ஆக்சிஜன் நெருக்கடி நாடு முழுவதும் பேரழிவை ஏற்படுத்தியுள்ள நிலையில், இரண்டு சாக்வான் மரங்களை வெட்டிய ஒருவருக்கு ரூ.1.21 கோடி அபராதம் விதித்து மத்திய பிரதேச வன அதிகாரி அதிரடி காட்டியுள்ளார்.

ரைசன் மாவட்டத்தில் உள்ள பமோரி வன எல்லைக்குட்பட்ட சில்வானி கிராமத்தைச் சேர்ந்த 30 வயதான சோட்டே லால் பிலாலா என்பவர், இந்த ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி இரண்டு சாக்வான் மரங்களை வெட்டியிருந்தார். இவர் அந்தப் பகுதியில் காடுகளை அழித்துவரும் மாஃபியா கும்பலைச் சேர்ந்தவர் என வனத்துறை தரப்பில் கூறப்படுகிறது. இவர், தான் வெட்டிய சாக்வான் மரங்களை, நாற்காலிகள் தயாரித்து விற்பனை செய்ததாகவும் கூறப்படுகிறது.

image

இதையடுத்து உள்ளூர் நபர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சோட்டே லால் மீது வனத்துறை வழக்குப் பதிவு செய்தது. எனினும் தலைமறைவாக இருந்த அவரை இரண்டு நாட்கள் முன்பு வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். பின்பு வனத்துறை அதிகாரி, மஹிந்தர் சிங், சோட்டே லாலுக்கு ரூ.1.21 கோடி அபராதம் விதித்து அதிரடி காட்டினார். ஒரு மரத்தின் வாழ்நாளில் பெறப்பட்ட நன்மைகளை விஞ்ஞான ரீதியாக கணக்கிடுவதன் அடிப்படையில் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பேசிய, வனத்துறை அதிகாரி மஹிந்தர் சிங், “ஒரு மரத்தின் சராசரி ஆயுள் சுமார் 50 ஆண்டுகள் என்று கருதப்படுகிறது. இது விஞ்ஞான ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த ஆயுட்காலத்தில் ஒரு மரத்திலிருந்து பெறப்பட்ட நன்மைகளின் மதிப்பும் சுமார் ரூ .60 லட்சம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இவை எனது கண்டுபிடிப்புகள் அல்ல, ஆனால் இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் நடத்திய ஆய்வின் முடிவுகள். அத்தகைய ஒரு ஆய்வின்படி, ஒரு மரம் அதன் வாழ்நாளில் ரூ .12 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜனை வழங்குகிறது.

அதே நேரத்தில் ரூ .24 லட்சம் மதிப்புள்ள காற்று மாசுபாட்டை நடுநிலையாக்குவதில் பங்களிக்கிறது. ஒரு மரம் மண் அரிப்பு மற்றும் நீர் வடிகட்டலைத் தடுக்க உதவுகிறது, இது மேலும் 24 லட்சத்தை சேர்க்கிறது. எனவே, 50 ஆண்டுகளில் ஒரு மரத்திலிருந்து மொத்த நன்மைகள் ரூ .60 லட்சம் ஆகும். குற்றம் சாட்டப்பட்டவர் இரண்டு மரங்களை வெட்டினார், எனவே அவருக்கு 1.21 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

வனத்துறையின் தரப்பு இப்படி சொல்ல, சோட்டே லாலின் உறவினர்களோ “நாங்கள் ஒரு வனப்பகுதியில் வசிக்கிறோம். வனத்தை நம்பி வாழும் நாங்கள் எங்கள் குடிசைகளை கட்டுவதற்கு பிடுங்கப்பட்ட மரங்களைப் பயன்படுத்துகிறோம். இந்த மரத்தைப் பயன்படுத்தியதற்காக அதிகாரிகள் எங்களைத் துன்புறுத்துகிறார்கள். எங்கள் வாழ்வாதாரத்திற்காக காட்டைப் பயன்படுத்துகிறோம். அதற்காக நாங்கள் ஒவ்வொரு முறையும் துன்புறுத்தப்படுகிறோம். சோட்டே லாலின் ஒட்டுமொத்த சமூகத்தினரால் கூட வனத்துறை விதித்த ரூ .1.21 கோடியை செலுத்த முடியாது” எனக் கூறியிருகின்றனர்.

இதற்கிடையே, போபாலில் உள்ள மூத்த வன அதிகாரிகள், சோட்டே லாலுக்கு அபராதம் விதிக்க வனத்துறை ரேஞ்சர் மஹிந்தர் சிங் எடுத்த முடிவை அடிப்படையாகக் கொண்ட ஆய்வின் நகலை கேட்டுள்ளனர். இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் இரண்டு மரங்களை வெட்டியதற்காக இவ்வளவு பெரிய தொகை அபராதமாக விதிக்கப்படுவது இதுவே முதல் முறை எனக் கூறப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.