“தமிழக முதல்வர் பழனிசாமியின் தாயார் குறித்து திமுக தலைவர்கள் இழிவுப்படுத்தியது கண்டிக்கத்தக்கது. திமுக-காங்கிரஸ் கலாசாரம் என்பதே பெண்களை இழிவுப்படுத்துவதுதான்” என்று பிரதமர் மோடி கூறினார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி “தற்போது காங்கிரஸ் – திமுக ஒரு முக்கியமான ஏவுகணையை பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறது. தமிழகத்தின் பெண்களை இழிவுப்படுத்துவதே திமுக – காங்கிரஸின் அந்த முக்கிய ஏவுகணையாக உள்ளது. அவர்களுக்கு பெண்களை இழிவுப்படுத்துவதே நோக்கமாக உள்ளது. நான் திமுக – காங்கிரஸ் கட்சிகளுக்கு ஒன்று சொல்கிறேன்… நீங்கள் உங்கள் கட்சி தலைவர்களை கட்டுப்படுத்துங்கள். இது எல்லாவற்றையும் மக்கள் பார்த்துகொண்டுதான் இருக்கிறார்கள், இதுபோன்ற செயலை அவர்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள்.
தமிழக முதல்வர் பழனிசாமியின் தாயார் குறித்து திமுக தலைவர்கள் இழிவுப்படுத்தியது கண்டிக்கத்தக்கது. கடவுளே, ஒருவேளை இவர்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தின் பெண்களின் நிலை என்னவாகும், அவர்கள் பெண்களை இன்னும் அவமதிப்பார்கள், இழிவுப்படுத்துவார்கள்.
திமுக – காங்கிரஸ் கலாசாரம் என்பதே பெண்களை இழிவுப்படுத்துவதுதான். தற்போது பெண்கள் குறித்து திமுகவின் திண்டுக்கல் லியோனி அருவருக்கத்தக்க வகையில் கீழ்த்தரமாக விமர்சித்துள்ளார். திமுக இதை தடுக்கவில்லை. திமுகவின் பட்டத்து இளவரசர் ஒருவரும் பெண்களை இழிவாக பேசி வருகிறார், அவரையும் திமுக தடுப்பதில்லை.
1989 மார்ச் 25 இல் தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதாவை, திமுக தலைவர்கள் எப்படி நடத்தினார்கள் என்பதை மறக்கமுடியாது. இவர்கள் ஆட்சி செய்தபோது பெண்களுக்காக ஒரு நலத்திட்டமும் செய்யவில்லை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக இருந்தன. இதேபோல மேற்கு வங்கத்தில் திமுக – காங்கிரஸின் நட்புக்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சின் தொண்டர்களால் தாக்கப்பட்டு வயதான பெண்மணி ஒருவர் இறந்தார். இவர்களின் கூட்டணி எப்போதும் பெண்களை இழிவுப்படுத்துவதே” என்றார் பிரதமர் மோடி.