முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வளர்ச்சி மற்றும் நகர்வுகளை, `கள்ள உறவில் பிறந்த குழந்தை’ என்ற ஒப்புமையோடும், அவரது செயல்பாடுகளை `குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தை’ என்ற ஒப்புமையோடும் தி.மு.க-வின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பேசிய பேச்சுகள்… தேர்தல் களத்தில் சூட்டைக் கிளப்பியுள்ளன. கட்சித் தலைமையின் நெருக்கடியைத் தொடர்ந்தோ… இந்த விஷயத்தை வைத்து எடப்பாடி பழனிசாமி உருவாக்கியிருக்கும் நெருக்கடியைத் தொடர்ந்தோ… `முதல்வர் எடப்பாடி பழனிசாமி மனம் புண்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்புக் கேட்கிறேன்’ என்று அறிவித்திருக்கிறார் ஆ.ராசா.

உண்மையில் ஆ.ராசா மன்னிப்புக் கேட்க வேண்டியது எடப்பாடி பழனிசாமியிடம் மட்டும்தானா? இந்தச் சமூகத்திடமும்தான். `கள்ள உறவில்’ பிறந்த குழந்தைகள் மற்றும் குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள் என்றெல்லாம் பேசியிருப்பது, பகுத்தறிவு பட்டறையிலிருந்து புறப்பட்டதாகப் பெருமைபேசிக்கொள்ளும் ஆ.ராசாவுக்கு அழகா?

ஆ.ராசா

ஆ.ராசா பேசியுள்ள வார்த்தைகள், உண்மையில் நேரடிப் பொருளில் இல்லை, அவை அரசியல் ரீதியிலான குற்றச்சாட்டுகளே. அத்தனையும் ஒப்புமை என்பது… அவருடைய பேச்சை நன்றாகக் கேட்டவர்களுக்குப் புரியும். மீண்டும் கேட்டுப்பார்த்தாலும் புரியும். ஆனாலும், இதற்காக அவர் பயன்படுத்தியிருக்கும் வார்த்தைகள் மூலம், சமூகத்தின் முன்பாகப் படுகேவலப்பட்டு நிற்கிறார் ஆ.ராசா.

`ஆ.ராசா மட்டும்தான் இப்படியெல்லாம் பேசினாரா..? அவர் மட்டும் ஏன் கண்டனத்துக்கு உள்ளாக வேண்டும்?’ என்ற பழைய தற்காப்பு டெக்னிக்கை அவர் கட்சியைச் சேர்ந்தவர்களும் ஆதரவாளர்களும் கையில் எடுக்க வேண்டாம். `அவன் தப்பா பேசலாம், நான் பேசக் கூடாதா?’ என்று கேட்பது அறமா?

தேர்தல் களம் என்றதுமே பெண்களைக் கேவலப்படுத்துவதிலேயே அனைத்து அரசியல் கட்சியின் ஸ்டார் பேச்சாளர்களும் தீவிரமாக இருக்கிறார்கள். இவர்களையெல்லாம் `ப்ளூ ஃபிலிம்’ பேச்சாளர்கள் என்று அழைக்கும் அளவுக்குத் தரம் தாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

செய்திகளில் `கள்ள உறவு’, `கள்ளக் காதல்’ போன்ற வார்த்தைகளைத் தவிர்த்து, திருமணத்தை மீறிய உறவு என்று எழுத வலியுறுத்துகிறார்கள் சமூகப் பொறுப்புள்ள பலரும். முற்போக்கான முன்னெடுப்புகளை எடுப்பவர்களும் தவிர்த்து வரும் பதங்கள் அவை. அந்த வகையில் பல பத்திரிகைகள்/மீடியா தற்போது திருமணத்தை மீறிய உறவு என்பதுபோன்ற வார்த்தைகளைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளன.

ஆனால், திராவிடக் கழகத்தின் பகுத்தறிவுப் பட்டறையில் வந்த ஆ.ராசா, `கள்ள உறவு’ என்று பேசுகிறார். ஏற்கெனவே இதேபோல அவர் பேசிய யூடியூப் வீடியோ ஒன்று, பிப்ரவரி 25-ம் தேதி பதியப்பட்டு காணக் கிடைக்கிறது. இப்போது அவர் மீண்டும் அதையே பேசியபோது, வைரலாகி, சர்ச்சையாகியுள்ளது. `நான் சாதாரணமா (வழக்கமா) கிராமத்துல சொல்வேன்…’ என்றுதான் அந்த உவமையைச் சொல்ல ஆரம்பிக்கிறார். ஆக, தன் பேச்சில் இந்த `பாயின்ட்டை’ மிக முக்கியமானதாகவே குறித்து வைத்துக் கொண்டு, போகிற இடமெல்லாம் பன்ச் டயலாக்போல பேசுகிறார் ஆ.ராசா. எனில், அவருக்கு இதில் இருக்கும் தவறே புரியவில்லையா, பேசலாம் பரவாயில்லை என்ற மனநிலையா?

