இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது. பல மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப் பட்டிருக்கின்றன. கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் போதிலும், கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு இந்த நேரத்திற்கு அதிக உயிரிழப்புகள் பதிவாகி இருக்கிறது. கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்த ஏதுவாக மத்திய அரசு மேற்கொள்ள வேண்டிய முக்கிய மாற்றங்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு 5 முக்கிய பரிந்துரைகளை உள்ளடக்கிய கடிதம் ஒன்று எழுதியிருக்கிறார்.

மன்மோகன் சிங்

அந்த கடிதத்தில் மன்மோகன் சிங், “ஒரு வருட காலத்திற்கும் மேலாக ஒட்டுமொத்த உலகமும், இந்தியாவும் கொரோனா வைரஸுக்கு எதிராகப் போராடிக்கொண்டிருக்கிறது. ஆளுக்கொரு மூலையில் மாட்டிக்கொண்டு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைக் காண முடியாமலும், பேரக் குழந்தைகள் தங்கள் தாத்தா, பாட்டிகளைக் காண முடியாமலும் தவித்துக் கொண்டிருக்கின்றனர். பலர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிர்கதியாகி நிற்கிறார்கள். நோய்த்தொற்று கோடிக்கணக்கான ஏழைகளை மீண்டும் வறுமை நிலைக்குத் தள்ளியிருக்கிறது. இரண்டாம் அலையை எதிர் கொண்டு வருகிறோம். நாட்டு மக்கள் மீண்டும் எப்போது தங்கள் வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நோய்த்தொற்றிற்கு எதிரான போராட்டத்தில் நாம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மிகவும் அதிகம். அதிலும் குறிப்பாக நாம் நாட்டில் தடுப்பூசி விநியோகத்தையும், பயன்பாட்டையும் அதிகரிப்பது எப்படி என்பதில் தான் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று நினைக்கிறேன்.

நான் இந்த விஷயத்தில் சில பரிந்துரைகளை உங்கள் கனிவான கவனத்திற்கு முன்வைக்க விரும்புகிறேன்.

  • முதலாவது யோசனை :

    மத்திய அரசு இந்தியாவில் அடுத்த 6 மாதங்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளதற்கு ஏற்றார் போல் தடுப்பூசி இருப்பை உறுதி செய்ய வேண்டும். அரசு எந்தெந்த நிறுவனங்களில் எவ்வளவு ஆர்டர் செய்திருக்கிறது என்பது வெளிப்படையாக இருக்க வேண்டும். வெவ்வேறு கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களிடம் முன்கூட்டியே கூடுதல் ஆர்டர்களை செய்ய வேண்டும். அதன் மூலம், தடுப்பூசி தட்டுப்பாட்டை நம்மால் தவிர்க்க முடியும். தடுப்பூசி விநியோகம் சீராக இருக்க வேண்டும்.

கொரோனா
  • இரண்டாவது யோசனை :

    இந்தியாவில் கொரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்துகள் எங்கிருந்து பெறப்படுகிறது. ஏதன் அடிப்படையில் மாநிலங்களுக்கு விநியோகிக்கப் படுகிறது என்பது வெளிப்படையாக இருக்க வேண்டும். குறிப்பாக, 10 சதவீதம் தடுப்பூசிகளை அரசு அவசர தேவைக்காக இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும். அதே போல், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி விநியோகம் சீராக இருக்க வேண்டும். அப்போது தான் தடுப்பூசி செலுத்தும் பணியினை மாநில அரசுகள் சுலபமாக மேற்கொள்ள ஏதுவாக இருக்கும்.

  • மூன்றாவது யோசனை :

    இந்தியாவில் தற்போது 45 வயது மேற்பட்டவர்களுக்கு மிகத்தீவிரமாகத் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதே போல், 45 வயதுக்கு உட்பட்டவர்களாக இருந்தாலும் முன்கள பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் மத்திய அரசு 45 வயதுக்கு உட்பட்ட முன்கள வீரர்களைத் தடுப்பூசிக்கு எவ்வாறு வகைப்படுத்தியிருக்கிறது என்பதனை மாநிலங்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயம் நிலவுகிறது. ஆசிரியர்கள், பேருந்து ஓட்டுநர்கள், பஞ்சாயத்து அலுவலர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் என அனைவரும் முன்கள பணியாளர்கள் தான். எனவே இவர்கள் அனைவருக்கும் 45 வயதுக்கு உட்பட்டவர்களாக இருந்தாலும் தடுப்பூசி செலுத்த மாநில அரசுகள் விரும்புகின்றன. அதனால், மத்திய அரசு இதனை அவர்களுக்குத் தெளிவு படுத்த வேண்டும்.

