ஒரே போட்டி ஒட்டுமொத்த பாயின்ட்ஸ் டேபிளையும் திருப்பிப் போட்டுவிடும் என்பது மறுபடி நிரூபணமாகி உள்ளது, சன்ரைசர்ஸ் – பஞ்சாப்புக்கு இடையேயான போட்டி வாயிலாக. புள்ளிப் பட்டியலின் கடைசி இடத்திலிருந்த சன்ரைசரஸ், தனது பௌலர்களின் எழுச்சியால், அசத்தி, ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி அசத்தி இருக்கிறது.

பஞ்சாப்புக்கு எதிரான 16 போட்டிகளில், 11 போட்டிகளில், சன்ரைசர்ஸே வென்றுள்ளது என்பதால், சன்ரைசர்ஸ் கண்களில் இரண்டு புள்ளிகள் ஜொலிக்கத் தொடங்கின.

டாஸ் வென்ற கே எல் ராகுல் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார். வெற்றியை எய்துவதற்கான வியூகமாய், இரண்டு பக்கமும் மொத்தமாக மாற்றங்களைச் செய்திருந்தனர், இரு கேப்டன்களும். ஒவ்வொரு அணியிலும், மூன்று வீரர்கள்வரை, ஹோல் சேலாக மாற்றப்பட்டிருந்தனர். குறிப்பாக, கேன் வில்லியம்சன், கேதர் ஜாதவ் இருவரையும் சன்ரைசர்ஸ் கொண்டு வந்திருக்க, பஞ்சாப்பில் ஹென்ரிக்ஸ் மற்றும் ஃபாபியன் ஆலன் ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர்.

PBKS v SRH

ராகுலும் மயாங்க்கும் ஓப்பனர்களாகக் களமிறங்க, அபிஷேக் ஷர்மாவை வைத்துத் தாக்குதலைத் தொடங்கினார் வார்னர். முதல் ஓவரிலேயே, மயாங்க் தந்த கேட்ச் வாய்ப்பை ரஷித் நழுவவிட, டெல்லிக்கு எதிரான மயாங்கின் இன்னிங்ஸ், ஒருமுறை வார்னரின் கண்களை மங்கச் செய்தது. எனினும் அதில் நட்சத்திரங்களை மின்ன வைத்தார், புவனேஷ்வர். தான் வீசிய இரண்டாவது ஓவரிலேயே, ராகுலின் விக்கெட்டை வீழ்த்தி, மங்களகரமாய்த் தொடங்கிவைத்தார் புவி.

கேப்டன் போய் கெய்லை அனுப்பி வைக்க, இந்த இருவர் கூட்டணி கொஞ்சம் அதிரடி ஆட்டத்தைக் கையிலெடுத்தது. ஒட்டுமொத்த, பஞ்சாப் இன்னிங்ஸிலும், அதிக நேரம் தாக்குப்பிடித்தது இந்தக் கூட்டணிதான். 23 பந்துகளில், 24 ரன்கள் எடுத்த இவர்களது கூட்டணிக்கு முடிவுரை எழுதினார் கலீல். 22 ரன்களை மட்டுமே சேர்த்திருந்த மயாங்க் வெளியேற, பூரண் உள்ளே வந்தார். வந்த வேகத்தில், ஒரு பந்தைக்கூடச் சந்திக்காமல், வார்னரின் டைரக்ட் ஹிட்டுக்கு விடையின்றி, ரன் அவுட்டில் பருத்தி மூட்டையாய், குடோனுக்குத் திரும்பினார் பூரண். இந்தத்தொடரில் இதுவரை நடந்துள்ள, நான்கு போட்டிகளில், ஒன்பது ரன்களை மட்டுமே பூரண் எடுத்துள்ளார். இதில் மூன்று டக் அவுட்டுகளும் அடக்கம் என்பதுதான் வேதனையான விஷயம். 7.1-க்கு 39/3 என பம்மியது பஞ்சாப்.

