கேரள மாநில உயர்கல்வி துறை அமைச்சராக இருந்தவர் கே.டி. ஜலீல். திருவனந்தபுரம் யு.ஏ.இ தூதரகம் மூலம் தங்கம் கடத்திய வழக்கில் கைது செய்யப்ப ஸ்வப்னா சுரேசுடன் தொடர்பில் இருந்ததாக கே.டி.ஜலீல் மீது குற்றச்சாட்டு இருந்துவந்தது. அந்த விவகாரத்தில் மத்திய அரசு ஏஜென்சிகளின் விசாரணைக்கு ஜலீல் ஆஜரானார். மேலும், யு.ஏ.இ தூதரகத்தில் இருந்து அரசு வாகனத்தில் சந்தேகத்திற்கு இடமான சில பார்சல்களை ஏற்றிச்சென்றதாகவும் கே.டி.ஜலீல் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டுவந்தது.

இதற்கிடையே தனது அமைச்சர் பதவியை பயன்படுத்தி சட்ட விரோதமாக உறவினருக்கு வேலை வாங்கிக்கொடுத்ததாக புகார் எழுந்தது. அந்த புகாரை விசாரித்த லோக் ஆயுக்தா, கடந்த சில நாட்களுக்கு முன்பு வழங்கிய தீர்ப்பில் ஜலீல் தவறு செய்தது கண்டறியப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. மேலும் அவர் அமைச்சர் பதவியில் தொடரும் தகுதியை இழந்துவிட்டதாகவும் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.

85 பக்கங்கள் கொண்ட அந்த தீர்ப்பின் நகல் கடந்த திங்கள் கிழமை முதல்வர் பினராயி விஜயனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. லோக் ஆயுக்தா சட்டப்படி 3 மாதத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து லோக் ஆயுக்தா தீர்ப்பை ரத்துச்செய்ய வேண்டும் என கே.டி. ஜலீல் கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை நிலுவையில் இருக்கும்போதே இன்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் கே.டி.ஜலீல்.

பினராயி விஜயன்

2016-ல் அமைச்சராக பொறுப்பேற்ற இரண்டு மாதத்தில் தனது தந்தையின் அண்ணன் மகனின் மகனான கே.டி.அதீப் என்பவரை சிறுபான்மை மேம்பாட்டு நிதி கழகத்தில் பணியில் நியமிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். பின்னர் அவருக்கு பணி வாங்கிக்கொடுக்க தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதுடன், பதவி ஏற்பின்போது எடுத்த சத்திய பிரமாணத்திற்கு எதிராகவும் செயல்பட்டதாக லோக் ஆயுக்தா தீர்ப்பில் தெரிவித்திருந்தது. மக்கள் பிரதிநிதிகள் செய்யும் தவறுகளை விசாரணை செய்யும் லோக் ஆயுக்தா வழங்கிய தீர்ப்பு கேரள அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.

ஆனால், அமைச்சராக இருந்த ஜலீல், தனக்கு எதிரான இந்த புகார்களை உயர் நீதிமன்றம் ஏற்கனவே விசாரணை நடத்தி தள்ளுபடி செய்துவிட்ட விவகாரம் கூறிவந்தார். அதேசமயம் சி.பி.எம் நிர்வாகிகளும், அமைச்சர் ஜலீல் ராஜினாமா செய்ய வேண்டியது இல்லை என்றும், நீதிமன்றம் தீர்ப்பை பொறுத்து அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்படும் எனவும் கூறிவந்தனர். இந்த நிலையில் திடீரென தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் கே.டி.ஜலீல்.

கே.டி.ஜலீல்

கே.டி.ஜலீல் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு அனுப்பியுள்ள ராஜினாமா கடிதத்தில், “தார்மீக விஷயங்களை முன்வைத்து ராஜினாமா செய்கிறேன். லோக் ஆயுக்தாவில் இப்படி ஒரு தீர்ப்பு வந்ததால் நான் ராஜினாமா செய்கிறேன்” என அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார். மேலும் தனது முகநூல் பக்கத்தில், “என் ரத்தத்தை உறிஞ்சிக் குடிக்க விரும்புபவர்கள் தற்காலிகமாக ஆசுவாசப்பட்டுக் கொள்ளலாம். எனது ராஜினாமா கடிதத்தை முதல்வரிடம் ஒப்படைத்ததை சந்தோஷமாக அறிவிக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

உறவினரை சட்டவிரோதமாக அரசுப்பணியில் அமர்த்திய விவகாரத்தில் லோக் ஆயுக்தா வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் கே.டி.ஜலீல் கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த விவகாரம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.