தமிழக அரசின் புதிய தலைமைச்செயலாளராக நியமிக்கப்படிருக்கும், மூத்த ஐஏஎஸ் அதிகாரியாக வெ.இறையன்பு நியமிக்கபப்ட்டிருக்கிறார். ஐ.ஏ.எஸ் அதிகாரி, எழுத்தாளர், தன்னம்பிக்கை பேச்சாளர், இலக்கியவாதி, சமூக சேவகர் என பன்முகம் கொண்ட இறையன்பு ஐஏஎஸ் கடந்து வந்த பாதையில் ஒரு ரீகேப்.

தமிழ்க் குடும்பம் :

சேலம் மாவட்டம் காட்டூர் கிராமத்தில் 1963-ம் ஆண்டு செப்டம்பர் 16-ம் நாள் வெங்கடாசலம் – பேபி சரோஜா இணையருக்கு நான்காவது மகனாகப் பிறந்தார் இறையன்பு. இவருக்கு திருப்புகழ் என்ற சகோதரரும், பைங்கிளி, இன்சுவை ஆகிய இரு சகோதரிகளும் உள்ளனர். சகோதரர் திருப்புகழ், குஜராத் மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றியவர். தற்போது, மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகராக உள்ளார். சகோதரிகள் இருவருமே பேராசிரியர்கள்.

கல்விக் கதம்பம்:

தனது பள்ளிக் கல்வியை சேலம் ஶ்ரீ ராமகிருஷ்ணா சாரதா மேல்நிலைப் பள்ளியில் முடித்தார். அதன்பின்னர், கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை வேளாண்மை பட்டப்படிப்பில் சேர்ந்து முதல் இடத்தில் தேர்ச்சி பெற்றார். சிறுவயதிலேயே படிப்பாளியாக விளங்கியவர், கற்றலின்மீது கொண்ட அதீத ஆர்வத்தினால் உளவியல், ஆங்கிலம், வணிக நிர்வாகம், தொழிலாளர் நிர்வாகம் உள்ளிட்ட நான்கு துறைகளில் படித்து முதுகலை பட்டம் பெற்றார். அதுமட்டுமில்லாமல், ஆங்கில இலக்கியம் மற்றும் வணிக நிர்வாகத்தில் ஆராய்ச்சி மேற்படிப்பான முனைவர் பட்டத்தையும், மேலாண்மையில் எம்ஃபில் பட்டத்தையும் பெற்றுள்ளார். மேலும், இந்தி மொழியில் “ப்ரவீன்” சமஸ்கிருதத்தில் “கோவிதஹா” உள்ளிட்ட பட்டங்களையும் பெற்றுள்ளார்.

இறையன்பு

ஐஏஎஸ் முதலிடம்:

இறையன்பு முதல்முறையாக குடிமைப் பணித்தேர்வை எழுதியபோது இந்திய அளவில் 227-வது இடத்தைப் பிடித்து ஐ.ஆர்.எஸ் பதவிக்கு தேர்ச்சி பெற்றார். இதில் சமாதானம் ஆகாதவர் ஐஏஎஸ் என்ற ஒற்றைக் கனவோடு முழுவீச்சில் தனது கவனத்தை படிப்பு – பயிற்சி மீது மட்டுமே செலுத்தினார். அதன்விளைவாக, 1987-ம் ஆண்டு நடைபெற்ற குடிமைப் பணித்தேர்வில், அகில இந்திய அளவில் 15-வது இடத்தையும், தமிழக அளவில் முதல் இடத்தையும் பெற்று சாதனை புரிந்தார்.

ஆட்சியராக சிறப்பிடம்:

நாகப்பட்டினம் மாவட்ட உதவி ஆட்சியராக முதற்பணியில் இணைந்த இறையன்பு, மாவட்ட பிரிப்பு, வெள்ள நிவாரணம் வழங்கல், சிலிக்கான் மற்றும் ஆற்றுமணல் கடத்தலை தடுத்தல், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை ஒழுங்குபடுத்தி நெல் மூட்டைகள் கடத்தலுக்கு முற்றுப்புள்ளி வைத்தல் என பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வெற்றிகண்டார். குறிப்பாக, நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தல்கள், நாகூர் தர்காவின் கந்தூரி திருவிழா, விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் என அனைத்து நிகழ்விலும் எவ்வித சிறு அசம்பாவிதங்களும் நடைபெறாத வண்ணம் நேரடியாக களத்தில் இறங்கி இரவு பகலாக வேலை செய்தார்.

