கொரோனா பேரிடரில் உதவி தேவைப்படுபவர்களுக்கும், உதவி செய்ய விரும்புபவர்களுக்கும் அவரவரின் தேவைக்கேற்ப, அவரவர் பகுதியில் உள்ள கோரிக்கைகளை கவனித்து, அவற்றுக்கு ஏற்ற மாதிரி பரிந்துரை செய்யும் ட்விட்டரை சார்ந்து வலைதளம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் தீவிரமாகி இருக்கும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நினைப்பவர்களுக்கும், உதவி தேவைப்படுபவர்களுக்கும் https://covid19-twitter.in/ என்ற தளம் நிறுவப்பட்டுள்ளது. இந்தத் தளம், கொரோனா தொடர்பாக ட்விட்டரில் குவியும் உதவிகளுக்கான கையேடாக விளங்குகிறது.

image

பேரிடர் காலங்களில் உதவி கோராவும், நேசக்கரங்களை ஒருங்கிணைக்கவும் ட்விட்டர் அருமையான மேடை என்பது ஏற்கெனவே பல முறை நிrபணமாகி இருக்கிறது. இப்போது கொரோனா இரண்டாம் அலை இந்தியாவை உலுக்கியெடுத்து வரும் நிலையில், ட்விட்டரில் குறும்பதிவுகளாக உதவிக்கான கோரிக்கைகளை குவிந்து வருகின்றன. அதற்கு நிகராக குறும்பதிவு வடிவில் நேசக்கரங்களும் நீட்டப்பட்டு வருகின்றன. ட்விட்டர் செயல்முறை இலக்கணப்படி, கொரோனா உதவி தொடர்பான கோரிக்கைகள், எளிதில் அடையாளம் காணப்படும் வகையில் தொடர்புடைய பொருத்தமான ஹேஷ்டேக் கொண்டு வெளியாயின. உதாரணத்துக்கு சில…

#Oxygen | #OxygenCans #DelhiNCR #CovidResources DelhiFightsCorona | #sos | #CovidIndia | #COVIDEmergency | #SOSIYC | #COVID19India | #CovidHelp

இதுபோன்ற ஹேஷ்டேகுகளைக் கொண்டு, உதவிக்கான குறும்பதிவுகள் பல வெளியாகின.

ஏப்ரல் மாதம் முழுக்க இந்தக் குறும்பதிவுகள் வெளியான விதம், நாட்டில் இரண்டாம் அலை பரவிய வேகத்தை உணர்த்தும் விதமாக அமைந்தது. அதிலும் குறிப்பாக, ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு தொடர்பான பதிவுகளும், ஆக்சிஜன் சிலிண்டர் எங்கே கிடைக்கும் என்பதற்கான கோரிக்கைகளும் அதிகம் வெளியாயின.

தனிநபர்கள் நட்பு வட்டத்தில் வேகமான உதவி எதிர்பார்த்து பகிர்ந்து கொண்ட குறும்பதிவுகள் ஒரு பக்கம் வெளியாகி கொண்டிருக்க, இன்னொரு பக்கம் மருத்துவமனைகள் #sos எனும் ஹாஷ்டேகுடன் ஆக்சிஜன் தேவை தொடர்பான கோரிக்கைகளை வெளியிடத் துவங்கியபோது, அலையென வரும் கொரோனா நோயாளிகளை சமாளிக்க முடியாமல் அடிப்படை மருத்துவ கட்டமைப்பு திணறத் துவங்கிய நிலையை உணர்த்தி திகைக்க வைத்தது.

image

இதனிடையே, உதவி கிடைக்கப் பெற்றவர்கள் நன்றியை குறும்பதிவாக பகிர்ந்து கொண்ட நிலையில், இனி உதவியும் பயனில்லை என இழப்பு குறித்து வேதனை தகவல் தெரிவித்து வெளியான குறும்பதிவுகள் தேசத்தின் கையறு நிலையை இன்னும் தெளிவாக உணர்த்தியது.

ஆனால், செய்வதற்று நின்றுவிடாமல் பலரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்யத் துவங்கியத்தையும், தொடர்ந்து வெளியான கொரோனா தொடர்பான குறும்பதிவுகள் உணர்த்தின. ஒரு சிலர் தங்களால் மருந்து பொருள் அல்லது ஆக்சிஜனுக்கு ஏற்பாடு செய்ய முடியும் என தெரிவித்தனர். ஒரு சிலர், உதவி கோரிக்கைகளை தங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொண்டனர். ஒரு சிலர், உதவிகளை ஒருங்கிணைத்து வழிகாட்டுதலில் ஈடுபட்டனர்.

தேசத்தின் அவல நிலையை பட்டவர்த்தனமாக எடுத்துக் காட்டிய இந்தக் குறும்பதிவுகளை மெல்லிய மனம் படைத்தவர்களால் தாங்கியிருக்க முடியாது. ஏனெனில், உதவி கேட்டு குவிந்த குறும்பதிவுகள் திக்குமுக்காட வைப்பதாக இருந்தது.