எடப்பாடி பழனிசாமி

`கற்புக்கரசி’ போல `கற்புக்கரசன்’ என்ற வார்த்தை ஏன் இல்லை என்று கேட்டார் பெரியார். கற்பை முன்னிறுத்தி பெண் மீது திணிக்கப்படும் மதிப்பீடுகளை, ஆதிக்கத்தை எதிர்த்த பெரியாரின் பாசறையில் வந்த ஆ.ராசா, பெண்களைக் கீழ்மைப்படுத்துவதற்காகவே பயன்படுத்தப்படும் `கள்ள உறவு’ என்கிற வார்த்தையை, அரசியல் தளத்தில் பயன்படுத்துகிறார்.

தாலியை பெரியார் அடிமைச் சின்னமாகக் கருதினார். திருமணம் ஆனதற்கான அடையாளமாகத் தாலி பெண்ணுக்கு இருந்தால், அப்போது ஆணுக்கு அதுபோன்ற அடையாளம் என்ன என்று கேட்டவர், காதல் திருமணங்கள்தான் சாதியை ஒழிப்பதற்கான வழி என்றார். ஆனால் ஆ.ராசா, `முறையா பொண்ணு பார்த்து, நிச்சயதார்த்தம் பண்ணி, கல்யாணம் பண்ணி, அப்புறம் முதலிரவு நடத்தி…’ என்று அடுக்கி, ஏற்பாட்டுத் திருமணங்கள்தான் `உன்னதமானவை’ என்கிறார்.

`கள்ள உறவு’ என்பதே இங்கு முற்போக்குத் தளங்களில் தவிர்க்கப்படும் சொல். இந்நிலையில், `கள்ள உறவில் பிறந்த குழந்தை’ என்று அடுத்த பிற்போக்குத்தனத்தை, அநாகரிகத்தை, அறியாமையை வெளிப்படுத்துகிறார் ஆ.ராசா. ஓர் ஆணை அவமானப்படுத்த அம்மா, சகோதரி என்று அவர் வீட்டுப் பெண்களின் கற்பை பழிக்கும் வசை சொற்களை பேசும் `அதே டெய்லர், அதே வாடகை’ ரக ஆணாத்திக்கவாதிதானா நீங்களும் ஆ.ராசா? எனில், பெண்களின் விடுதலை பற்றி நீங்கள் பேசுவது எல்லாம் வெறும் ஓட்டு அரசியலுக்கா? இத்தனை வருட திராவிடக் கழக அரசியல் வாழ்க்கைக்குப் பின்னரும், உங்கள் அடிமனதில் இந்த ஆணாதிக்கம்கூட மாறவில்லையா?

பொதுவாக, பெற்றோர்களின் செயல்பாடுகளுக்கு, தவறுகளுக்கு, குற்றங்களுக்கு பிள்ளைகள் எப்படிப் பொறுப்பாவார்கள்? திருமண உறவை அல்லது இந்தச் சமூகம் வகுத்து வைத்துள்ள ஒழுக்க நெறிகளை மீறிய அம்மாவுக்குப் பிறந்த குழந்தை, தான் எப்படி அதற்கெல்லாம் பொறுப்பாக முடியும்?

ஆ.ராசா

பிறப்பால் ஏற்றத் தாழ்வு இல்லை என்பதுதானே உங்களின் திராவிடக் கொள்கைகள் வலியுறுத்தும் சமூக நீதி? அந்த அணுகுமுறைதானே சரி? அந்தக் கொள்கைகளுக்காகச் செயலாற்றும் ஆ.ராசா, பிறப்பால் ஒரு குழந்தை கீழ்மையாகிறது என்று சொல்வதில் உள்ள முரணுக்கு அவரால் விளக்கம் அளிக்க இயலுமா?

