாவதொரு வேளை உணவையாவது தியாகம் செய்தாக வேண்டிய நிலைமைக்கு பெரும்பான்மை ஏழை மக்கள் தள்ளப்பட்டதால், பசியோடிருப்பவர்களின் எண்ணிக்கை பெரியளவில் உயர்ந்தது. தினசரி மூன்று வேளை உணவு கிடைப்பதில் பெரிய சிக்கலின்றிச் சமாளித்துக்கொண்ட ஏழை மக்களிலும்கூட, 27 சதவிகிதம் பேர் ஒரு மாதத்தில் சில நாள்களையாவது பசியோடு கழித்தாக வேண்டியிருந்தது. இந்தக் கணக்கு, கொரோனா ஊரடங்குக்கு முன்னர் வரையிலும் 10 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 2019-20 தானிய உற்பத்தி 296.65 மில்லியன் டன்கள். அதற்கு முந்தைய ஆண்டில் இந்தியாவின் தானிய உற்பத்தி 291.1 மில்லியன் டன்கள். முந்தைய ஆண்டைவிட 4 சதவிகித உற்பத்தி அதிகரித்திருந்தும் கூட, மக்களின் பசியைப் போக்குவது பெரும் சிக்கலாகவே இருந்துள்ளது.

வறுமை / Representational Image

தேசிய குடும்பநல கணக்கெடுப்பு (National Family Health Survey) தரவுகளின்படி, ஊட்டச்சத்துக் குறைபாடு பெரும் பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. குழந்தைகள் மற்றும் பெண்களிடையே, நோய் எதிர்ப்பாற்றல் இல்லாமை அதிகரித்துள்ளது. இந்தக் கணக்கெடுப்பு, கொரோனா பேரிடருக்கு முன்னால், 2019-ம் ஆண்டில் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து வந்த பேரிடர் காலகட்டத்தில் இந்த நிலைமை மேலும் மோசமடைந்திருப்பதை, ஹங்கர் வாட்ச் அமைப்பின் அறிக்கை காட்டுகிறது. இதன்விளைவாக, வேறு வழியின்றி குடும்பத்தின் அன்றாடத் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ள குழந்தைகளையும் வேலைக்கு அனுப்பியாக வேண்டிய கட்டாயத்துக்கு நகர்ப்புற ஏழைக் குடும்பங்கள் தள்ளப்படுகின்றன.

இவர்கள் மட்டுமன்றி, 2020-ம் ஆண்டு தொடங்கிய பொருளாதார நெருக்கடி காரணமாக லட்சக்கணக்கான மக்கள் வேலையிழந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் இன்றுவரை வேறு வேலை கிடைக்காமல் தங்கள் வாழ்வாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். அரசாங்கம், இந்த நெருக்கடியில் இதுவரை வேலையிழந்தவர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

Representational Image

கொரோனாவுக்கு முன்னரே, மிகவும் ஏழ்மையில் வாடிக் கொண்டிருந்த குடும்பங்கள், தற்போது வருமானக் குறைப்பு, வருமானமே இல்லாமை, ஆகிய பிரச்னைகளால் மேன்மேலும் மோசமான நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஒரு தொற்றுநோய் பேரிடராக உருவெடுக்கும்போது, அது ஆரோக்கியம் சார்ந்த பிரச்னைகளை மட்டுமே கொண்டுவருவதில்லை. அதனால் ஏற்படும் பொருளாதார நெருக்கடி, மிகப்பெரிய சமூகக் குலைவையே உண்டாக்குகிறது. அரசு அதன் மீதும் கவனம் செலுத்தி, மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தாக வேண்டும். இந்திய அரசு இதுவரை அதைத் தவறவிட்டுவிட்டது. இனியேனும், இதில் கவனம் செலுத்தி மக்களின் இயல்புநிலையை மீட்டெடுக்க வேண்டும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.