சமூக ஊடகப் பரப்பில், வீடியோ வழி பகிர்வுகள் கோலோச்சிக் கொண்டிருக்கும் நேரத்தில், இப்போது ஆடியோ பகிர்வு சேவைகளும் அறிமுகமாகி பிரபலமடைந்து வருகிறது.

சமூக வலைப்பின்னல் சேவைகளை பொறுத்தவரை இப்போது ‘ஒலி’மயமான எதிர்காலம்தான் போலிருக்கிறது. அடுத்தடுத்து அறிமுகம் ஆகி வரும், ஒலி வடிவில், நட்பு வளர்த்துக்கொள்ள வழி செய்யும் சமூக ஊடக சேவைகளைப் பார்த்தால் இப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது.

இந்த வரிசையில், ‘பயர்சைடு’ எனும் இந்திய செயலி அறிமுகம் ஆகியிருக்கிறது. ‘பயர்சைடு’ பற்றி பார்ப்பதற்கு முன் முதலில் ‘கிளப்ஹவுஸ்’ பற்றி அறிமுகம் செய்துகொள்வது நல்லது. கிளப்ஹவுசை சமூக ஊடகப் பரப்பை மாற்றி அமைத்த செயலி எனலாம். சமூக ஊடகப் பரப்பில், வீடியோ வழி பகிர்வுகள் கோலோச்சிக் கொண்டிருந்த நிலையில், ‘கிளப்ஹவுஸ்’ ஆடியோ பகிர்வு சேவையாக அறிமுகம் ஆகி எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

இணைய வானொலி என புரிந்து கொள்ளக்கூடிய ‘பாட்காஸ்டிங்’ வசதி ஏற்கெனவே பிரபலமாக இருந்தாலும், இணைய உலகில் ஒலி சார்ந்த சேவைகள் வெகுமக்கள் மத்தியில் அத்தனை பிரபலமானது இல்லை. ‘ஸ்கைப்’ உள்ளிட்ட குரல் வழி சேவை அல்லது இணைய தொலைபேசி சேவைகள் அறிமுகம் ஆகியிருந்தாலும், சமூக வலைப்பின்னல் தொடர்பு எனும்போது, ஆடியோ வசதி முன்னுரிமை பெற்றதில்லை.

அதிலும், கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில், ‘ஜூம்’ உள்ளிட்ட வீடியோ சந்திப்பு சேவைகள் பிரபலமாகி காணொலி தொடர்பு இயல்பாகும் நிலை உண்டானது. இந்தப் பின்னணியில்தான் ‘கிளப்ஹவுஸ்’ அறிமுகம் ஆகி அசத்தியது.

கிளப்ஹவுசில் என்ன சிறப்பு என்றால், அது சமூக ஆடியோ சேவையாக அறிமுகம் ஆனதுதான். அதாவது, முற்றிலும் ஒலி சார்ந்த சமூக ஊடக சேவையாக உருவானது.

கிளப்ஹவுசில் மேசேஜிங் வசதியோ, வீடியோ வசதியோ கிடையாது. புகைப்படங்களுக்கும் இங்கு வேலை இல்லை. மாறாக, எல்லாமே ஆடியோதான். ‘கிளப்ஹவுஸ்’ பயனாளிகள் தங்களுக்கான அறையை உருவாக்கிக் கொண்டு மற்றவர்களுடன் உரையாடலாம். சமூக ஊடக இலக்கணப்படி, சக பயனாளிகளை பின்தொடரவும் செய்யலாம்.

கிட்டத்தட்ட ‘டாக் ‌ஷோ’ பாணியில் இந்த சேவை அமைந்திருந்தது. ஆமாம், குறிப்பிட்ட ஒருவர் நிகழ்ச்சியை நடத்தி கேள்வி கேட்டு பதில் பெறுவதற்கு பதில், இந்த சேவையில் உறுப்பினர்கள் தங்கள் விருப்பம்போல மற்றவர்களுடன் குரல் வழியே கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம்.

வாட்ஸ் அப் பகிர்வுகளும், பேஸ்புக் நிலைத் தகவல்களும், இன்ஸ்டாகிராம் தொடர்புகளும், ஒலி வடிவில் மட்டும் நிகழ்ந்தால் எப்படி இருக்கும் என யோசித்துப் பாருங்கள்… அத்தகைய அனுபவத்தைதான் ‘கிளப்ஹவுஸ்’ வழங்கியது.

இத்தகைய ஆடியோ மட்டுமேயான சமூக ஊடக சேவை தனித்தன்மையானதுதான் என்றாலும், இதன் வெற்றி கொஞ்சம் ஆச்சர்யம் அளிப்பதுதான். ‘கிளப்ஹவுஸ்’ சேவை கடந்த ஆண்டு அறிமுகம் ஆனாலும், இந்த ஆண்டு துவக்கத்தில்தான் திடீரென கவனத்தை ஈர்த்து பிரபலமானது.