இந்தப் பின்னணியில்தான் ட்விட்டரில் வெளியாகும் கொரோனா குறும்பதிவுகளை ஒருங்கிணைக்கும் தேவை உண்டானது. ட்விட்டர் நிர்வாகம் தன் பங்கிற்கு கொரோனா குறும்பதிவுகளை எளிதாக தேடும் வகையில் தனது மேம்பட்ட தேடல் வசதியை அடையாளம் காட்டு, இதற்கான தனிப் பக்கத்தையும் அமைத்தது.

இன்னொரு பக்கம், ட்விட்டர் பயனாளிகள் தாங்களே களத்தில் இறங்கி கொரோனா உதவி ஒருங்கிணைப்பு தளத்தை அமைத்தனர். இப்படி உருவாகப்பட்ட தளங்களில் ஒன்றுதான், மேற்குறிப்பிட்ட https://covid19-twitter.in/  தளம்.

இந்தத் தளத்தை உருவாக்கிய பெங்களூரு மென்பொருளாளர் உமாங் காலியா (@umanghome) தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்ததுபோல, இந்தத் தளம் கொரோனா உதவி தொடர்பான ட்விட்டர் தேடலுக்கான இணைப்புகளை கண்டறிவதற்கான எளிமையான தளமாக இருக்கும்.

அடிப்படையில் இந்தத் தளம், ட்விட்டரில் வெளியாகும் கொரோனா உதவி கோரிக்கைகளையும், நிவாரண அறிவிப்புகளையும் தொகுத்தளிக்கும் தளமாக இருக்கும். மருத்துவ உதவியை நாடும் கொரோனா நோயாளிகளைப் பொறுத்தவரை, உடனடி உதவி என்பது மிகவும் அவசியம். மருத்துவமனை படுக்கை வேண்டுவோர் அல்லது ஆக்சிஜன் சிலிண்டர் கோருபவர்களுக்கு சில மணி நேரங்களில் அந்த உதவி கிடைத்தாக வேண்டும்.

image

ட்விட்டர் குறும்பதிவுகள் மூலம் இந்த உதவியை கேட்டாலும், பதிவுகளைப் பார்த்து, ‘அதற்கேற்ப உதவுவது எப்படி, எங்கோ டெல்லியில் பகிரப்படும் உதவி கதறல்களை மற்ற நகரங்களில் இருப்பவர்கள் என்ன செய்ய முடியும்?’ என நாம் நினைக்கலாம். இதை தவிர்க்க, பொதுவாக உதவி கோரிக்கைகளை பார்ப்பதை விட, தங்கள் பகுதியில் உள்ள கோரிக்கைகளை கவனித்து இயன்ற உதவியை செய்ய இந்தத் தளம் உதவுகிறது.

அப்படி அருகிலிருப்பவர்களுக்கு உதவ தயாராக இருப்பவர்கள், இந்தத் தளத்தின் மூலம் உதவி தேவைப்படுபவர்களை இரண்டு விதமாக அடையாளம் காணலாம். ஒன்று: படுக்கை வசதி, ஆக்சிஜன், வெண்டிலேட்டர் கருவி, மருந்து ஆகியவற்றின் அடிப்படையில் யாருக்கு எங்கு உதவி தேவை என தெரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படலாம். இரண்டாவது: குறிப்பிட்ட நகரம் அடிப்படையில் தேடலாம். உதாரணத்திற்கு டெல்லி அல்லது பெங்களூரு நகரில் உதவி கேட்டுள்ளவர்களின் குறும்பதிவுகளை கண்டறிந்து செயல்படலாம்.

சரிபார்க்கப்பட்ட கோரிக்கைகளை வடிகட்டுவதற்கான வசதியும் அளிக்கப்பட்டிருந்தது. உதவியின் தன்மை அடிப்படையிலும் தேடலை வடிகட்டிக் கொள்ளலாம். இது தவிர, அதிகம் தேடப்படும் நகரங்களின் பட்டியலும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியல் மூலம் எந்த நகரத்தில் என்ன நிலை என்பதை தெரிந்துகொள்ளலாம்.

மேலும், நன்கொடை அளிக்க விரும்புகிறவர்களுக்கு வழிகாட்டும் வகையில், கொரோனா தொடர்பான நேசக்கரம் நீட்டி வரும் அமைப்புகளின் பட்டியலும் இடம்பெற்றுள்ளது.

கொரோனா பாதிப்புக்கு பெரிய அளவில் உதவி செய்பவர்கள் சுட்டிக்காட்டும் இணைப்பும் இந்தத் தளத்தில் விளம்பரமாக வெளியிடப்பட்டு வருகிறது. இந்தத் தளம் தொடர்ந்து புதிய அம்சங்களோடு அப்டேட் செய்யப்பட்டு வருகிறது.

கொரோனா கோரத் தாண்டவத்தின் நடுவே, பரஸ்பர உதவி என்பது எத்தனை முக்கியம் என்பதற்கான உதாரணமாக அமையும் இதுபோன்ற உதவும் தளங்கள்தான் மூச்சுத்திணறிக் கொண்டிருக்கும் தேசத்திற்கு ஆசுவாசம் அளிக்கும் அம்சங்களில் ஒன்றாக திகழ்கிறது.

– சைபர்சிம்மன்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.