Also Read: உதயச்சந்திரன் முதல் அனு ஜார்ஜ் வரை.. முதல்வரின் தனிச் செயலாளர்கள்! – ஒரு பார்வை

கடலூர் மாவட்ட கூடுதல் ஆட்சியராக இருந்தபோது, கடலூர் மத்திய சிறைச்சாலை கைதிகளுக்கு தொழிற்பயிற்சி அளித்து, அவர்கள் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடாதவாறு நிலைமையை மாற்றியமைத்தார். பொது இடங்களில் மரம் நடுதல், தேக்கு மற்றும் முந்திரி தோட்டங்கள் அமைத்தல், புகையில்லா கிராமங்களை உருவாக்குதல் போன்ற ஏராளமான திட்டங்களை செயல்படுத்தினார். குறிப்பாக, தமிழகத்திலேயே முதன்முறையாக பெண்களுக்கு ஆட்டோ ஓட்டும் பயற்சி வழங்கப்பட்டது. மேலும், நரிக்குறவர் சமுதாய மக்களை முன்னேற்றும் விதமாக, அவர்களுக்கு தொகுப்பு வீடுகள் வழங்கல், சொந்தமாக கோழிப்பண்ணைகள் அமைத்தல், தொழிற்கடன் வழங்கல் உள்ளிட்ட முதன்மையான திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, பட்டுத்தறிக் கூடங்களில் வேலைசெய்து வந்த குழந்தைத் தொழிலாளர்களை மீட்டெடுத்து, நிலவொளிப் பள்ளிகளின் மூலம் அவர்கள் கல்விகற்க ஏற்பாடு செய்தார். பள்ளிகள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், கோவில் குளங்கள் என அனைத்தும் மறுசீரமைப்பு செய்யப்பட்டன.

இப்படி மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய இடங்களில் பல்வேறு மக்கள் நலப்பணிகளையும், மறுமலர்ச்சி திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி அந்தந்த மாவட்ட மக்களின் மனதில் நன்மதிப்பைப் பெற்றவர்.

பல்வேறு பொறுப்புகள்:

கருணாநிதி ஆட்சிக்காலத்தில் முதலமைச்சரின் கூடுதல் செயலாளராக இருந்தபோது, உழவர் சந்தை அமைத்தல், கால்நடை பாதுகாப்புத்திட்டம், மதிய உணவுத்திட்டத்தில் அயோடின் கலந்த உப்பு பயன்படுத்துதல், மாநிலம் முழுவதும் பாலங்கள் மற்றும் சாலைகள் அமைத்தல் போன்ற திட்டங்கள் விரைந்து செயல்பட்டு முடிக்க முக்கியக் கருவியாக இருந்தவர் இறையன்புச்.

சுற்றுலா மற்றும் பண்பாட்டுத்துறை செயலாளராக இருந்தபோது, சுற்றுலா நட்பு வாகனம், பூங்காக்கள் அமைத்தல், விருந்தினர் போற்றுதும் விருந்தினர் போற்றுதும், எங்கும் ஏறலாம் எங்கும் இறங்கலாம் வாகனத்திட்டம், சுற்றுலாக் காவலர் திட்டம் போன்ற எண்ணற்ற புதுமையான திட்டங்களை அறிமுகப்படுத்தினார். இவரது பணிக்காலத்தில், அகில இந்திய அளவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு முதலிடம் வகித்தது.

இதுமட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை, அண்ணா மேலாண்மை நிலையம், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை, தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் போன்ற துறைகளில் முதன்மைச் செயலாளர் போன்ற தலைமைப் பொறுப்புகளில் பணிபுரிந்து அந்தந்த துறைகளில் எண்ணற்ற வளர்ச்சித்திட்டங்களை செயல்படுத்திக் காட்டியிருக்கிறார்.

1995-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில், தஞ்சாவூரில் நடத்தப்பட்ட 8-வது உலகத்தமிழ் மாநாட்டின் தனி அலுவலராக நியமிக்கப்பட்டார். உலகத் தமிழர்கள் அனைவரும் திரும்பிப்பார்க்கும் அளவிற்கு கலைநயத்துடன் மிகப்பெரிய அளவில் வெற்றிகரமாக நடத்திக் கொடுத்தார். அதேபோல், 2010-ம் ஆண்டு கருணாநிதி ஆட்சிக்காலத்தில், கோவையில் நடத்தப்பட்ட உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டிலும் சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டு, சிறப்பான முறையில் மாநாட்டை நடத்திக்காட்டினார்.

இறுதியாக, 2019-ம் ஆண்டு மார்ச் 1 முதல் 2021, மே முதல் வாரம் வரை அண்ணா மேலாண்மை நிலையத்தின் இயக்குநராக பணிபுரிந்து வந்தார். அமைந்திருக்கும் புதிய அரசின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அரசுப் பணியில் அவரது செயல்பாடுகள், எழுத்தாளராக சமூக அக்கறை இவை இரண்டும், தலைமைச் செயலாளர் இறையன்பு மீது தமிழக மக்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Also Read: பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்: ‘சிங்கப்பூரில் வங்கியின் எம்.டி; தமிழக அரசின் கடனை சமாளிப்பாரா?!’

