சிஎஸ்கேவுக்குடனான மிகப்பெரிய பலப்பரீட்சைக்கு முன்னதாகவே, ஃபார்முக்குத் திரும்பிவிடும் அவசரத்தில், ராஜஸ்தானை அடித்து வீழ்த்தியுள்ளது மும்பை. இந்த வெற்றி, புள்ளிப்பட்டியலில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்து விடவில்லை என்றாலும், மும்பை இந்தியன்ஸ் இழந்திருந்த மொத்த நம்பிக்கையையும் திரும்பக் கொண்டு வந்துள்ளது இந்த இரு புள்ளிகள்.

டாஸ் வென்ற ரோஹித், பிற்பகல் போட்டியென்பதால் பனிப்பொழிவு இருக்காதென்பதையும், சிஎஸ்கே நேற்று சேஸ் செய்துவிட்டதென்பதை மனதில் நிறுத்தி ஃபீல்டிங் என்றார். தொடர்ந்து சொதப்பி வந்த இஷானுக்குப் பதில், கூல்டர் நைலைக் கொண்டு வந்திருந்தனர், பௌலிங்கை வலுப்படுத்துவதற்காக! சாம்சனோ, மாற்றமில்லை என்றார், ‘மாத்தணும்னு நினைச்சாலும், மாற்றுவீரர் இல்லை!’ என்னும் மைண்ட்வாய்ஸோடு. சாம்பியனாக இருந்தாலும், ’11/11 என மும்பைக்கு எதிராக 50% வின்னிங் ரெக்கார்டையும், நடப்புத்தொடரிலும் ஆளுக்கு நாலு பாயிண்டுதான் வைத்துள்ளோம்’ என்னும் மிதப்போடு தொடங்கியது ராஜஸ்தான்.

MI v RR

மும்பைக்கு எதிராக மட்டும், 90+ ஆவரேஜோடு பயமுறுத்தும் பட்லர், போல்டின் முதல் பந்தையே பவுண்டரியோடு ஆரம்பித்தார். ‘லாபம்’ எனச் சொல்லி‌ பாலுக்கொரு ரன் என நிதானமாக இவர்கள் தொடங்க, பும்ராவின் ஓவரில், பட்லர் அடித்த பந்து, பும்ராவை அடைவதற்கு முன்னே தரையைத் தொட்டது. அதற்கடுத்த பந்திலேயே டைரக்ட்ஹிட் வாய்ப்பை பொல்லார்டு தவறவிட, அதற்கடுத்த ஓவரிலேயே, பட்லர் தந்த இன்னொரு கடினக்கேட்ச் சாஹரால் தவறவிடப்பட்டது‌‌. பட்டர் ஹேண்டோடு, பட்லரின் கேட்ச்களை விட்டுக்கொண்டே இருந்தது மும்பை.

பவர்பிளேயின் கடைசி ஓவருக்கு கூல்டர்நைலை ரோஹித் கொண்டுவர, புதுவரவுக்கு நல்வரவளித்து, 14 ரன்களை அந்த ஓவரிலெடுத்தது ராஜஸ்தான். பவர்பிளே ஓவர்கள் 47/0 என சுமார்மூஞ்சிக் குமாராகவே இருந்தன. எனினும், கடந்த 21 போட்டிகளில், விக்கெட் இழப்பின்றி ராஜஸ்தானின் பவர்பிளே ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது இதுவே முதல்முறை. அதேபோல், பவர்பிளேயில் விக்கெட் எடுக்கத்திணறும் மும்பையின் சோகமும் தொடர்ந்தது.

விக்கெட் விழுந்தேயாக வேண்டுமென்பதால், ‘ஸ்பின்னால் அடிப்பதே ஸ்ட்ராடஜி’ என ஸ்ட்ராடஜிக்கல் டைம் அவுட்டில், ஏக மனதாய் முடிவுசெய்து, ஆஃப் ஸ்பின்னர் ஜெயந்துக்குத் துணையாய், லெக் ஸ்பின்னர் ராகுல் சாஹரைக் கொண்டுவந்தார் ரோஹித். கடைசியாக பட்லர் விளையாடிய ஐந்து டி20 போட்டிகளில், ஐந்தில் நான்கில், போல்டாகவோ ஸ்டம்பிங்கிலோ ஆட்டமிழந்திருந்ததால், ஸ்டம்பைக் குறிவைத்தே பந்துவீசியது மும்பை. ஒரு சிக்ஸரை பட்லர் தூக்க, அடுத்த பந்தை மிகக்குறைவான வேகத்தில் சாஹர் அனுப்ப, அது இறங்கிவந்து அடித்த பட்லரின் பேட்டிலிருந்து தப்பிப்பிழைத்து, டீ காக்கையடைந்து, ஸ்டம்பில் போய் சங்கமமாகி, 41 ரன்களோடு பட்லரை வழியனுப்பியது.

