மீனாட்சி அரசியின் ஆட்சியின் போது அவரது வளர்ப்பு மகனின் தந்தை பங்காரு திருமலை இந்த நாட்டை ஆட்சி செய்யும் உரிமை தனக்கும் இருக்கிறது என்று உரிமை கோர, மெல்ல தனக்கு சாதகமாக ஒரு கூட்டத்தை உருவாக்கத் தொடங்கினார், தொடர்ந்து மீனாட்சி அரசிக்கு நெருக்கடிகளைக் கொடுத்தார். மதுரை அரசில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை அறிந்துகொண்டு ஆற்காடு நவாப் தோஸ்து அலிகான், ஆற்காடு இளவரசர் சப்தர் அலி கான் மற்றும் அவரது மருமகனும் ஆலோசகருமான சந்தா சாகிப் தங்கள் படைகளுடன் திருச்சியைத் தாக்கினர்.

இந்தச் சூழலைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள உடனடியாக பங்காரு திருமலை களத்தில் இறங்கினார். அவர் சப்தர் அலிகானை அழைத்து தனக்குத் திருச்சி ராஜ்ஜியத்தைப் பெற்றுத்தந்தால் முப்பது லட்சம் ரூபாய் மற்றும் தங்கம்/வெள்ளி அளிப்பதாக வாக்குறுதி கொடுத்தார். ஆனால் இந்தப் படையெடுப்பில் சப்தர் அலிகானால் திருச்சியைக் கைப்பற்ற முடியவில்லை. இதனால் மனம் நொந்து அவர் ஆற்காட்டிற்குத் திரும்பினார்.

18-ம் நூற்றாண்டில் மதுரை

இதை அறிந்துகொண்ட மீனாட்சி அரசி சந்தா சாகிப்பைத் தொடர்புகொண்டு, தான் ஒரு கோடி ரூபாய் தருவதாகச் சொல்லி பங்காரு திருமலையைக் கைவிட்டு தனக்கு உதவும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் மாறாக சந்தா சாகிப், மீனாட்சி அரசியைச் சிறைபிடித்து மதுரையின் ஆட்சியைக் கைப்பற்றினார். இந்த ஏமாற்றத்தில் மீனாட்சி அரசி தற்கொலை செய்துகொண்டார்.

சந்தா சாகிப் உடனடியாக தனது சகோதரர்கள் புதா சாகிப்பை மதுரை ஆளுநராகவும், சதக் சாகிப்பை திண்டுக்கல் ஆளுநராகவும் நியமித்து மதுரையை முழுமையாகத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். ஆனால் பங்காரு திருமலை ஓயவில்லை. அவர் தஞ்சை மராட்டிய அரசுடன் இணைந்து சாதாரா ராகோஜி போன்ஸ்லே தலைமையில் ஒரு படையைத் திரட்டிக்கொண்டு ஆற்காடு நவாபுடன் போரிட்டார். இந்தப் போர் வட ஆற்காடு மாவட்டத்தின் தாமல்செருவில் நடைபெற்றது. இந்தப் போரில் ஆற்காடு நவாப் இறந்துபோகிறார்.

உடன் அந்தப் படைகள் அங்கிருந்து வந்து திருச்சியைக் கைப்பற்றுகிறது. இங்கு நடைபெற்ற போரில் சந்தா சாகிப் மற்றும் அவரது இரு சகோதரர்கள் கொல்லப்படுகிறார்கள். ஆனால் இந்தப் போரின் வெற்றிக்குப் பின் பங்காரு திருமலை மதுரைக்கு மன்னராக முடியவில்லை. மாறாக மதுரை மராத்தியர் ஆட்சியின் கீழ் வந்தது. மதுரையின் ஆளுநராக முராரிராவ் நியமிக்கப்படுகிறார். 1740-லிருந்து 1743 வரை மதுரையில் மராத்தியர் ஆட்சி நடைபெற்றது. 1744-ல் மீண்டும் மதுரையை ஆற்காட்டு நவாப் அன்வருதீன் கைப்பற்றுகிறார்.

அன்வருதீனின் மகன்கள் முபுஸ்கான் மற்றும் முகமது அலி மதுரையை நிர்வாகம் செய்கிறார்கள். சந்தா சாகிப்பின் முன்னாள் பணியாளர் ஆலம்கான் மதுரைமீது படையெடுத்து ஆட்சியைக் கைப்பற்றுகிறார். ஆனால் முகமது அலியால் இந்தத் தோல்வியை ஏற்க முடியவில்லை. இதன் பின்னர் ஒரு குழப்பமான காலம் நிலவியது. மயானா, பங்காரு திருமலையின் மகன் முத்து திருமலை என அடுத்தடுத்து பல மாற்றங்கள்.

கும்பினிப் படைகள்

தென் பாண்டிப் பாளையக்காரர்களிடம் நிலைமையைச் சீர்படுத்த கான் சாகிப் ஒருவரால்தான் முடியும் என்று கும்பினியார் அவரைத் திருநெல்வேலிக்கும் பேரதிகாரியாக (கவர்னராக) நியமித்தனர். மதுரை மற்றும் திருநெல்வேலியின் இராணுவ மற்றும் சிவில் அதிகாரங்கள் அவர் வசம் ஒப்படைக்கப்பட்டன.

