Press "Enter" to skip to content

“காதலுக்குகூட ஓகே… ஆனால் சினிமாவுக்கு..!”- ’என்ட்ரி’ அனுபவம் பகிரும் நடிகை மிருளாணி ரவி

டப்ஸ் ஸ்மேஷ் வீடியோக்கள் மூலம் சமூகவலைதளங்களில் பிரபலமாகி அதன் பின்னர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’ படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தவர் நடிகை மிருளாணி ரவி. அதனைத்தொடர்ந்து ஜிகர் தண்டாவின் தெலுங்கு ரீமேக், சாம்பியன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவர் நடித்திருக்கும் ‘கோப்ரா’ ‘எனிமி’ , ‘எம்.ஜி.ஆர் மகன்’ உள்ளிட்டப் படங்கள் ரிலீசுக்காக காத்திருக்கின்றன. அவரிடம் புதியதலைமுறை வாயிலாக உரையாடினோம் … அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும்….!

உங்களது பெற்றோர் மிகவும் கண்டிப்பானர்வகள் என கேள்விப்பட்டோம். எப்படி சினிமாவிற்கு வர சம்மதித்தார்கள்?

சமூக வலைதளங்களில் கிடைத்த வரவேற்பின் காரணமாக எனக்கு திரையில் தோன்ற பல வாய்ப்புகள் வந்தன. ஆனால் எனது பெற்றோரின் கண்டிப்பின் காரணமாக அனைத்தையும் நிராகரித்தேன்.‘சூப்பர் டீலக்ஸ்’ பட வாய்ப்பு வந்த போது, மொத்த படப்பிடிப்பு நாட்களே ஐந்து நாட்கள் தான் என்றனர். அதிலும் எனக்கு ஏலியன் போன்ற கதாபாத்திரம் தான்.

image

அதனால் அந்த வாய்ப்பை நான் விட விரும்பவில்லை. பெற்றோரிடம் கெஞ்சினேன். ஒரே ஒரு முறை என்னை பெரிய திரையில் பார்க்க வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்தினேன். அதற்கு அவர்கள் நீ யாரையாவது காதலித்தால் கூட நாங்கள் சம்மதித்திருப்போம். ஆனால் சினிமாவிற்கு செல்கிறேன் என்கிறாயே என்றனர்.. இருப்பினும் நான் அவர்களை சமாதானம் செய்து சம்மதம் வாங்கிவிட்டேன்.

பெரிய திரையில் முதன் முறையாக உங்களை பார்த்த தருணம் பற்றி?

சத்யம் தியேட்டரில்தான் (தற்போதைய பிவிஆர்) முதன் முறையாக என்னை திரையில் பார்த்தேன். எனக்கு புல்லரித்து விட்டது. அந்தத்தருணத்தில் மகிழ்ச்சியை தாண்டிய ஒரு உணர்ச்சியில் திளைத்திருந்தேன்.

ஜிகர்தண்டா தெலுங்கு ரீமேக்கில் நீங்கள் கிளாமராக நடித்தது சமூக வலைதளங்களில் அதிருப்தியை பெற்றதே?

இயக்குநர் அந்த கதையில் என்னுடைய கதாபாத்திரத்தை பற்றி விவரிக்கும் போது அதை ஒரு நகைச்சுவை கதாபாத்திரம் போன்று விவரித்தார். அதனால்தான் அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதித்தேன். ஆனால் அது சமூக வலைதளங்களில் அதிருப்தியை பெற்றது. அப்போது, இந்தப்படத்தை நாம் தவிர்த்திருக்க வேண்டுமோ என்று நினைத்தேன். அதே சமயம், ஒவ்வொரு முறையும் நாம் இவ்வாறு யோசிக்க முடியாது என்று நினைத்து அதனை கடந்து சென்று விட்டேன்.

image

என்னைப்பொருத்தவரை கிளாமர் காட்சிகள் என்பது, பெற்றோருடன் திரையரங்கில் அமர்ந்து பார்க்கும் போது அந்தக்காட்சிகள் முகம் சுழிக்காத வகையில் இருக்க வேண்டும் அவ்வளவுதான்.

விக்ரம் நடிப்பில் உருவாகிவரும்  ‘கோப்ரா’ படத்தில் உங்களின் கதாபாத்திரம் பற்றி?

நிச்சயம் என்னுடைய கதாபாத்திரம் படத்தில் ரொம்ப எமோஷனலாக இருக்கும். என்னுடைய போர்ஷன் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும். எனக்கு படத்தில் ஒரு பாடல் இருக்கிறது. அதை ஏ.ஆர்.ரஹ்மான் பாடியிருக்கிறார். அதை ஒவ்வொரு முறை நினைக்கும் போதும் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.

image

விக்ரமுடன் இணைந்து நடித்தேன். அவரின் அர்ப்பணிப்பு என்னை வியக்க வைத்தது. நாம் எவ்வளவு பெரிய இடத்தை அடைந்தாலும், அனைவரிடமும் ஒரு ஆத்மார்த்தமான புன்முறுவலோடு பழக வேண்டும் என்பதை அவரிடம் இருந்து கற்றுக்கொண்டேன். நிச்சயம் படம் வேற லெவலில் இருக்கும்.

‘எம்.ஜி.ஆர் மகன்’ படத்தில் நாங்கள் எப்படிப்பட்ட மிருளாணியை பார்க்கலாம்?

க்யூட்டான மிருளாணியை பார்க்கலாம். நான் 60 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொள்வது இதுவே முதன்முறை. அதனால் கொஞ்சம் கடினமாக இருந்தது. இருப்பினும் சினிமாவின் மீது கொண்ட காதலால் அந்த கஷ்டம் என்னை பெரிதாக பாதிக்கவில்லை.

image

படத்தில் நிறைய சீனியர் கலைஞர்கள் இருந்தார்கள். அவர்களிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன். அந்த 60 நாட்களும் நாங்கள் அனைவரும் குடும்ப உறுப்பினர்கள் போல்தான் பழகினோம்.

நீங்கள் ஒரு அசைவ உணவுப் பிரியர் என்று கேள்விபட்டோம். தற்போது சைவ உணவு பிரியராக மாறியதற்கு காரணம் என்ன?

என்னுடைய நண்பர்தான் என்னை சைவ உணவுக்கு மாற பரிந்துரை செய்தார். சும்மா ஒரு வாரம் முயற்சி செய்யலாம் என்று தான் ஆரம்பித்தேன். சைவ உணவுகள் உண்ணும் போது கிடைத்த பீல் என்னை அதன்பக்கம் அதிகமான கவனத்தை செலுத்த வைத்தது.” என்றார்.

– கல்யாணி பாண்டியன் 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM