மார்வெல் ரசிகர்களுக்கு கேப்டன் அமெரிக்கா வெர்சஸ் அயன்மேன், டிசி பாலோயர்களுக்கு சூப்பர்மேன் வெர்சஸ் பேட்மேன், டென்னிஸ் விரும்பிகளுக்கு பெடரர் வெர்சஸ் நடால், கால்பந்து நேயர்களுக்கு முன்பொரு முறை சொன்னது போல பார்சிலோனா வெர்சஸ் ரியல் மாட்ரிட், ஐபிஎல் வெறியர்களுக்கு எப்போதுமே சென்னை வெர்சஸ் மும்பைதான். ஐ.பி.எல் ஏலத்தின் போதே இந்த போட்டியைப் பற்றிய பேச்சு தொடங்கிவிடும். அதுவும் ‘நெல்லூர் எனக்கு, குண்டூர் உனக்கு’ என இந்த முறை சென்னையின் கோட்டையான சேப்பாக்கம் மும்பைக்கு ஹோம் க்ரவுண்டாகும் மும்பையின் விருப்ப ஏரியாவான வான்கடே சென்னைக்கு ஹோம் கிரவுண்டாகவும் மாறியதிலிருந்து கூடுதல் எதிர்பார்ப்புகள்.

இந்தத் தடவையும் ‘வாய்ப்பில்ல ராஜா’ என கணிக்கப்பட்ட சென்னை தொடர் வெற்றிகளால் டேபிள் டாப்பர். செம ஸ்ட்ராங் எனக் கணிக்கப்பட்ட மும்பை ப்ளே ஆஃப் வருமா வராதா என்கிற நிச்சயமற்ற சூழல் – இந்த நிலைமையில்தான் மோதின இரு அணிகளும். வரிசையாய் வெற்றிகள் பெற்றிருந்தாலும் இந்தப் போட்டிக்கு பயத்தோடு வந்தமர்ந்தது சென்னை ரசிகர்கள்தான். மும்பையுடனான சி.எஸ்.கேவின் ட்ராக் ரெக்கார்ட் அப்படி!

MI v CSK

தோற்கும் காலத்திலேயே ப்ளேயிங் லெவனை மாற்றமாட்டார் தோனி. அதனால் சென்னை அணியில் பெரிய மாற்றமில்லை. சென்னை வீரர்கள் ஸ்பின் நன்றாக ஆடக்கூடியவர்கள் என்பதால் ஜெயந்த் யாதவை வெளியே அமரவைத்துவிட்டு ஜிம்மி நீஷமையும் நாதன் கூல்டர் நைலுக்கு பதில் குல்கர்னியையும் அழைத்து வந்திருந்தார் ரோஹித். டாஸ் வென்று பௌலிங்கையும் தேர்வு செய்தார். ‘நாங்கள் டாஸ் ஜெயித்திருந்தாலும் பௌலிங்தான் தேர்ந்தெடுத்திருப்போம். பிட்ச் அப்படி’ என்றார் தோனி. இரண்டு வெற்றிகரமான டி20 கேப்டன்களை டாஸின் போதே காணமுடிந்தது.

போல்ட் வீசிய இரண்டாவது பாலை தன் ட்ரேட்மார்க் கவர் ட்ரைவ் வழியே பவுண்டரிக்கு அனுப்பி வைத்தார் கெய்க்வாட். அதற்கடுத்த இரண்டாவது பந்தை அவர் லெக் சைடில் டார்கெட் செய்ய, அது நம்மூர் பைக் ரேஸர்கள் போல லெஃப்ட் இண்டிகேட்டர் போட்டு ரைட்டில் திரும்பி ஹர்திக்கிடம் கேட்ச் ஆனது. இடதுகை பாஸ்ட் பௌலர்களிடம் கெய்க்வாட் வீழ்வது இது நான்காவது முறை.

குல்கர்னியின் அடுத்த ஓவரிலிருந்தே சி.எஸ்.கேவின் அதிரடி தொடங்கியது. பிட்ச்சில் ரேம்ப் வாக் நடந்து சிக்ஸ் விளாசினார் டுப்ளெஸ்ஸி. போல்ட்டின் அடுத்த ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ். 12 ரன்கள். இப்படியாக ஆடி பவர்ப்ளே முடிவில் 49 ரன்களுக்கு வந்தார்கள் பேட்ஸ்மேன்கள். 8 ஓவர்கள் முடிவில் 61 ரன்கள். வழக்கமாக பவர்ப்ளேயில்தான் ஆக்ஸிலேட்டரை முறுக்குவார்கள் பேட்ஸ்மேன்கள். ஆனால் மொயினும் டுப்ளெஸ்ஸியும் வித்தியாசமாக மிடில் ஓவர்களில் வெளுத்து வாங்கினார்கள். அடுத்த இரண்டு ஓவர்களில் 16 மற்றும் 18 ரன்கள்.