அடுத்ததாகக் களமிறங்கிய சாம்சன், சந்தித்த முதல் பந்தையே பவுண்டரிக்கு அனுப்பி, ‘ரோஹித்தை நோகடிப்பதே நோக்கம்!’ என்பது போல தனது இன்னிங்ஸைத் தொடங்கினார். ‘நான் இருக்கும்வரை அது நடக்காது’, என்பதுபோல் சாஹர், கூக்ளியோடு ஜெய்ஸ்வாலைத் தாக்கித் தகர்க்க முயல, அதை சிக்ஸருக்கு அனுப்பினார், ஜெய்ஸ்வால். ஆனால், மறுபடியும் ஒரு கூக்ளியால் அவரைக் காலி செய்தார், சாஹர். 32 ரன்களோடு அவர் வெளியேற, 10 ஓவர் முடிவில் 91 ரன்களைச் சேர்த்திருந்தது ராஜஸ்தான்.

MI v RR

ஷார்ட் பால்களையும், ஃபுல் லெந்த்தில் வீசப்படும் பந்துகளையும், அழகாகச் சமாளிக்கும் துபே, குட்லெந்த்தில் வீசப்படும் பந்துக்குத் திணறுவார் என்பதால், அவருக்கு அதே லெந்த்தில் பந்துவீசினார் கூல்டர்நைல்.

மத்திய ஓவர்களில் விக்கெட்டை விடக்கூடாதென, அதிரடிகாட்டாத இக்கூட்டணி, மிக மந்தமாக ஆடியது. அடுத்த ஐந்து ஓவர்கள், அடக்கியே வாசித்தது. 39 பந்துகளில், 50 ரன்களை பார்ட்னர்ஷிப் எட்ட, சரி, இனிமேலாவது அடித்து ஆடலாம் என ராஜஸ்தான் நினைக்க, பும்ராவும் போல்ட்டும் வந்து சேர்ந்தனர்.

தனது ஸ்பெல்லின் கடைசி ஓவரில், முதல் மூன்று பந்துகளை, ஃபுல் லெந்த்தில் வீசிய போல்ட், நான்காவது பந்தை, பிளாக்ஹோலில் பிட்ச் செய்ய, அதை எதிர்கொள்ள முடியாத சாம்சன் போல்டாகி வெளியேறினார். ‘நானும் விக்கெட் எடுப்பேன்!’ என்பதைப்போல, மந்தமாய் ஆடிக்கொண்டிருந்த துபேவை, லோ ஃபுல் டாஸில், பும்ரா காட் அண்ட் பௌலில் வெளியேற்றினார்.

மில்லர், மோரீஸ், திவேதியா, பராக் உள்ளிட்ட பிக் ஹிட்டர்கள் இருந்தபோதும் ஏன் அடித்து ஆடி ஆட்டத்தையும் ரன்ரேட்டையும் முடுக்கவில்லை என்பது ராஜஸ்தானுக்கே வெளிச்சம். கடைசி ஓவருக்காவது மோரீஸ் வருவார் என்று பார்த்தால், பராக் இறங்கினார். பவுண்டரியோடு தொடங்கிய கடைசி ஓவர், கேட்ச் டிராப், நோ பால், ஃப்ரி ஹிட், ஃப்ரி ஹிட்டில் சிதறிய ஸ்டம்ப், மறுபடி ஒரு பவுண்டரி என ட்விஸ்ட்களைச் சந்தித்து, 171 என நேற்று சன்ரைசர்ஸ் முடித்த அதே இலக்கத்தையே இலக்காய்க் கொண்டு முடிந்தது.