ஆ.ராசா அடுத்ததாகச் செலுத்தியுள்ள வார்த்தை சமூக வன்முறையே. குறைமாதத்தில் பிரசவமாகும் அம்மாக்கள் மற்றும் குறைமாதக் குழந்தைகளைப் பற்றி. உண்மையில் குறைமாதத்தில் நடக்கும் பிரசவத்தில் அந்தத் தாயின் தவறு/தகுதியின்மை, அந்தத் குழந்தையின் தவறு/தகுதியின்மை என்று எதுவும் இருக்கிறதா ஆ.ராசா?

ஒரு தாய், ஓர் ஒற்றை செல்லை ஒரு குழந்தையாகப் பிரசவிப்பதற்குள் ஏற்றுக்கொள்ளும் பொறுப்புகள், தியாகங்கள், சிரமங்கள், துயரங்கள், வலிகள் பல. தன் உயிரில் பாதி கொடுத்தும் அவள் வளர்க்கும் சிசு, உடலியல், சூழல் மற்றும் மருத்துவக் காரணங்களால் குறைப்பிரசவம் ஆகும்போது, அவளுக்கு ஏற்படும் (தேவையற்ற) குற்றஉணர்வு, தவிப்புகள், அழுகைகள், ரணங்கள் சொல்லில் அடங்காதவை. என்றாலும், பிரசவ வார்டிலிருந்து வெளிவரும்போதே அத்தனையையும் தூக்கிப் போட்டுவிட்டு, `நான் எம்புள்ளையை எப்படியும் காப்பாத்தியே தீருவேன்’ என்ற போராட்ட பாசத்துடன், முக்கால்வாசி மட்டுமே உயிராகி இருக்கும் தன் குழந்தையை, முழு உயிராக்க அவள் தயாராவாள்.

உடல் வளர்ச்சியில், அறிவில் என ஒவ்வொரு முறையும் மற்ற குழந்தைகளுடன் தன் குழந்தை ஒப்பிடப்படும்போது, அவள் மனதில் துயரங்கள் அடர்த்தியாகும். என்றாலும், `அவளை/அவனை ஆளாக்கிக் காட்டுறேன்’ என்ற வைராக்கியம், எந்தப் புள்ளியிலும் அவளை சோர்ந்துபோக விடாமல் செலுத்திக்கொண்டே இருக்கும். அதைச் செய்தும் காட்டுவாள்.

ஆனால் நீங்கள், குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் அனைவரும் வளர்ச்சி குன்றியோ, அறிவுக்குறைபாட்டுடனோ, மாற்றுத்திறனாளிகளாகவோ இருப்பதில்லை என்று பகுத்தறியத் தவறிவிட்டீர்களே ஆ.ராசா. ஒருவேளை குறைமாதக் குழந்தை வளர்ச்சி குன்றியிருந்தாலும், அதில் அந்த அம்மாவின் பங்கோ, குழந்தையின் பங்கோ எதுவுமில்லை. `அதனால என்ன வாழ்வோம் வா’ என்று வாழ்க்கை நதியில் கைப்பிடித்துக் கொண்டு இறங்கும் அம்மாவும், அந்தப் பிள்ளையும் கொண்டாடப்பட வேண்டியவர்கள், ஆதரவு தரப்பட வேண்டியவர்கள், அன்பு செலுத்தப்பட வேண்டியவர்கள் இல்லையா? அவர்களை ஏன் இழிவுப் பொருள்களாகப் பேசுகிறீர்கள் ஆ.ராசா?

எடப்பாடி பழனிசாமி

`கள்ள உறவில் பிறந்த குறைமாசக் குழந்தை’ என்ற உங்களின் ஒற்றை வரியில் எத்தனை தவறுகள், வன்முறைகள், பிற்போக்கு பாருங்கள். நான் வழக்கறிஞர், நாடாளுமன்ற உறுப்பினர், மத்திய அமைச்சராக இருந்தவன் என்றெல்லாம் சொல்லிக்கொள்ளும் நீங்கள், இத்தனை பிற்போக்குத்தனங்களுடன்தான் இந்தப் பதவிகளையெல்லாம் தொட்டிருக்கிறீர்கள் என்றால்… சமூக அவமானமே!