MI v CSK

அதுவும் மொயின் அலி எல்லாம் கே.ஜி.எப்பில் கிளப் முன்னால் கூலாக துப்பாக்கி தூக்கி நிற்கும் ஹீரோ போலத்தான் பிட்ச்சில் நின்றார். ‘நீ போடு மாப்ள, பறக்கவிடுறேன்’ என அவர் அடித்த அடியில் 33 பந்துகளில் அரைசதம். ‘மிஸ்டர் மொயின்! நீங்க 50 அடிக்கிறப்ப சீன் ல சீனியர் நான் எப்படி சும்மா இருக்குறது?’ என டு ப்ளெஸ்ஸியும் பந்தை விரட்ட, 27 பந்துகளில் அவருக்கும் அரைசதம். பேக் டு பேக் பவுண்டரி அடித்தவர்கள் பேக் டு பேக் பெவிலியனும் திரும்பினார்கள்.

ரெய்னாவிற்கு இது 200-வது ஐ.பி.எல் மேட்ச். சட்டென 2010 ஐ.பி.எல் பைனலில் இதே மும்பைக்கு எதிரான போட்டியில் ரெய்னா அடித்து வெளுத்ததை எல்லாம் காட்டினார்கள். பி.சி சர்கார் மேஜிக் ஷோ பில்டப்போடு தொடங்கிய சின்ன தல இன்னிங்க்ஸ் கிரேட் கிரிகாலன் மேஜிக் ஷோவாக முடிந்ததுதான் சோகம். ‘200-ல ரெண்டு இருக்கு. அதனால ரெண்டு ரன்னுதான்’ என நடையைக் கட்டினார். பார்மில் இருந்த இரண்டு பேட்ஸ்மேன்களும் அவுட். அடுத்தடுத்து மூன்று விக்கெட்கள். ஸ்கோர் 12 ஓவர்கள் முடிவில் 116/4.

களத்தில் நின்றது ஜடேஜாவும், ராயுடுவும். ‘இந்தாளு வலுவா இழுத்து சாத்துவானே’ என பீல்டர்களை எல்லாம் ஜடேஜாவுக்காக டீப்பில் செட் செய்துகொண்டிருந்தார் ரோஹித். ஆனால் அவுட் ஆப் சிலபஸாக சர்ப்ரைஸ் எனக் குதித்து வெளியே வந்தார் ராயுடு. ‘பழைய மேட்ச் ரிப்போர்ட் எல்லாம் எடுத்துப்பாரு. ராயுடு ரா.,. ராயலசீமா ராயுடு’ என பொங்கல் வைத்தார். பொளேர் பொளேரென இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக அவர் இழுத்து இழுத்து விட்டதில் பந்தே டயர்டாகி, ‘மனுஷனாய்யா இந்தாளு… இந்த அடி அடிக்கிறாப்ல’ என பால்கனியில் பதுங்கியது. சளைக்காமல் அதைத் தேடி தேடி மும்பை வீரர்கள் எடுத்து வர, திரும்பவும் அங்கேயே அனுப்பி வைத்தார். ‘ப்ரெண்ட்ஸ்’ படத்தில் வீட்டைச் சுற்றி ஓடும் நேசமணி – கோவாலு போல பந்தும் ராயுடுவும் இதை லூப்பில் செய்துகொண்டிருக்க ஸ்கோர் விறுவிறுவென ஏறியது.

