யானை கடக்கும் பகுதிகளில் செல்லும் ரயில்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவிகள் இல்லை – தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

கோவை – பாலக்காடு ரயில் பாதை, கோவை வனப்பிரிவு (தமிழ்நாடு) மற்றும் பாலக்காடு வனப்பிரிவு (கேரளா) காடுகளின் வழியாக செல்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையின் காடுகளின் வழியாக செல்லும் இந்த ரயில் வழிதடத்தின் நீளம் மொத்தம் 31.7 கி.மீ ஆகும். இந்த வழித்தடத்தில் கோவை போத்தனூர் மற்றும் பாலக்காடு கஞ்சிகோடு ரயில் நிலையங்களுக்கு இடையில் மதுக்கரை, எட்டிமடை, வாளயார் என மூன்று ரயில் நிலையங்கள் உள்ளன.

image

இதில், போத்தனூர், மதுக்கரை மற்றும் எட்டிமடை ரயில் நிலையங்கள் தமிழ்நாட்டு எல்லைக்குள்ளும், வாளையார் மற்றும் கஞ்சிகோடு கேரளாவின் எல்லைக்குள்ளும் உள்ளது. இதில் ஏ மற்றும் பி என்று இரு லைன்கள் உள்ளன. ஏ லைன் பெரும்பாலும் அடர்ந்த காட்டுக்கு வெளிப்பகுதியிலும், பி லைன் அடர் வனப்பகுதிக்குள்ளும் அமைக்கப்பட்டுள்ளது. ஏ லைன் கோவையில் இருந்து பாலக்காடு செல்லவும், பி லைன் பாலகாட்டில் இருந்து கோவை வரவும் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.

கஞ்சிகோடு மற்றும் வாளையார் இடையே 6.5 கி.மீ தூரமும், வாளையார் மற்றும் எட்டிமடை இடையே 2 கி.மீ. தூரம் என மொத்தம் 8.5 கிலோமீட்டர் ஏ வழித்தடமான அடர் வனப்பகுதி வழியாகவும், அதேபோல், எட்டிமடை மற்றும் போத்தனூர் இடையே பாதையானது முற்றிலும் காடுகளுக்கு வெளியேவும் செல்கிறது. பி வழித்தடம் பெரும்பாலும் அடர்ந்த வனப்பகுதி வழியே செல்வதால், பெரும்பாலான விபத்துக்கள் இந்த பி வழித்தடத்தில் தான் நடந்துள்ளன. இந்த ரயில் பாதையில் 2002 முதல் 2010 வரை மட்டும் 13 யானைகள் இறந்துள்ளன. அதிலும், 2016-இல் இருந்து இந்த ஆண்டு வரை 8 யானைகள் ரயில் மோதி இறந்துள்ளன.

image

நாள் ஒன்றுக்கு பகல் நேரத்தில் 75 முதல் 80 ரயில்களும் இரவு நேரங்களில் 35 முதல் 40 ரயில்களும் இந்த வழித்தடத்தில் சென்று வருகின்றன. இந்நிலையில், இந்த வழிதடத்தில் ரயில்கள் இயக்கம் குறித்து தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சார்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் கோரியிருந்தார். அதற்கு பதிலளித்த பாலக்காடு ரயில்வே கோட்ட அதிகாரி ஜெயகிருஷ்ணன் அளித்த பதிலில், ரயில் மோதி யானைகள் இறந்தது சம்பந்தமாக, ரயில்வே ஒழுங்கு மற்றும் முறையீட்டு விதிகளின்படி எந்த நடவடிக்கையும் யார் மீதும் இதுவரை எடுக்கப்படவில்லை,

கடந்த 10 ஆண்டுகளில் யானைகள் மீது ரயில் மோதியதில், ரயில் இன்ஜினுக்கோ பெட்டிகளுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை, ரயில் இன்ஜின் குறிப்பிட்ட வேக வரம்பைத் தாண்டி இயங்கினால் உடனே நிறுத்துவதற்கு தானியங்கி அவசர நிறுத்தும் வசதிகள் எதுவும் இன்ஜினில் செய்யப்படவில்லை, வேகக்கட்டுப்பாட்டு கருவி ரயில் இன்ஜினில் பொருத்தப்படவில்லை, மேலும் இரவு நேரங்களில் ரயில்களின் வேகம் 45 கிமீ எனவும், பகலில் ரயில்களின் வேகம் 65 கிமீ எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

image

தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தகவல் பெற்ற தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சார்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா, கூறும்போது, “விபத்துக்கள் பெரும்பாலும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை நடப்பதால் இந்த நேரங்களில் ரயில்களின் வேக வரம்பு முறையாக கடைபிடிக்கப்படுவதோடு, வளைவுகளில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்க வேண்டும் என்கிறார். வனப்பகுதியில் செல்லும் ‘பி’ லைனில் தான் அதிகளவு யானைகள் உயிரிழப்பு ஏற்படுவதை கருத்தில் கொண்டு, இரவு நேரத்தில் பி லைனில் ரயில் போக்குவரத்தை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என தொடர் கோரிக்கை எழும் நிலையில், வேகக்கட்டுப்பாட்டு கருவி ரயில்களில் இல்லாத தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.

அதேபோல், ஒவ்வொரு முறையும் ரயிலில் அடிபடும் நிகழ்வுகளின் போது ரயில்வே நிர்வாகத்திடம் ரயில்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொறுத்த வலியுறுத்தப்பட்டு வருவதாக கோவை வனத்துறையின் விளக்கம் எந்தவகையிலும் செயல் வடிவம் பெறவில்லை என்பது இதன்மூலம் தெரியவந்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.