தூத்துக்குடி கோவில்பட்டி சுபா நகர், சுதர்சன் கார்டனைச் சேர்ந்தவர் அமல்தாஸ். இவரது மகள் சுஜா. இவருக்கும், விருதுநகர் மாவட்டம் ஆர்.ஆர்.நகர் மணிபாறைபட்டியைச் சேர்ந்த வீரராகவனுக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இத்தம்பதிக்கு ஆண் குழந்தை உள்ளது. சுஜாவின் சகோதிரி பிரியாவை, வீரராகவனின் சகோதரர் கார்த்திக்கிற்கு திருமணம் செய்து வைக்க வீரராகவனின் பெற்றோர் பெண் கேட்டுள்ளனர். ஆனால் அமல்தாஸ் குடும்பத்தினர் பெண் தர மறுத்து விட்டார்களாம். இதையடுத்து சுஜாவுக்கும், அவரது கணவருக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது.

கணவர் வீரராகவனுடன் தற்கொலை செய்த சுஜா

அத்துடன் சுஜாவிடம், அவரது கணவர் வீரராகவன், அவரது தாய், தந்தை ஆகியோர் கூடுதல் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது. இதையடுத்து சுஜா, இம்மாதம் 19-ம் தேதி கோவில்பட்டியில் உள்ள பெற்றோரின் வீட்டிற்கு குழந்தையுடன் வந்துள்ளார். தனது வாழ்வினை நினைத்தும், குழந்தையின் எதிர்காலத்தினை நினைத்தும் சுஜா மனவருந்திப் பேசிக் கொண்டிருந்தாராம். இந்நிலையில் இன்று, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு சுஜா தன் உறவினர்கள், நண்பர்களுக்கு வீடியோ ஒன்றினை அனுப்பியுள்ளார்.

1.17 நிமிடம் கண்ணீருடன் பேசிய அந்த வீடியோவில், ”என்னோட மாமியாரும் என்னோட கணவரும் எனக்கு செய்யுற கொடுமைகளுக்கெல்லாம் முடிவு கட்டுறதுக்காகத்தான் இந்த வீடியோ. அவங்க பண்ணுன கொடுமை… பேசுன பேச்சு… தாங்கிக்க முடியல. எவ்வளவோ போராடிட்டேன்” எனப் பேசியவர், தேம்பித் தேம்பி அழுதுகொண்டே… “என் குழந்தையை மட்டும் நல்லாப் பார்த்துக்கோங்க.. ப்ளீஸ்.., நீங்க யாராவது என் குழந்தையை மட்டும் நல்லாப் பார்த்துக்கோங்க. நான் இப்படி கேட்கக்கூடாத ஒரு அம்மாதான்.. ஆனா எனக்கு வேற வழி தெரியல.. என் குழந்தைய மட்டும் நல்லாப் பார்த்துக்கோங்க..sorry to say this..”என பேசி வீடியோ பதிவு செய்துள்ளார்.

வீடியோவில் கண்ணீருடன் பேசிய சுஜா

சுஜாவின் உறவினர்களிடம் பேசினோம், “சுஜா நல்லாப் படிச்ச பொண்ணு. எந்த விசயத்தையுமே பொறுமையா செய்யுவா. அதே போல குடும்பத்தையும் பொறுப்பா பார்த்துக்கிற பொண்ணு. ஆனா, அவளைக் கல்யாணம் செஞ்சு கொடுத்த மாப்பிளை வீட்டுல ஆரம்பத்துல இருந்தே பிரச்னை செஞ்சுக்கிட்டுதான் இருந்தாங்க. சுஜாவோட தங்கச்சி பிரியாவை சுஜாவோட கணவரின் தம்பிக்கு பொண்ணு கேட்டது உண்மைதான்.

ஒரு பொண்ணைக் கொடுத்து படுற பாடு போதும்னு சுஜாவோட அம்மா, அப்பா சம்மதிக்கலை. அதை மனசுல வச்சுக்கிட்டு தினமும் குடும்பமே அவளை சித்ரவதை செஞ்சிருக்காங்க. கொடுமை தாங்க முடியாம கைப்பிள்ளையைத் தூக்கிட்டுட்டு கோவில்பட்டிக்கு வந்துட்டா. அதுக்குப் பிறகும் போன்ல தகாத வார்த்தைகளாலப் பேசி துன்புறுத்துனாங்க. குழந்தைக்காக எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டிருந்தா. நாலஞ்சு நாளாவே விரக்தியா பேசிக்கிட்டே இருந்திருக்கா. ‘என் குழந்தைய நல்லாப் பார்த்துக்கோங்க”ன்னு வீட்லயும் அடிக்கடி சொல்லிக்கிட்டே இருந்திருக்கா. இன்னைக்கு தூக்கு மாட்டுக்கிட்டா.

சுஜாவின் தந்தை வீடு

தற்கொலை செய்யுறதுக்கு முன்னால பேசுன வீடியோலயும் குழந்தைய நல்லாப் பார்த்துக்கோங்கன்னு தான் பேசிருக்கா. ஒரு தைரியசாலியான பொண்ணு, இப்படி ஒரு முடிவை எடுக்குறதுக்கு அவள் அனுபவிச்ச கொடுமைதான் காரணம்” என்றனர்.

இதுகுறித்து இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸாரிடம் பேசினோம், “தற்கொலை செய்து கொண்ட சுஜாவின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.