MI v CSK

ரொம்ப நாள் கழித்து ஆடவந்த குல்கர்னியை குமுறி, போல்ட் பந்துகளை பொளந்து, பூம் பூம் பும்ரா பந்துகளுக்கு பை பை காட்டி அவர் ஆடிய கதகளியில் பேன்ஸியாய் 27 பந்துகளில் 72 ரன்கள். நான்கு பவுண்டரிகள், ஏழு சிக்ஸர்கள். ஸ்கோர் 20 ஓவர்கள் முடிவில் 218/4. மும்பைக்கு எதிராக சென்னையின் அதிகபட்ச ஸ்கோர் இது. மொத்த மேட்ச்சிலும் பவுண்டரிகளை விட சிக்ஸர்கள் அதிகம். டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்டான பும்ரா நான்கு ஓவர்கள் வீசி ஒரு விக்கெட் எடுத்து 56 ரன்கள் வாரிக்கொடுத்திருந்தார். ஐ.பி.எல்லில் அவரின் காஸ்ட்லியான நான்கு ஓவர்கள் இது.

பேட்டிங் ஆடவந்தார்கள் மும்பை அணியின் டி காக்கும் ரோஹித்தும். சஹாரின் முதல் பந்தையே பவுண்டரிக்கு விரட்டினார் டி காக். சஹாரைப் பொறுத்தவரை இரண்டே நிலைகள்தான். பவர்ப்ளேல ஸ்விங் ஆனா ஆட்டம் நமக்கு. ஸ்விங் ஆகலன்னா அது சாமிக்கு! இன்று இரண்டாவது நிலை. அதனால் அவரின் முதல் இரண்டு ஓவர்களில் மட்டும் 23 ரன்கள். மறுபக்கம் பவர்ப்ளேயின் கடைசி ஓவரில் வந்த இங்கிடி தன் பங்கிற்கு 14 ரன்கள் கொடுக்க, ஸ்கோர் 58 ரன்கள் ஆனது.

தாக்கூர் வந்துதான் முதல் பிரேக் கொடுத்தார். கிட்டத்தட்ட கெய்க்வாட் ஆடிய ஷாட் போலவே எங்கேயோ டார்கெட் செய்து எங்கேயோ சென்று பந்து கேட்ச் ஆனது. தாக்கூர் மேட்ச்சில் செய்த முதலும் கடைசியுமான நல்ல விஷயம் அதுவே. அடுத்தடுத்தும் நிறைய நல்லது செய்தார்தான்… தன் டொமஸ்டிக் டீமான மும்பைக்கு!

அதன்பின் வழக்கம்போல ஸ்பின்னர்களின் மாயாஜாலம். ஜடேஜா சூர்யகுமார் யாதவை வந்த வேகத்தில் வீட்டுக்கு அனுப்பினார். அடுத்த ஓவர் வீச வரும்போதே, ‘நான் உனக்கு கேட்ச் கொடுத்து அவுட்டானேன்ல… நீ பதிலுக்கு கேட்ச் தர்றதுதானே மொறை பங்காளி’ எனக் கேட்டபடிதான் வந்தார் மொயின். ‘சொன்ன சொல் தவறமாட்டான்டா இந்த கோட்டைச்சாமி குயின்டன்’ என அதேபோல கேட்ச் கொடுத்து பெவிலியன் போனார் டிகாக்.

MI v CSK

இப்போது களத்தில் பொல்லார்டும் க்ருணாலும். வழக்கமாய் ஸ்பின்னர்களை வைத்து மேஜிக் காட்டும் சென்னையின் மிடில் ஓவர் சாமர்த்தியம் இம்முறை தகர்ந்து போனது. அதில் பிரமாண்ட ஆர்.டி.எக்ஸ் வைத்து தகர்த்தார் பொல்லார்ட். ஜடேஜா வீசிய 13வது ஓவரில் மட்டும் மூன்று சிக்ஸர்கள். அடுத்த ஓவர் இங்கிடி வீச அதில் இரண்டு சிக்ஸர்கள். அடுத்த ஓவர் தாக்கூர் வர, அந்த ஓவரில் மட்டும் 23 ரன்கள். 17 பந்துகளில் வந்தது பொல்லார்டின் அரைசதம். ‘யார் போட்டாலும் அடிப்பேன்டா’ மோடிலேயே தொடக்கம் முதல் கடைசிவரை இருந்தார் பொல்லார்ட். கிட்டத்தட்ட ராயுடு அடிக்க, ஜடேஜா அந்தப்பக்கம் டிக்கெட் வாங்காமல் ஓசி ஷோ பார்த்தமாதிரி மும்பை இன்னிங்க்ஸில் பொல்லார்ட் அடிக்க அடிக்க வேடிக்கைப் பார்த்தார் க்ருணால்.

