தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் மே மாதம் 2 -ம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மையத்தில் கொரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றும் வகையில் தேவையான ஏற்பாடுகளைச் செய்யக் கோரி தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சரும், அ.தி.மு.க வேட்பாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

வாக்கு எண்ணிக்கை

இந்த வழக்கில் ஆஜரான தேர்தல் ஆணைய வழக்கறிஞர், வாக்கு எண்ணிக்கைக்கு போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் வாக்குப்பதிவு நாளன்று கட்டுப்பாடுகள் முறையாகப் பின்பற்றப்பட்டதாகவும் தெரிவித்தார். அப்போது நீதிமன்றம், “தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவலுக்கு தேர்தல் ஆணையமே காரணம்” என காட்டமாக தெரிவித்தது.

தொடர்ந்து, “அரசியல் கட்சிகளும் இஷ்டம் போல் பிரசாரம் செய்ததே கொரோனா பரவலுக்கான காரணம். நீதிமன்றம் எவ்வளவு அறிவுறுத்தியும் தேர்தல் ஆணையம் காதில் வாங்கவில்லை. பிரசாரம் நடந்தபோதெல்லாம் வேற்று கிரகத்தில் இருந்தீர்களா? தேர்தல் ஆணையம் மீது கொலை குற்றமே சுமத்தலாம். கொரோனா தடுப்பு விதிகளை முறையாகப் பின்பற்றாவிட்டால், வாக்கு எண்ணிக்கைக்குத் தடை விதிக்க நேரிடும். வாக்கு எண்ணிக்கை நாளன்று அனைத்து கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுத்திருக்க வேண்டும்” என்றது காட்டமாக.

சென்னை உயர் நீதிமன்றம்

இந்நிலையில் தற்போது வரும் மே 1, 2 தேதிகளில் தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்தலாம் என நீதிமன்றம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்திருக்கிறது. “வாக்கு எண்ணிக்கையின் போது கூட்டம் கூடுவதை தவிர்க்கவே இந்த பரிந்துரைகளை வழங்குகிறோம். மக்களை பாதிக்காதவாறு முழுஊரடங்கு அறிவிப்பை ஏப்.28-ல் வெளியிட வேண்டும். மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கையின்போது, தேர்தல் பணியில் ஈடுபடுவோரை மட்டும் அனுமதிக்கலாம்” என்றது நீதிமன்றம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.