சட்டமன்ற கட்சி தலைவர்களின் கூட்டம்  தொடங்கியது

கொரோனா குறித்து ஆலோசனை நடத்த அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்களின் கூட்டம் தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் தொடங்கியது.

முதலமைச்சர் ஸ்டாலின் கூட்டத்துக்கு தலைமை வகிக்கிறார். தி.மு.க சார்பில் டி.ஆர்.பாலு எம்.பி, ஆர்.எஸ்.பாரதி எம்.பி பங்கேற்றனர். அ.தி.மு.க சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்பர் என்று கருதப்பட்டது. ஆனால், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வேடசந்தூர் பரமசிவம் ஆகியோர் அ.தி.மு.க சார்பில் பங்கேற்றிருக்கின்றனர்.

`நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை மரணம்.’

சீமானின் தந்தை மரணம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் இன்று அரணையூரில் காலமானார். நாம் தமிழர் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் செய்தியைப் பகிர்ந்துள்ளனர்.

ம.நீ.ம வில் இருந்து சந்தோஷ் பாபு விலகல்!

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிட்ட சந்தோஷ் பாபு தற்போது அக்கட்சியில் இருந்து விலகி உள்ளார். இது தொடர்பாக அவர் தனது, ட்விட்டர் பதிவில், “நான் எனது பதவியிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் ராஜினாமா செய்கிறேன் என்பதை நான் உங்களுக்கு தெரிவிக்கிறேன். எனது முடிவு தனிப்பட்ட காரணங்களால் எடுக்கப்பட்ட முடிவு. கமல்ஹாசன் மற்றும் எங்கள் குழுவினரின் அன்புக்கும் நட்பிற்கும் நன்ற” என குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் சில மாவட்டங்களுக்கு நாளை மறுநாள் ‘ரெட் அலர்ட்’:

தமிழகத்தில் நாளை மறுநாள் அதி கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் வானிலை மையம் ‘ரெட் அலர்ட்’ கொடுத்திருக்கிறது. தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி மாவட்டங்களில் நாளை மறுநாள் அதி கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெவித்திருப்பதால், அந்த மாவட்டங்களுக்கு நாளை மறுநாள் ‘ரெட் அலர்ட்’ அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதால், அடுத்த ஐந்து நாள்களுக்கு மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

13 லட்சம் தடுப்பூசிகள்!

கோவிஷீல்டு – கோவாக்ஸின்

தமிழகத்துக்கு அடுத்த இரண்டு நாள்களில் கூடுதலாக 13 லட்சம் தடுப்பூசிகள் கொண்டுவரப்படவுள்ளன. 11.4 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 1.6 லட்சம் கோவாக்ஸின் தடுப்பூசிகளும் கொண்டு வரப்படவிருக்கின்றன எனத் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அரபிக் கடலில் உருவானது குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை ஒட்டிய லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது, இது மேலும் வலுப்பெற்று புயலாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!

கோவிஷீல்டு இரண்டாம் டோஸ்! – பரிந்துரை

கோவிஷீல்டு

கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸுக்கும் இரண்டாம் டோஸுக்கும் தற்போது நடைமுறையில் உள்ள 6 முதல் 8 வார இடைவெளியை 12 முதல்16 வாரமாக மாற்ற தடுப்பூசி குறித்த தேசிய தொழில்நுணுக்க ஆலோசனைக்குழு பரிந்துரைத்துள்ளது.

கோவாக்ஸின்: 2 – 18 வயதினருக்கு, 2, 3-ம் கட்ட பரிசோதனை!

கோவாக்ஸின்

கோவாக்ஸின் தடுப்பூசியை 2 – 18 வயதினருக்கு 2, 3-ம் கட்ட பரிசோதனை செய்திட மருந்துக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. மத்திய மருந்து மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று இந்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது. தடுப்பூசியின் 2 மற்றும் 3-ம் கட்ட பரிசோதனை 525 தன்னார்வலர்களிடம் நடத்தப்படவிருக்கிறது.

பாய்லர் வெடித்த விபத்து!

கடலூர் சிப்காட் ரசாயன ஆலையில் பாய்லர் வெடித்த விபத்தில் மூன்று பேர் பலியாகியுள்ளனர். விபத்தில் படுகாயமடைந்த 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 3,62,727 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக, இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 2,37,03,665 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

கொரோனா மரணம்

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 4,120. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 2,58,317-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 1,97,34,823 -ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 37,10,525 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 3,52,181 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை 17,72,14,256 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

ஸ்டெர்லைட்: தொடங்கியது ஆக்ஸிஜன் விநியோகம்!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் கடுமையாக அதிகரித்துவந்த நிலையில், நாட்டின் பல பகுதிகளில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடும் ஏற்பட்டது. இந்தநிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதைக் கண்காணிப்புக்குழு கண்காணிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆக்ஸிஜன் – ஸ்டெர்லைட்
ஆக்ஸிஜன் – ஸ்டெர்லைட்
ஆக்ஸிஜன் – ஸ்டெர்லைட்
ஆக்ஸிஜன் – ஸ்டெர்லைட்

இந்தநிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் நேற்று இரவில் ஆக்ஸிஜன் உற்பத்தி தொடங்கியது. முன்னதாக கண்காணிப்புக் குழுவினர் ஆலையில் ஆய்வு செய்தனர். ஆக்ஸிஜனை வெளியில் கொண்டு செல்வதற்கு வசதியாக டேங்கர் லாரிகளும் ஸ்டெர்லைட் ஆலைக்குக் கொண்டு வரப்பட்டன. இன்று காலை ஆலையில் தயாரிக்கப்பட்ட ஆக்ஸிஜனை மருத்துவமனைகளுக்கு அனுப்பும் பணி தொடங்கியுள்ளது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.