16 ஓவரில் ரைமிங்காக 16 ரன்கள். ஸ்கோர் 169/3. அடுத்த ஓவர் அபாரமாக வீசிய சாம் கர்ரன் க்ருணாலை வீட்டுக்கு அனுப்பி 2 ரன்களை மட்டுமே கொடுத்தார். ‘சுட்டிப்பையன் என்ன ரன் கன்ட்ரோல் பண்றது? அப்புறம் எனக்கு என்ன மருவாதி?’ என சேர்த்து வைத்து 17 ரன்கள் கொடுத்தார் ஷர்துல். அடுத்த ஓவரும் சாம் கர்ரன். முதல் இரண்டு பந்துகளில் இரண்டு சிக்ஸர்கள் கொளுத்தினார் ஹர்திக். ஆனாலும் பதற்றப்படாமல் நான்காவது பந்தில் அவரையும் கடைசி பந்தில் நீஸமையும் பெவிலியனுக்கு பார்சல் செய்தார். கடைசி ஓவரில் 16 ரன்கள் எடுத்தால் வெற்றி.

முதல் பந்தை சூப்பராக வீசி டாட் செய்தார் இங்கிடி. ‘வாவ் சூப்பர். இப்படியே மெயின்டெயின் பண்ணு’ என தோனி சொல்ல, ‘ஓ மெய்டன் வேணாம்னா சொல்றீங்க?’ என அடுத்த இரண்டு பந்துகளை தூக்கி தூக்கிப் போட்டு பொல்லார்டை பவுண்டரி அடிக்க வைத்தார். ஐந்தாவது பந்தில் சிக்ஸர். கடைசி பந்தில் இரண்டு ரன்கள் தேவை. ஆனால் தோனி பீல்டர்களை நிற்க வைத்திருந்ததோ பவுண்டரி லைனுக்கு பக்கத்தில்! தட்டிவிட்டு பறந்து இரண்டு ரன்களை எடுத்து வெற்றிக்கோட்டைத் தாண்டியது மும்பை. மொத்த க்ரெட்டிடும் பொல்லார்டுக்கே! ஆட்டநாயகனும் அவர்தான். 34 பந்துகளில் 87 ரன்கள். அதில் எட்டு சிக்ஸர்கள். 18வது ஓவரில் சி.எஸ்.கேவின் சூப்பர் பீல்டர் டு ப்ளெஸ்ஸி விட்ட கேட்ச்தான் பொல்லார்டுக்கு கிடைத்த லைப்லைன்.

MI v CSK

சி.எஸ்.கேவின் லைன் அப்பில் இருக்கும் பெரிய குறை இதன்மூலம் இன்னும் வெளிச்சமாகியுள்ளது. இத்தனை நாள்களாய் பேட்ஸ்மேன்களின் முதுகில் சவாரி செய்து வெற்றி பெற்றதால் அந்தப் பிரச்னை பூதாகரமாகாமல் இருந்தது. டெத் ஓவர்தான் வெற்றியைத் தீர்மானிக்கும் என்கிற மேட்ச்சில் சி.எஸ்.கேவில் அதற்கான பௌலர்கள் இல்லை. தாக்கூர் ரன்களை வாரிக்கொடுத்தாலும் சீரான இடைவெளியில் விக்கெட்கள் கழற்றுவார். இந்த சீசன் ரன்களை மட்டுமே கொடுக்கிறார். பாரீன் பௌலரான இங்கிடி இரண்டு சீசன்களாகவே சொதப்புகிறார். சக்காரியா, அர்ஷதீப் என சொற்ப ஆட்டங்களில் ஆடியிருக்கும் புதுமுகங்கள் சிறப்பாக ஆடும் நிலையில் சென்னையிலும் இந்திய வீரர் ஒருவருக்கு வாய்ப்பளிப்பதில் தவறில்லை. அநேகமாய் அடுத்த ஆட்டத்தில் இங்கிடிக்கு பதில் பிராவோ அல்லது பெஹர்ன்டப் இறங்கக்கூடும்.

மும்பைப் பொறுத்தவரை இந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த சேஸிங் அவர்களின் தன்னம்பிக்கையை மேலும் அதிகமாக்கும். வழக்கமாய் தொடரின் இரண்டாவது பாதியில் அசைக்க முடியாத அணியாக வலம் வரும் மும்பை இந்த முறையும் அதே ஸ்டைலில் ப்ளேஆஃப் போகும் என்றே தோன்றுகிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.