தமிழ் நெட்டிசன்களின் மீம் நாயகனாக வலம் வரும் நடிகர் வடிவேலு, தமிழ் சினிமாவில் அடுத்த இன்னிங்ஸை மீண்டும் தொடங்குகிறார்.
கடந்த சில வருடங்களாக படங்களில் நடிகர் வடிவேலு தலைக்காட்டாமல் இருந்தாலும், ரசிகர்கள் மனதில் நீங்காமல் இருக்கிறார் என்பதற்கேற்ப பல சம்பவங்கள் நிகழ்ந்தன. #PrayForNeasaman என்று உலகம் முழுவதும் ட்ரெண்டு ஆனதே அதற்கு சாட்சி. இந்தத் தேர்தல் காலத்திலும் மீம் நாயகனாக தனது கேரக்டர்களின் வழியாக நெட்டிசன்கள் மத்தியில் வலம் வருகிறார் வடிவேலு. அவர் இப்போது மீண்டும் ஒரு கேரக்டர் மூலமாக தனது அடுத்த இன்னிங்ஸை ஆரம்பிக்க இருக்கிறார்.
‘தலைநகரம்’ படத்தில் வடிவேலு நடித்த ‘நாய் சேகர்’ கதாபாத்திரம் மிகவும் பிரபலமானது. தற்போது இந்த கேரக்டரை வைத்தே முழு நீள படத்தில் நடிக்க வடிவேலு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
‘தலைநகரம்’, ‘மருதமலை’, ‘படிக்காதவன்’, ‘கத்தி சண்டை’ போன்ற படங்கள் வடிவேலுவின் வெற்றிக்கூட்டணியாக இருந்த சுராஜ்தான் இந்தப் படத்தையும் இயக்க இருக்கிறார். இதைதொடர்ந்து கமலின் ‘தலைவர் இருக்கின்றான்’ படத்திலும் வடிவேலு நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவருகின்றன.
2017-இல் வெளியான ‘மெர்சல்’ தான் அவருக்கு கடைசி படம். ‘மெர்சல்’ படத்திலும் தனக்கு கொடுத்த ரோலில் மிகச் சிறப்பாக நடித்திருப்பார். இதன்பின் ’23-ஆம் புலிகேசி’ படத்தின் வெற்றியால் அந்தப் படத்தின் இரண்டாம் பாகமான ’24-ஆம் புலிகேசி’ உருவாக்கப்படுவதாக சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதே கூட்டணி, அதே தயாரிப்பாளர் என ஷூட்டிங்கும் தொடங்கியது. ஷூட்டிங் தொடங்கப்பட்ட சிறிது நாள்களிலேயே சில பிரச்னைகள் காரணமாக நிறுத்தப்பட்டது. நீண்ட நாள்கள் கடந்த பின்னும் பிரச்னை முடிந்தபாடில்லை. இதன் காரணமாக வடிவேலு மற்ற படங்களில் நடிக்கத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்தது.
இந்த நிலையில்தான் தற்போது புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் வடிவேலு. இதுபோக தற்போது வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க உள்ளதாகவும் பேசப்பட்டு வருகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM