திருவாரூர் மாவட்டத்தில் தன்னுடைய ஓய்வூதிய தொகையை கொண்டு 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் இயற்கையை நேசித்து வருகிறார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, மன்னை நகர் பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கைலாசம். இவர் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றார். தனது இரு மகள்களுக்கும் திருமணம் ஆனநிலையில் மனைவியுடன் வசித்துவரும் இவர், ராணுவத்தில் பணியாற்றிய போதே மரங்கள் மீது அளவற்ற பற்று கொண்டவராக இருந்துள்ளார்.

அவர் பணிபுரிந்த பல மாநிலங்களில் நூற்றுக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வந்துள்ளார். தற்போது 69 வயதான இவர் கடந்த 30 ஆண்டுகளாக மன்னார்குடி பகுதியில் மரக்கன்றுகளை நட்டு வருகிறார். ‘பசுமை கரங்கள்’ எனும் பெயரில் இயற்கை ஆர்வலர்களை கொண்ட அமைப்பை உருவாக்கி அதன் மூலம் கோடை காலங்களிலும், காஜா புயல் போன்ற பேரிடர் காலங்களிலும் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு தண்ணீர் ஊற்றி பாதுகாத்து வருகிறார்.

image

பள்ளி, கல்லூரிகள், சாலை ஓரங்கள், ஆறு, குளம், ஏரிக்கரை, இயற்கை ஆர்வலர்களின் இல்லங்கள், ஆலயங்கள் என நகரின் பல பகுதிகளிலும் நிழல் தரும் பல வகையான மரக் கன்றுகளை நாள்தோறும் நட்டு வருகிறார் கைலாசம். நம்மில் பலர் ஏதாவது ஒரு காரணத்திற்காக எப்போதாவது ஒருமுறை அல்லது இருமுறை மரக்கன்றுகளை பிறருக்கு வழங்கி இருப்போம், அல்லது பிறரிடமிருந்து கன்றுகளை வாங்கி வந்திருப்போம் ஆனால் கைலாசம் அவர்களோ மரங்களின் மீது கொண்டுள்ள தீர காதலால் மன்னார்குடி அரசு கலைகல்லூரி, ஆர்.பி.சிவம் நகர், மன்னார்குடி மகளிர் காவல் நிலையம், மன்னை நகர் என மன்னார்குடி மட்டுமின்றி அருகில் உள்ள புஷ்பவனம் கிராமத்தில் குறுங்காடுகளை அமைத்து சிறந்த முறையில் பராமரித்து வருகிறார்.

இவர், மரங்களை நடுவதோடு விட்டுவிடாமல் இழுத்து செல்லும் வகையில் சிறிய தண்ணீர் வண்டி ஒன்றை தயார் செய்து அதில் நீர் நிரப்பி நாள் தோறும் குறிப்பாக கோடைகாலங்களில் நீரின்றி வாடும் சாலை ஓரங்களில் உள்ள மரக்கன்றுகளுக்கு நீர் ஊற்றுவதை தனது தலையாக கடமையாகவும் செய்து வருகிறார். இப்படி கடந்த ஓர் ஆண்டாக கொரோனா ஊரடங்கால் பள்ளி கல்லூரிகள் சரியாக செயல்படாததால் அவர் நட்டு வைத்த பல கன்றுகள் கவனிப்பாரற்று அழிந்து விட்டதாக கவலை தெரிவித்த கைலாசம் ஏற்கனவே காஜா புயலுக்கு பல ஆயிரம் மரங்களை பறிகொடுத்து விட்டோமே என்றேண்ணி காடுகளை உருவாக்க வேண்டும் என நினைத்தார்.

பள்ளி கல்லூரிகள் பலவற்றில் குறுங்காடுகளை அமைக்க தொடங்கினார். வளர்ந்து வரும் தொழில்நுட்பம், வாகன பெருக்கம் போன்றவற்றால் பிராண வாயுவின் அளவு குறைந்து வருகிறது. எனவே தூய்மையான காற்றை இயற்கை முறையில் உற்பத்தி செய்வதற்கு மிக சிறந்த வழி மரங்களை வளர்த்து காடுகளை உருவாக்குவதே என கூறும் கைலாசம், கடந்த 50 ஆண்டுகளில் நாம் பாதுகாக்காமல் மாசு படுத்திய காற்றை சுத்தம் செய்யவும், மரங்களை விரைவாக வளர்க்கவும் குறுங்காடுகள் நமக்கும், நமக்கு பின்வரும் புதிய தலைமுறையினருக்கும் அவரச தேவையாக உள்ளது என தெரிவித்தார்.

image

மரங்களை பாதுகாப்பது குறித்த அக்கறையும் விழிப்புணர்வும் மக்கள் மனதில் வேரூன்ற வேண்டும். எனவே பொதுமக்கள் ஒத்துழைத்தால் நாட்டுக்குள் காட்டை உருவாக்குவது எளிது என கூறிய கைலாசம் மரம் வளர்ப்பது குறித்து மாணவர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க ஆசிரியர்கள் அல்லாத தனி குழு ஒன்றை அமைத்து மரம் வளர்பப்து குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுவரை 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுள்ள கைலாசம், புதிய வனங்களை உருவாக்க தன்னிடம் மேலும் 30 ஆயிரம் மரக்கன்றுகள் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார். மன்னார்குடி பெரிய கடை தெரு சாலை ஓரங்களில் மரம் வளர்க்க நகராட்சி நிர்வாகம் அனுமதி மறுத்த நிலையில் மரம் வளர்ப்பதன் தேவையை அதிகாரிகளுக்கு எடுத்துக் கூறி உரிய அனுமதி பெற்று ஒரு மரக்கன்றுக்கு ஆயிரம் ருபாய் வரை செலவு செய்து மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறார்.

மன்னார்குடி நகராட்சிக்கு சொந்தமான காலி இடங்களில் நகராட்சி நிர்வாகம் வேலி அமைத்து தண்ணீர் வசதி செய்து கொடுத்தால் மரக்கன்றுகளை இலவசமாக நட்டு வைத்து அவற்றை பாதுகாக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். மரம் வளர்ப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மரம் வளர்க்க விரும்புபவர்களுக்கு மரக்கன்றுகளை இலவசமாக தருவதாக கூறும் கைலாசம், கன்றுகளை சரியாக பராமரித்து பாதுகாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தனது குடும்பத்தை கவனித்தது கொண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்களை வளர்த்துள்ள கைலாசம், காடுகளை உருவாக்க மேலும் 30 ஆயிரம் மரக்கன்றுகள் இருப்பதாக கூறுகிறார். இடைவிடாது அதிகாலை 3 மணிக்கெல்லாம் எழுந்து செடிகளை பாராமரித்து பாதுகாக்கும் இவர், தனக்கு கிடைக்கும் ஓய்வூதிய தொகையை கொணடே மரங்களை பாதுகாக்கும் மகத்தான பணியை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

– விஜய் குமார்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.