‘கிளப்ஹவுஸ்’ திடீரென பிரபலமானதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் சொல்லப்படுகின்றன. முதல் விஷயம், ‘கிளப்ஹவுஸ்’ சேவை அனைவருக்கும் அறிமுகம் செய்யப்படாமல், அழைப்பின் பேரில் உறுப்பினர்கள் அனுமதிக்கப்படும் சேவையாக இருந்ததால், இதற்கு ஒரு பிரத்யேக தன்மை உண்டானது. எனவே, எல்லோரும் கிளப்ஹவுசில் இணைய விரும்பினர்.

image

இரண்டாவதாக, டெஸ்லா நிறுவனர் எலன் மஸ்க், இந்த சேவையில் உறுப்பினராகி, இதன் வழியே தனது அபிமானிகளை சந்தித்து பேசியதும் கிளப்ஹவுசை மேலும் பிரபலமாக்கியது. அதன் பிறகு, முக்கிய பிரமுகர்கள் பலரும் கிளப்ஹவுசில் அங்கத்தினராக கவன ஈர்ப்பு அதிகமானது.

வழக்கமான சமூக ஊடக சேவையாக இல்லாமல், உறுப்பினர்கள் ஒலி வடிவில் அர்த்தமுள்ள உரையாடலில் ஈடுபடுவதற்கான வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டது ‘கிளப்ஹவுஸ்’ சேவையை மேலும் பிரபலமாக்கியது.

அதோடு ஐபோனுக்கு மட்டுமே இந்த சேவை அறிமுகமானதும், அதன் பிரத்யேக தன்மையை அதிகமாக்கியது. தற்போது கிளப்ஹவுஸ் மீதான மவுஸ் குறைந்துவருவதாக கூறப்பட்டாலும், இந்த செயலி உண்டாக்கிய ஆடியோ வழி உரையாடல் இணையத்தின் புதிய போக்காக உருவாகி இருக்கிறது.

‘கிளப்ஹவுஸ்’ செல்வாக்கை அடுத்து, குறும்பதிவு சேவையான ட்விட்டரும் ‘ஸ்பேஸ்’ எனும் பெயரில் இதேபோன்ற வசதியை அறிமுகம் செய்தது. பேஸ்புக், லிங்க்டுஇன் உள்ளிட்ட சேவைகளும் சமூக ஆடியோ வசதியில் ஆர்வம் காட்டுகின்றன.

இந்நிலையில்தான், இந்தியாவின் ‘சிங்காரி’ செயலி, கிளப்ஹவுசின் இந்திய வடிவம் என சொல்லக்கூடிய ‘பயர்சைடு’ செயலியை அறிமுகம் செய்துள்ளது.

சிங்காரி செயலிக்கு அறிமுகம் தேவையில்லை. கடந்த ஆண்டு இந்தியாவில் ‘டிக் டாக்’ உள்ளிட்ட சீன செயலிகள் தடை செய்யப்பட்டபோது, டிக்டாக்கிற்கு மாற்றாக அறிமுகமான இந்திய செயலிகளில் ‘சிங்காரி’யும் ஒன்று. டிக்டாக் நகல் என்றே வர்ணிக்கப்படும் ‘சிங்காரி’ இப்போது ‘பயர்சைடு’ செயலியை அறிமுகம் செய்துள்ளது.

image

‘கிளப்ஹவுஸ்’ செயலி இன்னமும் ஆண்ட்ராய்டில் அறிமுகம் ஆகாத நிலையில், ‘பயர்சைடு’ ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு என இரண்டு மேடைகளிலும் அறிமுகம் ஆகியிருக்கிறது.

இந்த செயலியில் உறுப்பினர்கள் தங்களுக்கான ஆடியோ அறைகளை உருவாக்கி கொண்டு மற்றவர்களுடன் உரையாடலாம். குறிப்பிட்ட தலைப்புகளின் அடிப்படையில் அறைகளை உருவாக்கிக் கொள்ளலாம். ஆர்வத்தின் அடிப்படையில் மற்றவர்களுடன் உரையாடலாம்.

போன் வழியே பேசுவது என்பது வேறு, ‘பயர்சைடு’ போன்ற செயலியில் நுழைந்து மற்றவர்களுடன் குறிப்பிட்ட தலைப்பில் உரையாடுவது என்பது வேறு. இந்த அனுபவத்தை பெற விரும்புகிறவர்கள் ‘பயர்சைடு’ செயலியில் இணையலாம்.

‘கிளப்ஹவுஸ்’ நகலாக அறிமுகம் ஆகியிருந்தாலும் ‘பயர்ஸைடு’ செயலி, கொரோனா இரண்டாம் அலை சூழலில், கோவிட்-19 தொடர்பான சந்தேகங்களுக்கு வழிகாட்டும் அறையை கொண்டிருக்கிறது. கோவிட்-19 உதவி வழங்கி வரும் இணையதளங்களில் ஒன்றான ‘கோவிட்சிட்டிசன்ஸ்’ (https://covidcitizens.org/) தளத்துடன் இணைந்து இந்த சேவையை வழங்குகிறது.

பயர்சைடு செயலி: https://www.joinfireside.io/

சைபர்சிம்மன்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.