இரண்டாம் அலையில் கொரோனாவின் தீவிரமான பரவலை அடுத்து மே 6ம் தேதி முதல் மளிகைக் கடைகள் போன்ற சிறு வியாபார நிறுவனங்கள் மதியம்வரை மட்டுமே செயல்பட வேண்டுமென அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் 50% ஊழியர்களுடன் மட்டுமே இயங்க வேண்டுமென்றும் மீதிப் பேர் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

சினிமாவைப் பொறுத்தவரை தியேட்டர்கள் இயங்குவதற்கான தடை ஏற்கெனவே அமலில் உள்ளது. ஆனாலும் ஓடிடி-யில் ரிலீசாகலாம் என்பதால் ஷூட்டிங் ஆங்காங்கே நடந்தே வருகிறது. அதேபோல் சீரியல் ஷூட்டிங் குறித்தும் இதுவரை எந்தவொரு அறிவிப்பும் வரவில்லை.

சீரியல் ஷூட்டிங்கில்…

தற்போது சீரியல்களின் ஷூட்டிங் நடந்து வருகிறதா? மே 6ம் தேதிக்குப் பிறகு சீரியல் ஷூட்டிங்கில் மாற்றம் இருக்குமா? சின்னத்திரை வட்டாரத்தில் விசாரித்தோம்.

‘’முன்னாடி தளர்வு அறிவிச்சப்ப என்னென்ன நிபந்தனைகளை விதிச்சாங்களோ அவற்றைக் கடைபிடிச்சுதான் இன்றைய தேதி வரைக்கும் சீரியல்களின் ஷூட்டிங் நடந்துட்டு வருது. இரண்டாம் அலையின் தீவிரம் எல்லாருக்கும் புரியறதால நடிகர் நடிகைகள், டெக்னீஷியன்கள் எல்லாருமே விழிப்புணர்வோடதான் இருக்காங்க. அதனால அவங்களே பாதுகாப்பு அம்சங்களை முறையா கடைபிடிக்கறாங்க.

ஸ்பாட்ல டெம்பரேச்சர் செக்-அப், சமூக இடைவெளி, ஷூட்டிங் இல்லாத நேரங்கள்ல மாஸ்க், தவிர தடுப்பூசின்னு எல்லா விஷயங்கள்லயும் கவனமாத்தான் இருக்கோம். சென்னைக்கு வெளியில ரொம்ப தூரத்துல நடந்திட்டிருந்த ஷூட்டிங்கை நகரத்துக்குள்ளேயே கொண்டு வந்துட்டாங்க’’ என்கிறார்கள்.

டிவி நடிகர் சங்கத் தலைவர் ரவிவர்மாவிடம் பேசினேன்.

‘’எந்த நேரத்துலயும் இன்னொரு ஊரடங்கு இருக்கலாம்னு சீரியல் தயாரிப்பாளர்கள், சேனல்கள் மத்தியில ஒரு எண்ணம் இருக்கு. அதனால விரைந்து எபிசோடுகளை எடுத்துட்டிருக்காங்க. நிறையப் பேர் தடுப்பூசி போட்டிருக்காங்கதான். ஆனாலும் கொரோனா பாதிப்புக்குள்ளானவங்களின் தினசரி எண்ணிக்கை பயமுறுத்தறதாகவே இருக்கே!

ரவிவர்மா

மறுபடியும் ஊரடங்கு வந்தா சீரியல் ஏரியாவுல அது என்னென்ன பாதிப்புகளை உருவாக்கும்னு தெரியலை.

புதிய அரசு இன்னும் பதவி ஏற்கலை. முதல்வரா பதவி ஏற்க இருக்கிற மு.க.ஸ்டாலினும் ‘குறிஞ்சி மலர்’ங்கிற சீரியல்ல நடிச்சவர்தான். சின்னத்திரை ஏரியாவுல இருக்கிற பிரச்னைகளையெல்லாம் சரி செய்ய அவர்கிட்ட வேண்டுகோள் வச்சிருக்கோம்’’ என்கிறார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.