கொரோனா தடுப்பூசி
  • நான்காவது யோசனை :

    கடந்த 10 – 20 வருடங்களில் இந்தியா உலகின் மிகப்பெரிய மருந்து தயாரிப்பாளராக முன்னேறி இருக்கிறது. அதற்கு மத்திய அரசின் கொள்கைகள் மிகப்பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறது. அதற்காக மத்திய அரசுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், இந்தியாவில் மருந்து மற்றும் மருத்துவத்துறையில் தனியாரின் கையே ஓங்கியிருக்கிறது. இந்த நேரத்தில் மத்திய அரசு தடுப்பூசி உற்பத்தியை அதிகப்படுத்துவது குறித்துச் சிந்திக்க வேண்டும்.

    தடுப்பு மருந்து உற்பத்தி நிறுவனங்களின் உற்பத்தி திறனை அதிகரிக்க வேண்டும். அதற்கு, அரசு அவர்களுக்குச் சலுகைகளையும், மானியங்களையும் வழங்கி உதவ வேண்டும். கூடுதலாக, சட்டத்தில் கட்டாய உரிம விதிமுறைகளைச் செயல்படுத்த வேண்டிய நேரம் இது. அப்படிச் செய்வதன் மூலம் நல்ல தரமான தடுப்பு மருந்தை நம்மால் இந்தியாவில் தயாரிக்க முடியும். இஸ்ரேல் ஏற்கனவே கட்டாய உரிமம் வழங்கும் விதிமுறையை நடைமுறைப்படுத்தி இருக்கிறது. நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகளவில் இருப்பதால் இந்தியாவும் மிக விரைவாக இதைச் செய்யும் என்று நான் நம்புகிறேன்.

  • ஐந்தாவது யோசனை :

    உலகளவில் அமெரிக்காவுக்கு அடுத்த படியாக இந்தியாவில் தான் கொரோனா வைரஸின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கிறது. இந்த நேரத்தில் நாட்டு மக்களுக்குப் பல இடங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதை நம்மால் பார்க்க முடிகிறது. இந்தியாவில் குறைந்த அளவிலேயே தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு இந்த நேரத்தில் சில துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஐரோப்பிய மருந்து நிறுவனம் மற்றும் மருந்து மேலாண்மை நிறுவனம் ( USFDA) ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்டுள்ள நம்பகத்தன்மையுடைய தடுப்பு மருந்துகளை உள்நாட்டுச் சோதனைகள் ஏதுமின்றி இறக்குமதி செய்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும். அரசு உற்பத்தி நிறுவனங்களுக்கு அனுமதி அளித்தால் மட்டுமே தடுப்பூசி உற்பத்தியை நம்மால் அதிகரிக்க முடியும்.

தடுப்பு மருந்து

கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை முன்பை விடவும் மிகவும் வீரியமாக இருக்கிறது. ஒட்டுமொத்த இந்தியாவும் நோய்க்கு எதிராகப் போராடிக்கொண்டிருக்கிறது. தடுப்பூசி செலுத்திக் கொள்வோரின் எண்ணிக்கையை அதிகரித்தால் மட்டுமே இந்தியாவில் பாதிப்பைக் குறைக்க முடியும். நம் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் மிகக் குறைந்த அளவிலான மக்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. இந்த எண்ணிக்கையை நாம் அதிகரிக்க வேண்டும். அதன் மூலம் நம்மால் மிகச் சிறப்பாகச் செயல்பட முடியும்.

மன்மோகன் சிங்கின் கடிதம்
கடிதம்

அரசாங்கம் எனது பரிந்துரைகளை ஏற்று அவற்றை உடனடியாக நடைமுறைப்படுத்தும் என்று நம்புகிறேன்’ என்று தான் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.