‘நீங்க 8 கிலோமீட்டர் போனால், நான் 4 கிலோமீட்டராவது போவேன்’ என போட்டி போட்டுக்கொண்டு சாலைப் பேரணிகளை நடத்துகிறார்கள் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும். இதுகுறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம்.

294 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக தேர்தலை நடத்துகிறது, இந்திய தலைமை தேர்தல் ஆணையம். இதில் முதல் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் ஏற்கெனவே நிறைவடைந்துவிட்ட நிலையில் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை மறுநாள் (ஏப்.1) நடைபெறுகிறது. தேர்தல் என்று வந்து விட்டாலே அரசியல் கட்சிகளின் அனல்பறக்கும் பரப்புரைகள் இருக்கும்தான் என்றாலும், இந்த இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பரப்புரைகள் வழக்கத்திற்கு மாறாக அனல் வீசுகிறது. காரணம் நந்திகிராம் தொகுதி.

பாஜகவினர் விடுத்த சவாலை ஏற்று, இந்தத் தொகுதியில் களம் காண்கிறார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. அவரை தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக பாரதிய ஜனதா கட்சியின் அத்தனை தலைவர்களும் தலை மேல் கொண்ட பணியாக அங்கு தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

நந்திகிராம் தொகுதியில் நேற்றைய தினம் எட்டு கிலோமீட்டர் சாலை பேரணியை நடத்தி அத்தனை அரசியல் கட்சிகளையும் ஒரு நிமிடம் திரும்பிப்பார்க்க வைத்தார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. நந்திகிராம் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்ய சென்றபோது, அவர்கள் தள்ளிவிட்டதில் காலில் முறிவு ஏற்பட சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி காலில் கட்டு போட்டபடி பரப்புரைகளில் ஈடுபட்டு வருகிறார் மம்தா பானர்ஜி. இந்த சாலை பேரணியின்போது சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி 8 கிலோமீட்டர் தொலைவிலும் தனது ஆயிரக்கணக்கான தொண்டர்கள் படை சூழ மிக பிரமாண்டமாக நடத்தினார் அவர்.

image

அதைத்தொடர்ந்து பிரமாண்டமான அரசியல் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “மேற்கு வங்க மக்களை இந்து – முஸ்லிம் என பிரிக்க பாரதிய ஜனதா கட்சி சதி செய்கிறது. பாஜக ஆட்சி செய்யக்கூடிய மாநிலங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை எல்லாம் மறந்துவிட்டு மேற்கு வங்கத்தில் தேவையற்ற சட்டம் – ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர்” என பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி பாரதிய ஜனதா கட்சியின் அத்தனை தலைவர்களுக்கு எதிராகவும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

மம்தா பானர்ஜி இப்படி மக்களை கவரக்கூடிய வியூகத்தை கையில் எடுத்த நிலையில், இன்று அதே நந்திகிராம் தொகுதியில் சுமார் நான்கு கிலோ மீட்டருக்கு சாலை பேரணியை நடத்தினார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.

image

சாலை பேரணி நடத்திய வழிகளில் ஜெய் ஸ்ரீராம் கோஷங்கள், நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா வாழ்க கோஷங்கள் எழுப்பியபடி பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் உற்சாக வெள்ளத்தில் இருந்தனர். நந்திகிராம் களத்தில் நிற்கும் சுவேந்து அதிகாரி, மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் சாலை பேரணியில் கலந்துகொள்ள, இருபுறமும் திரண்டிருந்த தொண்டர்களுக்கு கைகளை அசைத்தபடி உற்சாகமூட்டினார்.

இவர்களைத் தவிர இரண்டு கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் பலரும் தொடர்ந்து நந்திகிராம் தொகுதியிலேயே முகாமிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரு கட்சிகளும் இந்தத் தொகுதியின் வெற்றி தோல்வியை தங்களது மானப் பிரச்னையாக பார்க்கின்றனர். மம்தாவை வீழ்த்திவிட்டால் ஆட்சியை பிடிக்கவில்லை என்றாலும், பாஜகவிற்கு அது பெரும் வெற்றி. அதனால்தான் பாஜக தலைவர்கள் இப்படி போட்டிப் போட்டுக் கொண்டு களத்தில் நிற்கின்றனர்.

இதில் யாருடைய வியூகம் கை கொடுக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ளத்தான் ஒட்டுமொத்த நாடும் காத்துக்கொண்டிருக்கிறது. இதற்கான பதில் நாளை மறுநாள் இந்தத் தொகுதியின் வாக்காளர்களால் எழுதப்படவிருக்கிறது.

– நிரஞ்சன் குமார்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.