‘ஒரு சிங்கிள் மதர்’ ஆக தான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில், ஓர் இரவு நேரத்தில் பக்கத்து வீட்டுக்காரர்களால் தடுக்கப்பட்ட சம்பவத்தை விவரித்துள்ள ஒருவர், இந்தப் பகிர்வு மூலம் சமூகத்தின் மனப்பான்மையை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

கொச்சியைச் சேர்ந்த ‘சிங்கிள் மதர்’ சீதா லட்சுமி. இவர் மலையாள திரையுலகில் திரைப்படங்களுக்கு மார்க்கெட்டிங் மற்றும் விளம்பர நிபுணராக பணியாற்று வருகிறார். கொச்சியின் பிரதான இடமான பனம்பள்ளி நகரில் உள்ள ஒரு வாடகை பிளாட்டில், தனது ஏழு வயது மகள், தனது தாய் மற்றும் சகோதரருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், சில நாள்களுக்கு முன்பு ஒருநாள் இரவில் வேலை முடிந்து திரும்பிவரும்போது தனக்கு நேர்ந்த சங்கடத்தை ஃபேஸ்புக்கில் பதிவாக வெளியிட்டு இருக்கிறார்.

அதில், “ஏப்ரல் 12 ஆம் தேதி, நான் வேலை முடித்து இரவு நேரத்தில் வீடு திரும்பிய நேரத்தில் என்னை என் வீட்டிற்குள் அனுமதிக்க, எனது பக்கத்து வீட்டுக்காரர்கள் தயாராக இல்லை. அன்றைய தினம், நான் இரவு லேட்டாக வந்தபோது, இரவு 10 மணிக்குள் பிரதான வாயிலை மூட குடியிருப்பு சங்கத்தினரை சேர்ந்த ஒரு தரப்பினர் கூறியிருப்பதாக கூறி எனக்கு கேட் திறக்க பாதுகாப்பு காவலர் தயாராக இல்லை. இதனால், நான் ஒரு மணி நேரம் சாலையில் நிற்க வேண்டியிருந்தது. பிறகு எனது அம்மாவை வரச் செய்து உள்ளே சென்றால், பிரதான வாயிலில் என்னைத் தடுத்தனர். அவர்கள் என்னை உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை. பின்னர் போலீஸுக்கு போன் செய்து அவர்கள் வந்து பேசியபிறகுதான் எனக்கு அனுமதி கிடைத்தது.

கடந்த சில நாள்களாக ஒரு பெண்ணாக எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. இது நான் மட்டுமே எதிர்கொள்ளும் பிரச்னை அல்ல. என்னைப் போன்ற பல பெண்கள் இந்தப் பிரச்னையை சந்திக்கின்றனர். சமீபத்தில்தான் மீண்டும் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தேன். விவாகரத்து பெற்ற பெண் வேலைக்கு வெளியேறுவதையும், சொந்த விஷயங்களை நிர்வகிப்பதையும் சகித்துக்கொள்ள முடியாதவர்கள் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள். உண்மை என்னவென்றால், சமூகத்தில் ஓர் உயர் அந்தஸ்த்தில் இருப்பவர்கள்கூட இதை செய்ய தயங்குவதில்லை. இரவில் தாமதமாக வேலை செய்ய வேண்டிய ஒரு பெண்ணின் நன்னடத்தை பிம்பத்தை இதுபோன்றவர்கள் கெடுக்க தயங்குவதில்லை.

இதைவிட ஒருபடி மேலே சென்று, இந்த குடியிருப்புவாசிகள் எனக்கும் எனது வீட்டு உரிமையாளருக்கும் பிரச்னையை உருவாக்கியுள்ளனர். இது எனது வயதான தாயின் ஆரோக்கியத்தையும் எனது மகளின் மனதையும் பாதித்துள்ளது. ஆனால், வீட்டு உரிமையாளர் ஒத்துழைப்பு அளித்துள்ளார். நான் இங்கு வந்தலிருந்து சக குடியிருப்பாளர்களின் அணுகுமுறை இதுதான். இதுபோன்ற விஷயங்களில் வெளிப்படையாக பேச முடியாத பெண்களுக்காக நான் இந்தப் பதிவை வெளியிட்டுள்ளேன். காவல்துறையினர் அவர்களிடம் பேசி பிரச்னையை தீர்த்து வைத்ததால் நான் போலீஸ் புகார் கொடுக்கவில்லை” என்று கூறியிருக்கிறார். இவரின் இந்த பதிவுக்கு பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

தகவல் உறுதுணை: The News Minute

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.