கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் ஒரு செய்தி அடங்கிய போட்டோ கார்டு ஒன்று பரவிவருகிறது. அந்த போட்டோ கார்டில்,“அனிதா பெயரில் நீட் தேர்வு பயிற்சி மையங்கள் தொடங்கப்படும்” என ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் கூறியதாகச் செய்தி இடம்பெற்றிருந்தது.

இந்த போட்டோ கார்டை சமூக வலைதளங்களில் பகிர்ந்து, “நீட் தேர்வை ஒழிப்போம் என்று சொல்லிவிட்டு, தற்போது நீட் பயிற்சி மையம் அமைக்கப்போவதாக ஸ்டாலின் வாக்குறுதி வழங்கியிருக்கிறார். மக்களே சிந்தியுங்கள்!” என்று பலரும் தி.மு.க மீது கடுமையான விமர்சனங்களை அடுக்கி கருத்து பதிவிட்டுவருகின்றனர்.

இதற்கிடையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேர்தல் பரப்புரையின்போது பேசிய காணொலி ஒன்றும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுவருகிறது.

அதில், “இவர்கள் (தி.மு.க) நீட் வேணாம் என்பார்களாம், அவர்கள் (காங்கிரஸ்) நீட் வேணும் என்பார்களாம். இவங்க இரண்டு பேரும் கூட்டணிவெச்சுப்பாங்களாம். இப்ப நீட் தேர்வை ஒழிக்கிறேன்னு பேசிட்டு, ஆட்சிக்கு வந்ததுக்கு அப்பறம் அனிதா பெயரில் நீட்டுக்கான பயிற்சி மையம் அமைப்பாங்களாம். நீட் தேர்வை ஒழிக்கிறீங்களா… இல்லை பயிற்சி முகாம் நடத்துறீங்களா? ஏதாவது ஒண்ணைப் பண்ணுங்க. நான் ஆட்சிக்கு வந்தா நீட் தேர்வை நிச்சயம் ஒழிப்பேன்” என்று பிரசாரக் கூட்டத்தில் பேசியிருக்கிறார் சீமான்.

சீமான் பேசிய காணொலியைக் கீழே காணலாம். 13-வது நிமிடத்திலிருந்து நீட் குறித்துப் பேசியிருக்கிறார்.

நீட் தேர்வை ஒழிப்பார்களாம் அப்புறம் அனிதா பெயரில் நீட் தேர்வு பயிற்சி மையம் வைப்பார்களாம் – சீமான்

Posted by Red Fox Tamil on Saturday, March 27, 2021

உண்மை என்ன?

ஸ்டாலின் தொடர்ச்சியாகத் தனது பரப்புரையில், `தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்’, `தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு பெற்றுத் தருவதுதான் தி.மு.க ஆட்சியின் கொள்கை’ என்றெல்லாம் பேசியிருக்கிறார்.

செஞ்சியில் ஸ்டாலின்.

அதேபோல, `அனிதா நீட் பயிற்சி மையம்’ தொடங்கப்படும் என்று ஸ்டாலின் அறிவித்திருக்கிறாரா என்று தேடிப் பார்த்தோம். அப்போது திட்டக்குடியில் நடந்த தேர்தல் பரப்புரையில் ஸ்டாலின் பேசிய வீடியோ நமக்குக் கிடைத்தது.

அதில், “என்னுடைய கொளத்தூர் தொகுதியில், `அனிதா அச்சீவர்ஸ் அகாடமி’ என்கிற பெயரில் பயிற்சி மையம் ஒன்றை உருவாக்கி, கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏறக்குறைய 1,000 பெண்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறேன். இரண்டு மாதங்களுக்கு முன்னர், இந்த அமைப்பின் சார்பில் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. அப்போது `தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் பெண்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையமாக அனிதா அச்சீவர்ஸ் அகாடமி மாவட்டந்தோறும் தொடங்கப்படும்’ என்று அறிவித்திருந்தேன். அதைத்தான் தேர்தல் அறிக்கையிலும் வாக்குறுதியாக அறிவித்திருக்கிறோம்” என்று பேசியிருந்தார்.

`அனிதா அச்சீவர்ஸ் அகாடமி’ எனும் பெயரில் பயிற்சி மையம் தொடங்கப்போவதாக ஸ்டாலின் அறிவித்தது உண்மைதான். ஆனால், அது நீட் பயிற்சி மையம் இல்லை என்பதும், பெண்களின் திறன் மேம்பாட்டுக்கான பயிற்சி மையம் என்பதும் நம் தேடலின்போது தெரியவந்தது.

வேட்பாளருடன் சீமான்

இது குறித்து தி.மு.க-வினர் சிலர், “தி.மு.க-வின் வெற்றி வாய்ப்பைக் குறைப்பதற்காக எதிர்க்கட்சிகள் போலிச் செய்திகளைப் பரப்பி வருகின்றனர். அதில் இதுவும் ஒன்று. ஆனால், அந்த போலிச் செய்தியை உண்மை என்று நம்பிக்கொண்டு, அதைத் தேர்தல் பிரசாரத்தில் சீமான் பேசியிருப்பது அபத்தம்” என்று தங்களது கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.