அடுத்ததாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சில வார்த்தைகள். ஆ.ராசா உங்களை விமர்சிக்க நேரடிப் பொருளில் இந்தச் சொற்களைப் பயன்படுத்தவில்லை என்பது, வீடியோவை முழுமையாகப் பார்த்தாலே புரியும். அதைப் பார்த்த பின்னர் நீங்கள் செய்திருக்க வேண்டியது, `பெண்களைக் ஒழுக்கரீதியாகக் குறிப்பிடும் வசை சொற்களை பயன்படுத்தியதும், குறை மாதத்தில் பிறந்தவர்களை இழிவுபடுத்தியதும் தவறு’ என்று ஆ.ராசாவுக்கு உங்கள் கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருக்க வேண்டும். மேலும், இந்த ஒப்புமை மூலமாக அரசியல் ரீதியாக அவர் உங்களை விமர்சித்த செயல்பாடுகளுக்கு பதில் அளித்திருக்கலாம். அதுவே ஆரோக்கிய அரசியல் அணுகுமுறை.

ஆனால், நீங்கள் என்ன செய்தீர்கள் முதல்வரே? `என் தாயைப் பற்றி ஆ.ராசா இழிவாகப் பேசுகிறார், இறைவன் தக்க தண்டனை கொடுப்பார்’ என்று தேர்தல் பிரசாரத்தில் மக்கள் முன்னிலையில் கலங்கினீர்கள். இதை எப்படி எடுத்துக்கொள்வது? ஆ.ராசா பேசியதை குறுக்குவெட்டு செய்தெல்லாம் பொது சமூகம் புரிந்துகொள்ளாது என்ற வகையில், நீங்கள் காயப்பட்டிருப்பதாகக்கூட வைத்துக்கொள்வோம். ஆனால், நீங்களும் தேவையில்லாமல் உங்கள் தாயாரைப் பற்றியெல்லாம் இழுத்துவந்து இழிவான இரக்க அரசியல் செய்தது எந்த வகையில் சேர்த்தி?

ஆ.ராசாவின் பிற்போக்குத்தனமான இந்தப் பேச்சுகளை கையில் எடுத்துக்கொண்டு, நேரடியாகக் கடும் கண்டனம் மூலம் பொது சமூகத்தின் கவனத்துக்கு இந்த வார்த்தைகளில் உள்ள தவற்றை சுட்டிக்காட்டியிருக்கலாம் முதல்வர். இதைவிட இன்னும் ஏகப்பட்ட அஸ்திரங்களை வாங்கிக்கொள்ளும் நிலைக்கு ஆ.ராசாவை கொண்டு வந்து நிறுத்தியிருக்கலாம். `ஸ்டாலின் படிப்படியாக முன்னேறினார் என்றால், உதயநிதி எந்தப் படிகளில் ஏறி வந்தார்?’ என்று அரசியல் ரீதியில் கிடுக்கிப்பிடி கேள்விகளைப் போட்டு தடுமாற வைத்திருக்கலாம். இதையெல்லாம் விடுத்து, நீங்களும் ஓட்டுக்காக அதே இழி நடைபோட்டிருப்பது நாகரிகமல்லவே முதல்வரே. நீங்கள் வகிக்கும் பொறுப்புக்கும் அழகில்லையே பழனிசாமி!

ஆ.ராசா

ஆகக்கூடி…

தேர்தல் பிரசாரத்தில் பெண்களை இழிவுபடுத்தும் வார்த்தைகள் தேவைப்படுகின்றன ஆ.ராசாவுக்கு. தன்னை `விக்டிமைஸ்’ செய்து அனுதாபம் தேடிக்கொள்ள அந்த வார்த்தைகள் கிடைத்திருக்கின்றன முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு.

உண்மையில், ஆ.ராசா மட்டுமல்ல, எடப்பாடி பழனிசாமியும் சேர்ந்தேதான் மன்னிப்புக் கேட்க வேண்டும் இந்தச் சமூகத்திடம். பகுத்தறிவுக் கொள்கைகளைக் கொண்ட கட்சிகளின் ஆளுமைகளிடம் வெளிப்படும் பெண் வெறுப்பு வார்த்தைகளைப் பார்க்கும்போது… எதிரிகளை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம், நண்பர்களிடமிருந்து காப்பாற்று என்ற வசனம்தான் நினைவுக்கு வருகிறது!

– அவள் 

#VoiceOfAval: இது பெண்களின் வாதத்தை பொதுச்சமூகத்தின் முன் வைக்கும் `அவளின் குரல்’. பெண்கள் பிரச்னைகளின் பேசாபொருளை மக்கள் முன் எடுத்துவைப்பதற்கான அவள் விகடனின் முன்னெடுப்பு!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.