பன்முகத்திறமையின் வழித்தடம்:

இறையன்பு ஒரு சிறந்த நிர்வாக அதிகாரி மட்டுமல்ல, அவர் ஒரு தலைசிறந்த படிப்பாளியும், படைப்பாளியும் கூட. தன்னம்பிக்கை பேச்சாளர், புத்தக எழுத்தாளர், சிறந்த கட்டுரையாளர், சிறுகதை ஆசிரியர், கவிஞர், கல்வியாளர், அரசுத்தேர்வு வழிகாட்டியாளர் என பன்முகத்திறன் வாய்ந்த படைப்பாளர். இதுவரையில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான மேடைகளில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றியிருக்கிறார். மேலும், பல பத்திரிகைகளில் தன்நம்பிக்கை தொடர்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என தனது சமூக பங்களிப்பை அனைத்து இடங்களிலும் தொடர்ந்து நடத்திக்கொண்டே இருக்கிறார்.

இலக்கியத்தில் தனியிடம்:

இவரின் பன்முகத்திறமையில், இலக்கியத் துறைக்கு மிக முக்கிய இடமுண்டு. படிப்பது சுகமே, அச்சம் தவிர், போர்த்தொழில் பழகு, ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும், உள்ளொளிப் பயணம் என நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். ஐம்பதுக்கும் மேலானோர் இவரின் புத்தகங்களை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.

இவர் எழுதிய “வாய்க்கால் மீன்கள்”என்ற கவிதைத் தொகுப்பு தமிழக அரசின் விருதினை வென்றது. மேலும் ஆத்தங்கரை ஓரம், பத்தாயிரம் மைல் பயணம் , திருக்குறள், புறநானூறு குறித்த ஆய்வுக்கட்டுரைகள் என பலவும் பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் வென்றிருக்கிறது. மேலும் சிறப்பாக, இறையன்பு தனது புத்தகங்கள் மூலம் கிடைக்கும் உரிமைத்தொகை, பரிசுத்தொகை போன்ற வருவாயை நிலவொளிப்பள்ளிகள், ஆதிதிராவிடர் நலத்துறையின் மாணவர் விடுதிகள், புற்றுநோய் மருத்துவமனைகள் போன்றவற்றுக்கு முழுமையாக கொடுத்து, தனது அரசுப்பணிகளுக்கும் அப்பாற்பட்டு தனிப்பட்ட சேவைகளிலும் மக்கள் மனம் புரிந்தவராகவும் கவர்ந்தவராகவும் திகழ்கிறார்.

தமிழக அரசின் தலைமைச் செயலாளர்:

2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க வெற்றிபெற்று, மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றிருக்கிறார். இந்நிலையில், அவர்கொண்டுவந்த பல்வேறு அதிரடி நடவடிக்கையின் காரணமாக, அண்ணா மேலாண்மை நிலைய இயக்குநராக இருந்துவந்த இறையன்பு, தற்போது தமிழ்நாடு அரசின் தலைமைச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அப்போது, மு.க.ஸ்டாலினை சந்தித்த இறையன்பு, சால்வைக்கு பதில், தான் எழுதிய “வையத் தலைமை கொள்” என்ற நூலை பரிசளித்தார்.

மேலும், எந்த வகையிலும், தன் பெயரோ, பதவியோ தவறாகப் பயன்படுத்தப்படக் கூடாது என்று கூறி, தனது நூல்களை அரசு செலவிலோ, சொந்த செலவிலோ விநியோகம் செய்ய வேண்டாம் என பள்ளிக்கல்வித் துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவ்வாறு, தன் பொதுவாழ்வின் தொடக்கம் முதல் தற்போது வரையிலும் எந்தவொரு குற்றச்செயல்களுக்கும், விமர்சனங்களுக்கும் ஆட்படாமல், நேர்மையான தனித்துவமான அதிகாரியாக வலம் வரும் இறையன்பு ஐஏஎஸ், தமிழக அரசின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டதற்கு கட்சி பேதங்களின்றி அனைத்து அரசியல்வாதிகள், ஆலோசகர்கள், சமூகசெயற்பாட்டாளர்கள் என அனைத்துதரப்பட்ட தமிழக மக்களும் பெரும் வரவேற்பைத் தந்துள்ளனர். இந்திய துணைக் கண்டத்தில், தமிழகத்துக்கான மாநில உரிமைகளை காப்பது பெரும் போராட்டாமாகிப் போன இந்த அரசியல் சூழ்நிலையில், தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் இறையன்பு ஐ.ஏ.எஸ் மீது எதிர்பார்ப்பு அதிரித்திருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.