கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் தம்பி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் அதிர்ச்சியடைந்த அண்ணன் மாரடைப்பால் மருத்துவமனையில் உயிரிழப்பு. ஒரே வீட்டை சேர்ந்த சகோதரர்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பாரதிநகர் பகுதியை சேர்ந்தவர் டிரைவர் ஸ்ரீகண்டன் (41). இவர், தக்கலையில் தனக்கு சொந்தமாக காரை வாடகைக்கு ஓட்டி வருகிறார். இவருக்கு சந்தியா என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ள நிலையில், ஸ்ரீகண்டன் கடந்த சில மாதங்களுக்கு முன் புதிதாக இன்னோவா கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதனால் அவருக்கு கடன் சுமை அதிகரித்துள்ளதாக தெரிகிறது. இதனால் ஸ்ரீகண்டன் கடந்த சில தினங்களாக மன வேதனையில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் வேலை முடித்து இரவு வீடு திரும்பிய ஸ்ரீகண்டன் மனைவியுடன் பேசாமல் அறைக்குள் சென்று அறை கதவை பூட்டியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த மனைவி சந்தியா பக்கத்து வீட்டில் வசிக்கும் ஸ்ரீகண்டன் அண்ணன்கள் பிரபாகரன், மற்றும் மணிகண்டன் ஆகியோரிடம் தகவலளித்துள்ளார். அவர்கள் வீட்டிற்கு வந்து அறை கதவை உடைத்து பார்த்தபோது ஸ்ரீகண்டன் அறை மின் விசிறியில் சேலையில் தூக்கிட்ட நிலையில் காணப்பட்டார்.
இதையடுத்து பதற்றமடைந்த அண்ணன்கள் இருவரும் அவரை மீட்டு தக்கலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்ற நிலையில் மேல் சிகிச்சைக்காக தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஸ்ரீகண்டனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதைக்கேட்ட ஸ்ரீகண்டனின் அண்ணன் மணிகண்டன் அதிர்ச்சியடைந்து மருத்துவமனையில் மயங்கி சுருண்டு விழுந்தார். உடனடியாக மருத்துவர்கள் அவரை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சோதித்த போது அவர் மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்தது. இதனையடுத்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த தக்கலை போலீசார் இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அடுத்தடுத்து இரு சகோதரர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM