பெட்ரோல், டீசல் விலை உயர்வு பற்றி போதுமான அளவுக்கு பொங்கியாகிவிட்டது. இனி அதில் கவனம் செலுத்தாமல் மாற்று வழிகள் குறித்து திட்டமிடுவதிலும் சிந்தித்து செயல்படலாம். ஒருவேளை நாம் அப்படி சிந்திக்க வேண்டும் என்பதற்காகக் கூட பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டிருக்கலாம். சரி, அரசியலைவிட்டு விட்டு கொஞ்சம் யதார்த்தம் பேசுவோம் வாங்க.

சர்வதேச அளவில் சுற்றுச்சூழல் மோசம் அடைந்துள்ள 20 நகரங்களில் பாதிக்கும் மேல் இந்தியாவில்தான் இருக்கின்றன. அதனால் பெட்ரோல், டீசல் குறித்த கவலை இல்லாமல் இருக்க வேண்டும்; அதேபோல சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்க வேண்டும் என்றால், அதற்கு எலெக்ட்ரிக் வாகனங்கள்தான் ஒரே வழி.

தற்போதுதான் எலெக்ட்ரிக் வாகனங்கள் வரத்தொடங்கி இருக்கின்றன. இவற்றின் விலை சாதாரண வாகனங்களுடன் ஒப்பிடும்போது மிக அதிகம். சர்வீஸ், சார்ஜ் ஏற்றும் மையத்துக்கு எங்கு செல்வது என பல கேள்விகள் நின்றாலும், இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைக்கும் என்றே தோன்றுகிறது.

ஆட்டோமொபைல் துறை நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார்கள். சில ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் இந்தப் பிரிவில் களம் இறங்கி இருப்பதால் இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு எலெட்ரிக் வாகனங்கள் என்பது இயல்பானதாக மாறக்கூடும்.

குறிப்பாக, ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் பெரும் தொகையை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரிவில் முதலீடு செய்திருக்கிறது. ஓலா என்றதும் வாடகை டாக்ஸிதான் நம் நினைவுக்கு வரும். ஆனால், ஓலா நிறுவனம் ஆட்டோமொபைல் நிறுவனமாக மாறி சில ஆண்டுகள் ஆகிவிட்டன. சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தற்போது யுனிகார்ன் (7500 கோடி ரூபாய்க்கு மேலான சந்தை மதிப்பு கொண்ட நிறுவனம்) பட்டியலில் இணைந்திருக்கிறது.

image

தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி அருகே 500 ஏக்கர் பரப்பளவில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எலெட்ரிக் வாகன தொழிற்சாலை அமைய இருக்கிறது. கடந்த டிசம்பரில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஆண்டு ஜனவரியில் இதற்கான முதல்கட்ட பணிகள் (பேஸ் 1) தொடங்கப்பட்டது. சர்வதேச அளவில் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமாக இந்த மையம் மாறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆண்டுக்கு ஒரு கோடி வாகனங்கள் இந்த ஆலை மூலம் தயாரிக்கப்படும் என தெரிகிறது. முதல் கட்டமாக வரும் ஜூன் முதல் 20 லட்சம் வாகனங்கள் தயாரிக்க முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. அடுத்த ஆண்டு ஜூன் முதல் மொத்த உற்பத்தி திறனை (1 கோடி வாகனங்கள்) எட்டும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆலை திட்டத்துக்கு சுமார் 2400 கோடி ரூபாயை முதலீடு செய்ய ஓலா திட்டமிட்டிருக்கிறது.

இ-வாகன சந்தை

சர்வதேச அளவில் எலெட்க்ரிக் வாகன சந்தை வேகமாக வளரும் சந்தையாக இருந்தாலும் இந்தியாவில் இப்போதுதான் வேர் பிடிக்க தொடங்கி இருக்கிறது. சீனாவில் ஆண்டுக்கு 2.8 கோடி எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையாகின்றன. ஐரோப்பாவில் 40 லட்சம் அளவுக்கு விற்பனையாகின்றன. ஆனால், இந்தியாவில் தற்போதுதான் 1.50 லட்சம் அளவுக்கு விற்பனையாகின்றன. இதில் பெரும்பாலும் 25 கிலோ மீட்டர் வேகத்தில் செல்பவையாக இருக்கின்றன. இந்தியாவில் ஆண்டுக்கு 1.7 கோடி இரு சக்கர வாகனங்கள் விற்பனையாகின்றன. அப்படியானால் மொத்த இரு சக்கர வாகனத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பங்கு மிக மிக குறைவு. ஆனால் இந்த நிலை தொடர்ந்து மாறும் என்பதே கணிப்பாக இருக்கிறது.

எலெக்ட்ரிக் வாகனங்களை பொறுத்தவரை உதிரிபாகங்கள் என்பது முக்கியமானது. இதுவரையிலான பெரும்பாலும் இறக்குமதியை நம்பியே எலெக்ட்ரிக் வாகனத் துறை செயல்பட்டு வந்தது. ஆனால் 90 சதவீத உதிரி பாகங்கள் ஆலையிலே தயாரிக்கப்படுகிறது. இதற்கான நிறுவனங்களும் இங்கேயே அமைய உள்ளன. தவிர, சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர்களும் இங்கேயே வடிவமைக்கப்பட உள்ளன. மேலும் இந்த ஆலையில் 3000 ரோபோகள் அமைய உள்ளன.

தற்போது சந்தையில் இருக்கும் பெரும்பாலான வாகனங்கள் ஒரு லட்ச ரூபாய் என்னும் அளவிலே இரு சக்கர வாகனங்கள் உள்ளன. அதனால் ஓலா வாகனத்தின் விலை ஒரு லட்ச ரூபாய்க்கு கீழ் இருக்கும் என்றே தெரிகிறது. மேலும், சார்ஜ் ஏற்றும் மையங்களும் தொடர்ந்து அமைக்கப்பட இருக்கின்றன என ஓலா தெரிவித்திருக்கிறது. கடந்த ஜூன் மாத நிலவரப்படி 900-க்கும் மேற்பட்ட சார்ஜ் ஏற்றும் மையங்கள் இந்தியாவில் உள்ளன. தவிர, பெட்ரோல் பங்குகளிலும் சார்ஜ் ஏற்றும் மையம் அமைக்கும் திட்டத்தையும் மத்திய அரசு வைத்திருக்கிறது. இவற்றையெல்லாம் பாக்கும்போது அடுத்த ஏழு ஆண்டுகளுக்கு 44 சதவீத அளவுக்கு எலெக்ட்ரிக் வாகனங்களின் வளர்ச்சி இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது.

பில்லியன் டாலர்…

2017-ம் ஆண்டு பிப்ரவரியில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தொடங்கப்பட்டது. இதில் டைகர் குளோபல், மேட்ரிக்ஸ் பார்ட்னஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் ஆரம்பத்தில் முதலீடு செய்தன. இதனைத் தொடர்ந்து ரத்தன் டாடா முதலீடு செய்தார். தவிர, கியா மோட்டார்ஸ் ஹூண்டாய் உள்ளிட்ட நிறுவனங்களும் முதலீடு செய்திருக்கின்றன. ஜப்பானை சேர்ந்த முதலீட்டு நிறுவனமான சாப்ட்பேங்க் 25 கோடி டாலர் தொகையை முதலீடு செய்திருக்கிறது.

இன்னும் சில மாதங்களில் கிருஷ்ணகிரி ஆலையில் இருந்து உற்பத்தி தயாராகும் சூழலில், சர்வதேச விற்பனைப் பிரிவு தலைவராக யோங்சங் கிம் (Yongsung Kim) நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். ஆட்டோமொபைல் துறையில் 35 ஆண்டுகால சர்வதேச அனுபவம் பெற்றவர் இவர். இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் முக்கிய சந்தைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்கவர் என்பதால் ஓலா எலெக்ட்ரிக் இவரை நியமனம் செய்திருக்கிறது.

ஏதெர் எனர்ஜி, டெஸ்லா, ஒலா, ஹீரோ எலெக்ட்ரிக், டாடா, மஹிந்திரா, எம்ஜி உள்ளிட்ட பல நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகன சந்தையில் பெரும் தொகையை முதலீடு செய்திருக்கின்றன. ஆக, இன்னும் சில ஆண்டுகளில் நம்மில் பலருக்கும் பெட்ரோல் விலை உயர்வு என்பது கண்டுகொள்ளத் தேவையற்ற ஒன்றாகிவிடுமோ?!

– வாசு கார்த்தி

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.