கொரோனா தொற்று பரவுவதைத் தடுப்பதற்காக தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி மத்திய அரசும், மாநில அரசும் மக்களிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதலில் போட உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், வருகிற மே 1-ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் செலுத்த மத்திய அரசு அனுமதித்துள்ளது.

தனியார் மருத்துவமனைகள் மற்றும் மாநில அரசுகள், தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக வாங்கிக் கொள்ளவும் மத்திய அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. ஒரு, ‘டோஸ்’ தடுப்பூசிக்கான விலையை நிர்ணயிக்க தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசசு உத்தரவிட்டிருந்த நிலையில், சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம், தனது தயாரிப்பான ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி மருந்துக்கான விலையைத் தற்போது அறிவித்துள்ளது.

Covishield விலை உயர்வு

கோவிஷீல்டு தடுப்பூசி ஒரு டோஸ் ரூ.250 என்ற விலை நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதன் விலையை சீரம் நிறுவனம் உயர்த்தியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, இந்தத் தடுப்பூசியின் விலையானது தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 என்றும், மாநில அரசுகளுக்கு ரூ.400 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு குறித்து பெருமளவில் அதிருப்தி கிளம்பியிருக்கும் நிலையில், இன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த சீரம் நிறுவனத்தின் அடார் பூனவாலா, “சீரம் நிறுவனம் இந்தப் பெருந்தொற்றுக் காலத்தைப் பயன்படுத்தி அதிக லாபம் ஈட்ட நினைக்கவில்லை. இப்போதும் உலக நாடுகளின் தடுப்பூசிகளோடு ஒப்பிட்டால் கோவிஷீல்டின் விலை குறைவுதான். ஒரு டோஸூக்கு நாங்கள் 150 ரூபாயை இழக்கிறோம். மேலும், தடுப்பூசி விலையில் 50 சதவிகிதத்தை காப்புரிமைக்காக ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனத்திற்கும் செலுத்தி வேண்டியிருக்கிறது.” எனத் தெரிவித்திருக்கிறார்.

மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் விற்பனை விலையில் வேறுபாடு இருப்பதற்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியிருந்தது. இதற்கு பதில் அளித்த அவர், “மத்திய அரசுடன் ஏற்கெனவே செய்யப்பட்ட ஒப்பந்தப்படி விநியோகிக்கப்படும் தடுப்பூசிகள் மட்டுமே பழைய விலையில் இருக்கும். இனிமேலான விநியோகத்திற்கான அவர்களுக்கும் ஒரு டோஸூக்கு 400 ரூபாய்தான். ஏற்றுமதி செய்யப்படும் தடுப்பூசிகளுக்கான விலையும் வருங்காலத்தில் உயரும்” எனக் கூறியிருக்கிறார்.

தடுப்பூசி

Also Read: கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு… எப்படிப் போக்குவது?

இந்த நிலையில், உலகெங்கும் தடுப்பூசிகளின் விலை குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசி ஒரு டோஸின் விற்பனை விலை ரூ.200 – ரூ.250.

அமெரிக்காவைச் சேர்ந்த பைசர் பயோ என் டெக் நிறுவனம் தயாரிக்கும் தடுப்பூசியான ஃபைசர் ரூ.1,470-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த மாடர்னா தடுப்பூசியின் விலை- ரூ.1,885 – ரூ.2,790 என்கிர விலையில் விற்கப்படுகிறது.

ரஷ்யாவைச் சேர்ந்த ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் விலை ரூ.750-க்கும், அமெரிக்காவைச் சேர்ந்த ஜான்சன் அண்டு ஜான்சன் ரூ.750-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் வேகமாகப் பரவிவரும் கொரோனாவைக் கட்டுப்படுத்த, `தமிழகத்திற்குக் கூடுதலாக தடுப்பூசிகளை வழங்க வேண்டும்’ என மத்திய அரசுக்குத் தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்த நிலையில், 60,000 பாட்டில்கள் அடங்கிய ஆறு லட்சம் டோஸ் உடைய `கோவிஷீல்டு’ தடுப்பூசியை மத்திய அரசு தமிழகத்துக்கு ஒதுக்கியிருக்கிறது. இந்தத் தடுப்பூசி மருந்து பாட்டில்கள் புனேயில் உள்ள மத்திய மருந்துச் சேமிப்பு கிடங்கிலிருந்து ‘இண்டிகோ ஏர்லைன்ஸ்’ விமானத்தில் 20.04.2021-ம் தேதி மதியம் சென்னைக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.