PBKS v SRH

அபாயகரமான கெய்லின் விக்கெட்டையும் வீழ்த்தும் நோக்கில், அவரது விக்கெட்டை டி20-ல் நான்கு முறை வீழ்த்தியுள்ள ரஷித் கானை வார்னர் உள்ளே கொண்டுவர, அவரது விக்கெட்டை ஐந்தாவது முறையாக இன்றும் வீழ்த்தினார் ரஷீத்‌. கெயில், நம்பிக்கை அளிக்கும் வகையில் ஆடிக் கொண்டிருக்கிறார், 10-க்கும் அதிகமான பந்துகளைச் சந்தித்துவிட்டார். இனிவரும் ஒவ்வொரு பந்தும், பவுண்டரி லைனோடு பழங்கதை பேசும் என்பதால், கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்த ரசிகர்களையும் சுருண்டு படுக்க வைத்துவிட்டனர் பஞ்சாப்பின் பேட்ஸ்மென்கள்.

ஹூடா வந்தால் மாறும், ஹென்ரிக்ஸ் வந்தால் நிலைமை சீராகும், ஆலன் வந்தால் அசத்தி விடுவார் என்ற ஒவ்வொரு வீரரின் மீதான நம்பிக்கையையும் தகர்த்துக் கொண்டே சென்றனர் சம்பந்தப்பட்டவர்கள். ஹூடா மற்றும் ஹென்ரிக்ஸின் விக்கெட்டுகளை, அபிஷேக் வீழ்த்த, ஃபேபியன் ஆலனையும், கலீல் அனுப்பி வைக்க, நூறு பந்துகளில், 101/7 எனப் பரிதாபமான நிலையில் இருந்தது பஞ்சாப்.

மறுபுறம் ஷாருக்கான் மட்டுமே, இரண்டு சிக்ஸர்களைத் தூக்கி, 22 ரன்களுடன் போராடிக் கொண்டிருக்க, சிஎஸ்கேவுக்கு எதிராக தவறவிட்ட அவரது அரைசதம் இன்றுவந்து விடுமென ரசிகர்கள் நம்ப, ‘வாய்ப்பில்ல ராஜா’ என, அவரது விக்கெட்டையும் கலீல் வீழ்த்தி அசத்தினார். அதன்பின், சித்தார்த் கௌல் வீசிய போட்டியின், கடைசி ஓவரில், முருகன் அஷ்வின், பேர்ஸ்டோவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க, ‘யாருக்கும் விக்கெட் தர மாட்டேன்!’, என்னும் உறுதியுடன் தனது விக்கெட்டை ரன் அவுட்டாக மாற்றிச் சென்றார் ஷமி.

விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் வீழ்த்தி, சன்ரைசர்ஸ் அசத்தியது என்றாலும், பஞ்சாப் பேட்ஸ்மேன்கள், கொஞ்சமும் பொறுமையின்றி, அட்டாக்கிங் கிரிக்கெட் மட்டுமே ஆடுவோமென அடம்பிடித்து ஆட்டமிழந்து சென்றதனால், 19.4 ஓவர்களில், 120 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பஞ்சாப், போட்டியை அந்தத் தருணத்திலேயே கிட்டத்தட்ட முழுமையாக இழந்துவிட்டது.

PBKS v SRH

கடந்த ஆண்டு, 127 ரன்களை இதே சன்ரைசர்ஸுக்கு எதிராக, இறுதி ஓவரில் கடைசி நொடி மாயம் செய்து டிஃபெண்ட் செய்த வரலாறு பஞ்சாப்புக்கு இருக்கிறது என்பதால், அதை நினைவூட்டிக் கொண்டே, ‘அன்றைக்குச் சாத்தியமெனில், இன்றைக்கும் சாத்தியமே!’ என்ற எண்ண ஓட்டத்தோடே தொடங்கியது அந்த அணி. நிதானமான ரன்குவிப்பு, விக்கெட் விழாமல் பார்த்துக் கொள்வது, இவை இரண்டின் கூடுதலின் சமமே வெற்றிக்கான சமன்பாடு என்பதனை சன்ரைசர்ஸ் தெளிவாகவே உணர்ந்திருந்தது. ஏனெனில், மூன்று ஓவர்களில், ஐந்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்து, வெறும் 13 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையிடம் வீழ்ந்த, தோல்வி கற்றுத்தந்த அனுபவப் பாடத்தோடே போட்டியைத் தொடங்கியது, சன்ரைசர்ஸ்.

பஞ்சாப்பின் பக்கம், பேட்டிங்கைப் பலப்படுத்தும் நோக்கில், மூன்று பிரதான பௌலர்களோடு, ஆலன், ஹெர்குலஸை மட்டுமே நம்பிக் களமிறங்கும் கேஎல் ராகுலின் முடிவு சரிதானா என்பதற்கு அடுத்தசில ஓவர்களிலேயே பதில் தெரிந்துவிட்டது. விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் திணறியது பஞ்சாப்.

ஓப்பனர்களாகக் களமிறங்கிய வார்னர் மற்றும் பேர்ஸ்டோ இணையின் ஆட்டம், குறைந்த ஸ்கோரை சேஸ் செய்வதற்கான சகல லட்சணங்களும் பொருந்தியதாய் இருந்தது. பவர்பிளேயில் பக்குவமாய், 50 ரன்களைச் சேர்த்த இந்த ஜோடி, தாங்கள் அடித்த 73 ரன்களில், 48 சதவிகிதம் ரன்களை சிங்கிள் மற்றும் இரண்டு ரன்கள் மூலமாக எடுத்திருந்தது. தவறான பந்துகள், 2 சிக்ஸர்கள் மற்றும், ஐந்து பவுண்டரிகளாக மாற்றப்பட்டு, மீதமிருந்த 52 சதவிகித ரன்களை எடுத்திருந்தனர். இதில் 37 ரன்களை வார்னர் பொறுமையாக அடித்திருந்தார்.

PBKS v SRH

விக்கெட் வரம்வேண்டி நின்ற பஞ்சாப், பத்து ஓவருக்குள் மூன்று நான்கு பௌலிங் மாற்றங்களைப் பார்த்து விட்டது. அடுத்த ஒரு போட்டியை இங்கேதானே ஆடப்போகிறோம், பயிற்சியாகவாவது இருக்கட்டுமென, எல்லாரையும் முயன்று பார்த்தார் ராகுல். இறுதியாக, தன்னுடைய இரண்டாவது ஓவரை வீச வந்த ஆலன், வார்னரின் விக்கெட்டை, ஷார்ட் பாலால் வீழ்த்தினார். 37 ரன்களோடு வார்னர் வெளியேறினார்.

ரசிகர்கள் காணக்காத்திருந்த கேன் வில்லியம்சன் உள்ளே வந்தார். 9 விக்கெட்டுகள் கைவசம், 59 பந்துகளில், 48 ரன்கள் வேண்டுமென்பதே வெற்றியை முடிவு செய்து விட்டதால், சம்பிரதாயமாக வீசப்பட்டன மீதமிருந்த ஓவர்கள். பஞ்சாப்பும் கொஞ்சமும் போராடாமல் படுத்தே விட்டது, அடுத்த போட்டியில் பார்த்துக் கொள்ளலாம் என!

PBKS v SRH

சன்ரைசர்ஸும் படுமந்தமாகவே ரன்சேர்த்தது. வார்னர் சென்றபின், ஒரு பவுண்டரிகூட வராமல் போக, அதை நிவர்த்தி செய்யும் விதமாக, பவுண்டரியோடு அரைசதம் கடந்தார் பேர்ஸ்டோ.

ஸ்கோர்ஸ் லெவலாகி இருந்த நிலையில், அர்ஷ்தீப் வீசிய வொய்டினால், எட்டு பந்துகள் மிச்சமிருந்த நிலையில், இலக்கை எட்டிய சன்ரைசர்ஸ், ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில், தங்களது கணக்கை இந்த ஐபிஎல்லில் முதன்முதலாகத் தொடங்கி உள்ளது.

பஞ்சாப்போ, போன சீசனின் முதல் பாதியில் எழுதி வைத்த அதே ஸ்க்ரிப்டை, தூசி தட்டி எடுத்து திரும்பவும் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.