பட்லரின் விக்கெட், கில்லர் மில்லரை முன்கூட்டியே துபேயின் இடத்தில் இறக்காதது, கடைசி ஓவர்களில் ரன் குவிக்க முடியாதது, முடியாதவாறு பும்ரா 3.8 எக்கானமியோடு பந்துவீசியது எல்லாம், ராஜஸ்தானின் ரன்வேட்கைக்கு முட்டுக்கட்டையிட்டன. குறிப்பாக, மில்லரை முன்பே இறக்காததுதான் ராஜஸ்தான் செய்த மாபெரும் தவறு. ரன் குவிக்கத் திணறிவரும் துபேவால், ராஜஸ்தான் ரன்ரேட் மட்டுப்பட, அது எதிரணிகளுக்குத் தொடர்ந்து சாதகமாகப் போய்விடுகிறது.

190-க்கு குறைவான எதுவும் மும்பைக்கெதிராகக் குறைவே எனினும், மும்பையின் மிடில்ஆர்டர் பரிதாபங்கள் எல்லாம் நினைவில்வர, இரண்டாம் பாதிஆட்டத்தில், விறுவிறுப்புக்குப் பஞ்சமிருக்காதென்றே தோன்றியது.

MI v RR

ரோஹித் லெஃப்ட் ஆர்ம் ஃபாஸ்ட் பௌலர்களுக்கு எதிராக, 2018-ல் இருந்து திணறிவருவதோடு, அவர்களுக்கெதிராக, அவருடைய பேட்டிங் ஆவரேஜ் 13.71 மட்டுமே என்பதால், சக்காரியா மற்றும் உனத்கட்டை வைத்துத் தொடங்கியது ராஜஸ்தான். இரண்டாவது ஓவரிலேயே, ரோஹித்தின் ரன்அவுட் வாய்ப்பை திவேதியா தவறவிட்டார்.

அடுத்ததாக முஸ்தஃபிஜுரைக் கொண்டு ராஜஸ்தான் தொடர, பவுண்டரி சிக்ஸர்களோடு அவரை வரவேற்றார் டீ காக். பவர்பிளேயின் கடைசி ஓவரில் மோரீஸைக் கொண்டுவர, அவரையும் சிறப்பாக கவனித்தார் டீ காக். எனினும், அந்த ஓவரின் கடைசிப் பந்தில் ரோஹித்தை வெளியேற்றினார் மோரீஸ். 49/1 என்றிருந்தது மும்பை ஸ்கோர். இந்த வருடம், 7.38 என்பது மும்பையின் பவர்பிளே ரன்ரேட்டாயிருந்தது. நடப்பு ஐபிஎல்லில், இதுதான் ஒரு அணியின் குறைவான ரன்ரேட்டாகும். அதேபோல், 7.06 என்பது ராஜஸ்தான் பவர்பிளேயில் பந்துவீசும் போது, அவர்களது எக்கானமி. இதுவும் மற்ற அணிகளைவிடக் குறைவானது. இரண்டையுமே, 8.16 ரன்ரேட்டோடு மும்பை இன்று மாற்றியதே, வெற்றியின் தொடக்கமாய்ப் பார்க்கப்பட்டது.

உள்ளேவந்த சூர்யக்குமார், ‘ஸ்பின்னர்களை வைத்துச்செய்வதே எனது வாடிக்கை’, என்பதை ஆடிய முதல் ஓவரான திவேதியாவின் ஓவரில், பேக் டு பேக் பவுண்டரிகளோடு நிரூபித்தார். ஸ்பின்னுக்கெதிராக ஐபிஎல்லில், அவரது ஆவரேஜ் 44.60 என்பதற்கான காரணம் விளங்கியது. அவருக்குப் பயந்து, ஸ்பின்னை நிறுத்தி, உனத்கட் திரும்பக்கொண்டு வரப்பட, டீகாக் அவரது பந்தையும் விளாசத் தொடங்கினார்.

‘மோரீஸே அபயம்!’ என சாம்சன் அவரை இறக்க, ‘வந்தா விக்கெட்டோடுதான் வருவேன்’ என வீசிய இரண்டாவது பந்திலேயே சூர்யக்குமாரரை அனுப்பிவைத்தார் அவர். க்ருணால் நான்காம் இடத்திற்கு மாற்றப்பட்டு முன்கூட்டியே களம் கண்டார். இரண்டு லெக் ஸ்பின்னர்கள் இருப்பதன் காரணமாக, அவர் முன்கூட்டியே இறக்கப்பட்டார்.

