“தற்போது பாஜகவாக மாறிவிட்டது அதிமுக. மதவாத சக்திகளுக்கு தமிழகத்தில் இடமில்லை. இது பெரியாரின் மண்” என்றார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்.

நாகப்பட்டினம் சட்டப்பேரவைத் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ஆளூர் ஷாநவாஸுக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் நாகை அவுரிதிடலில் நடந்த பொதுகூட்டத்தில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: 

“திமுக கூட்டணியில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு வழங்கப்பட்டது. அதில் 2 பொது தொகுதிகள் கேட்டோம். வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதி நாகை என தெரிவித்தே ஸ்டாலின் வழங்கினார். அந்த ஆறு தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ள வேட்பாளர்களை களம் இறங்கியுள்ளோம்.

கடந்த கால தேர்தல்போல் இல்லமால் இந்த சட்டப்பேரவைத் தேர்தல் கடினமான தேர்தல். எதிரில் இருப்பவர்கள் அதிமுக, பாமககாரர்கள் மட்டும் இல்லை, பாஜக கட்டுப்பாட்டில் உள்ளவர்கள். தற்போது திமுகவை எதிர்த்து நிற்கும் தகுதியை அதிமுக இழந்துவிட்டது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடியை நேரடியாக எதிர்த்து பிரசாரம் செய்த ஜெயலலிதா, இனி எந்த காலத்திலும் பாஜகவுடன் எந்த உறவும், தொடர்பும் இருக்காது என்று தெரிவித்தார். ஆனால், அவரை குல தெய்வமாக வணங்குவதாக கூறும் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் பாஜகவிடம் கூட்டணி வைத்தது, ஜெயலிதாவிற்கும் அதிமுக தொண்டர்களுக்கும் செய்தது தூரோகம் இல்லையா?

image

தற்போது அதிமுக, அதிமுகவாக இல்லை; பாஜகவாக மாறிவிட்டது. நீங்கள் இரட்டை இலைக்கும், மாம்பழத்திற்கும் வாக்களித்தால், அது தாமரைக்கு வாக்களித்ததாகவே அர்த்தம். அதிமுக கூட்டணி கட்சியினரை உறுப்பினராக மக்கள் தேர்வு செய்தால், பாஜக உறுப்பினராகத்தான் வேலை பார்ப்பார்கள். திமுகவை எதிர்த்து அதிமுக, பாமக போட்டியிடவில்லை, பாஜகதான் 234 தொகுதிகளிலும் நிற்கிறது.

தமிழகத்தில் அதிமுகவை வீழ்த்தி பாஜக வளர பார்க்கிறது. இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சொந்தக் கூட்டணி கட்சி உறுப்பினர்களை விலைக்கு வாங்குதுதான் பாஜகவின் கேவலமான வேலை. தமிழகத்தில் பெரிய அரசியலில் திமுகவா, பாஜகவா என்பதை கணக்குப் போட்டு காய் நகர்த்துகிறது பாஜக. சட்டமன்ற தேர்தலுக்கு பின் அதிமுக இருக்குமா என்பது கேள்விக்குறிதான்.

பாஜக இந்தியாவில் பல்வேறு சட்டங்களை மக்களுக்கு எதிராக கொண்டுவந்து சாதி, மத ரீதியான பிளவை ஏற்படுத்த நினைக்கிறது.
இதை உணர்ந்துதான் எந்த நிபந்தனையும் இன்றி திமுகவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு அளித்து வருகிறது. இது தெரிந்தே பதவிக்காக பழனிசாமியும், ராமதாஸும் கூட்டணி பாஜக உடன் அமைத்துள்ளனர்.

image

பாஜகவால் இந்தியாவில் வீழ்த்த முடியாத கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. பாஜகவின் சதி முயற்சியை ஒழித்து கட்டதான் திமுகவுடன் கூட்டணி வைத்தோம். 6 சீட்டு என்பது முக்கியம் இல்லை. பாஜகவுக்கு தமிழகத்தில் இடம் இல்லை என்பதுதான் முக்கியம்

திமுகவுக்கு விடுதலைச் சிறுத்தையும், விடுதலைச் சிறுத்தைக்கு திமுகவும் உற்ற துணையாக இருக்கும். மதவாத சக்திகளுக்கு தமிழகத்தில் இடம் இல்லை. இது பெரியாரின் மண். தமிழகத்தில் மட்டுமல்ல, பாஜக இந்தியாவில் மீண்டும் ஆட்சியை பிடித்தால் டெல்டா விவசாயிகள் இடம் பெயரும் நிலை ஏற்படும். கொடிய ஆபத்தில் இருந்து தமிழகத்தை காப்பற்ற ஸ்டாலின் முதல்வராக வேண்டும்” என்று திருமாவளவன் பேசினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.