ரிசல்ட் அறிவிக்கப்பட இன்னும் இரு வார காலம்தான் உள்ளது. ஆனால், அந்த காலத்தைக் கூட கடக்க முடியாமல் தி.மு.க உடன்பிறப்புகளும், அ.தி.மு.க ரத்தத்தின் ரத்தங்களும் அல்லோலப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தினந்தோறும் இரு கட்சித் தொண்டர்களும் தங்களுக்குத் தெரிந்த பத்திரிகையாளர்கள், அரசியல் விமர்சகர்கள், டி.வி நெறியாளர்கள் என ஒவ்வொருவரிடமும் தொடர்ந்து கேள்வி எழுப்பிக்கொண்டே இருக்கிறார்கள்.

வாக்கு எண்ணிக்கை

இதுகுறித்து தி.மு.க உ.பி-க்களிடம் பேசினோம். “ஏப்ரல் 6-ம் தேதியிலிருந்து மே 2-ம் தேதி வரையிலான காலகட்டம் எங்களுக்கு திக் திக் உணர்வைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. 10 வருடங்களாக ஆட்சியில் இல்லை, பெரும் தொகையைக் கொடுத்து ஐபேக்கை பணியமர்த்தி இருக்கிறது தலைமை. இந்த சூழலில் ரிசல்ட் எப்படி வருமோ என்ற பதைபதைப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கிறதே தவிர குறையவில்லை.

வாக்குப் பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூம் அமைந்துள்ள கல்லூரிகளில் நாங்கள் தினமும் மூன்று ஷிஃப்ட் போட்டு கண்காணித்து வருகிறோம். அப்படியும் கூட இரவில் ஸ்ட்ராங் ரூம் அருகில் ஏதாவது நடந்துகொண்டிருக்கிறது. ஏஜென்ட்டுகள் உஷாராக இல்லையென்றால், ஸ்ட்ராங் ரூமைத் திறக்கும் வாய்ப்புக் கூட இருக்கிறது. இந்த நிலையில், இரவு நேர ஊரடங்கு வேறு அமல்படுத்தப்பட்டுள்ளதால், இரவு 10 மணிக்கு மேல் இன்னும் உஷாராக இருக்க வேண்டிய தேவை இருக்கிறது.

அண்ணா அறிவாலயம்

தலைவர்களுக்கும் இந்த பதைபதைப்பு இல்லாமல் இல்லை. ஆனால், அதனை வெளிக்காட்டிக்கொள்ளக் கூடாது என்பதற்காக தலைவர் சுற்றுலா சென்றுவிட்டார். இன்னும் பிற இரண்டாம் கட்டத் தலைவர்கள் தங்களது வீடுகளில் முடங்கிவிட்டனர். அப்படியும் ஒவ்வொரு நாளும் வாக்கு எண்ணும் மையத்தைக் கண்காணித்துக் கொண்டிருக்கும் ஏஜென்ட்டுகளிடம் அவ்வப்போது நடப்பவைக் குறித்துக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

தலைவர்களுக்கே அப்படி என்றால் எங்கள் நிலைமையை யோசித்துப் பாருங்கள். அதனால்தான், எங்களுக்குத் தெரிந்த பத்திரிகையாளர்கள், விமர்சகர்களிடம் தினமும் கால் செய்து நிலைமை குறித்து விசாரித்து வருகிறோம்” என்றனர்.

அ.தி.மு.க ர.ர-க்களோ, “வரும் கருத்துக் கணிப்புகள், எக்ஸிட் போல்கள் எல்லாமே தி.மு.க ஆட்சி என்றுதான் வருகிறது. 10 ஆண்டுகால அ.தி.மு.க ஆட்சி மீது மக்களுக்கு எந்த ஒரு பெரிய எதிர்ப்பும் இல்லை என்பது வாக்குப்பதிவு சதவிகிதத்தைப் பார்க்கும்போதே தெரிகிறது. கடைசி இரு தினங்களில், மாநிலம் முழுக்க எங்கள் ஆளும் தரப்புக்கு மக்களின் ஆதரவுக்குரல்கள் அபரிமிதமாக அதிகரித்தது. இதனைப் பார்த்து தி.மு.க வேட்பாளர்களே கதிகலங்கிப்போய் கிடக்கிறார்கள்.

அ.தி.மு.க தலைமை அலுவலகம்

இப்படியான சூழலில் எப்படி தி.மு.க-வுக்கு ஆதரவான சூழலில் நிலவுகிறது? என்பது புரியவில்லை. இதனால்தான், அடிக்கடி எங்களுக்கு நெருக்கமான பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பொது வாழ்க்கையில் உள்ளவர்களிடம் நிலைமையை அப்டேட் செய்துகொண்டே இருக்கிறோம்” என்றனர்.

எத்தனை முறை கேட்டாலும், பெட்டிக்குள் இருப்பது புதையலா? அல்லது பூதமா? என்பது மே 2-ம் தேதிதான் தெரியும்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.