MI v RR

அதேசமயம், 35 பந்துகளில், டீ காக்கும் அரைசதம் சேர்த்து, தனது ஃபார்முக்குத் திரும்பினார். மெதுமெதுவாக பார்ட்னர்ஷிப்பை பில்ட் செய்யத் தொடங்கியது இந்தக் கூட்டணி. 42 பந்துகளில், 61 ரன்கள் மட்டுமே வேண்டுமென எட்டக்கூடியதாக இலக்குமாற, சக்காரியாவைக் கொண்டுவந்தார் சாம்சன். அவர் வீசிய ஒரு ஸ்லோ பாலை, டீ காக், எக்ஸ்ட்ரா கவரில் அனுப்ப, அந்த கேட்ச், ஜெய்ஸ்வாலால் தவறவிடப்பட, மும்பையின் அதிர்ஷ்டம் கண் உருட்டிப் பார்த்தது.

ரன்ரேட்டும், தேவைப்படும் ரன்ரேட்டும், தண்டவாளங்களாக இணையாகப் பயணிக்க, ‘அவசரத்தேவை துரித விக்கெட்டுகள்’ என திவேதியாவை இறக்கி வெள்ளோட்டம் பார்த்தார் சாம்சன். சந்தித்த அவரது முதல் பந்தையே க்ருணால் சிக்ஸருக்கு அனுப்பி அடித்து ஆட ஆயத்தமானார். க்ருணாலின் வீக்னஸ், கட்டர்களும் ஆஃப் ஸ்பின்னுமே… பலம், லெக் ஸ்பின்னர்களை அடித்து வெளுப்பது! இந்த இடத்தில், சாம்சன் லெக் ஸ்பின்னரான திவேதியாவைக் கொண்டுவர, அந்த ஓவரில் மட்டும் பத்து ரன்களைக் குவித்தார் க்ருணால்.

ஒருபக்கமாகப் போய்க் கொண்டிருந்த போட்டியை, தங்கள்பக்கமும் லேசாகக் திரும்பிப் பார்க்க வைக்க, முஸ்தஃபிஜுர், க்ருணாலின் விக்கெட்டை வீழ்த்தினார். மூன்று ஓவரில், 25 ரன்கள் தேவைப்பட்டன. பொல்லார்டு ஸ்ட்ரைக்கில் வர, மோரீஸ் பந்துவீச, முதல் இரண்டு பந்துகள் சிக்ஸராகவும், பவுண்டரியாகவும் மாறின. மூன்றாவது பந்தும், பொல்லார்டின் ஹெல்மெட்டைப் பதம்பார்த்த நிலையில் அது பவுண்டரி லைனை நோக்கி நகர ஆரம்பித்தது. அப்போது பொல்லார்டு அந்தப் பந்தை பவுண்டரி லைனைத் தாண்டிச் செல்லுமாறு சைகைக் காட்டிக் கொண்டே இருந்து எல்லோரையும் சிரிக்க வைத்துவிட்டார். அந்த ஓவரிலேயே, 16 ரன்கள் வந்து, மும்பையின் வெற்றியை உறுதிசெய்துவிட்டது. இறுதியாக, 19-வது ஓவரிலேயே, பொல்லார்டு பவுண்டரியோடு இலக்கை எட்ட, ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில், அபார வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ்.

MI v RR

மிடில் ஆர்டர் பிரச்னையைச் சரிசெய்யாது, இஷானுக்கு பதிலாக, கூல்டரோடு களமிறங்கியது, ‘கண்ணாடிய திருப்பினா, வண்டி எப்படி ஓடும்!’ என்ற கேள்வியை எழுப்பினாலும், ஸ்ட்ரக் ஆகி நின்ற மும்பை எக்ஸ்பிரஸ், எண்ணெய் இட்டு, பழுதுநீக்கி, மறுபடியும் அதிவேகமாக ஓடத் தொடங்கியுள்ளது. ராஜஸ்தானை வீழ்த்தி, இரண்டு பாயிண்ட்ஸை அடித்துப் பிடுங்கி, ரோஹித்துக்கு “அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!” சொல்லி பரிசாகக் கொடுத்துள்ளார்கள் பல்தான்ஸ்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.