1725-ல் இராமநாதபுரம் மாவட்டத்தின் பனையூரில் பிறந்தார் மருதநாயகம், அவரது குடும்பம் இஸ்லாத்தைத் தழுவுகிறது, மருதநாயகம் யூசுப் கானாக மாறுகிறார். சிறுவயதிலேயே அவர் வீட்டை விட்டு பாண்டிச்சேரிக்குச் செல்கிறார். அங்கே பிரெஞ்சு கவர்னர் மான்சர் காக்லா வீட்டில் வேலைகள் செய்கிறார், அங்கிருந்து தஞ்சாவூர் சென்று கும்பினி படையின் வீரனாகச் சேர்கிறார். அங்கே கல்வி கற்கிறார்; தமிழ், பிரெஞ்சு, போர்த்துகீசியம், ஆங்கிலம், உருது என்று பல மொழிகள் கற்கிறார். கும்பினியார் அவரை நெல்லூருக்கு மாற்றுகிறார்கள், அங்கே அவர் ஹவல்தாராகவும், சுபேதாராகவும் குறுகிய காலத்திலேயே பதவியுயர்வு பெறுகிறார்.

ஆற்காட்டு நவாப் பதவிக்கு நடைபெற்ற சண்டைகளில் தலையிட்டு கும்பினியார் முகமது அலி வாலாஜாவை ஆற்காட்டு நவாபாக நியமித்தனர், அதற்குக் கைம்மாறாக அவர் மதுரை மற்றும் திருநெல்வேலியின் வரிவசூலிக்கும் உரிமையை கும்பினிக்கு வழங்கினார். ஆற்காட்டு நவாபிற்காக நடைபெற்ற யுத்தகளத்தில் யூசுப் கானின் திறமையைப் பார்த்து வியந்த இராபர்ட் க்ளைவ் மேஜர் ஸ்டிரிங்கர் லாரன்ஸ் அவர்களால் (Stringer Lawrence) யூசுப் கான்னிற்கு ஐரோப்பியப் போர்ப் பயிற்சி அளிக்க உத்தரவிடுகிறார். ஆங்கிலத் தளபதி மேஜர் லாரன்ஸ் யூசுப் கானுக்குத் தங்கப் பதக்கம் வழங்கி, கான் சாகிப் என்கிற பட்டமும் வழங்கினார். அதுமுதல் அவர் கமாண்டோ கான் சாகிப் அல்லது கும்மந்தான் (Comandante) கான் சாகிப் என்று அழைக்கப்பட்டார்.

பிரெஞ்சுப் படைகள் சென்னையை முற்றுகையிட, கான் சாகிப் அங்கு விரைகிறார். எதிர்பாராத நேரத்தில் தன் கொரில்லாத் தாக்குதலில் பிரெஞ்சுப் படைகளைத் தோற்கடிக்கிறார். இந்தத் தாக்குதல் அவருக்குப் பெரும் புகழைத் தேடித்தருவதோடு ஒரு பதவியையும் தருகிறது. 1757-ல் சென்னையின் கவர்னராக இருந்த ஜ்யார்ஜ் பிகட் (George Pigot) கான் சாகிப்பை மதுரையின் கவர்னராக நியமிக்கிறார்.

கும்பினிப் படைகள்

மதுரையின் கவர்னராக இருந்த நேரம் குளங்களை, ஏரிகளை பழுது பார்த்து பாசன வசதிகளை சீர் செய்கிறார். நிதித்துறையை, வணிகர்கள் பாதுகாப்புகளை மேம்படுத்துகிறார். விவசாயிகள் மற்றும் நெசவுத்தொழிலாளர்களுக்கு முன்பணம் கொடுத்து தொழிலில் ஈடுபடச்செய்து நெசவுத்துணிகளை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யவும் ஏற்பாடுகள் செய்தார். நெசவாளர்களின் தொழில் விரிவாக்கத்திற்குக் கடன் கொடுக்கும் திட்டங்களை அறிமுகம் செய்கிறார். இந்து ஆலயங்களுக்கு மானியங்களை வழங்குகிறார், கோயில் சொத்துகள் அபகரிக்கப்படுவதைத் தடுக்கிறார். மதுரைக் கோயில் கோபுரத்தின் மீது ஏறிக் குழப்பம் விளைவித்த பக்கிரி நிசான் என்பவரை நாடு கடத்த உத்தரவிடுகிறார். மதுரையைப் பாதுக்காப்பதற்காக நத்தத்தில் ஒரு களிமண் கோட்டையைக் கட்டுகிறார். குறிப்பாக கான் சாகிப்பின் ஆட்சியின் கீழ் மதுரையில் அமைதியும் நல்லிணக்கமும் தவழ்ந்தன. பொதுவாக மன்னனைத் தேடிச்சென்று மக்கள் முறையிடுவர். ஆனால் கான் சாகிப் மக்களைத் தேடி தேடிச் சென்றார், அடிக்கடி நகர்வலம் சென்றார், மக்களிடமே சென்று அவர்களது குறைகளைக் கேட்டுத் தீர்க்க ஆரம்பித்தார். இது மதுரை மக்களுக்கு ஒரு புதிய அனுபவமாக அமைந்தது. கான் சாகிப்பின் புகழ் மேலும் வலுப்பெறுகிறது, மதுரைக்காரர்களின் பிரியத்தையும் நம்பிக்கையையும் கான் சாகிப் பெறுகிறார்.

உலகம் முழுவதிலுமே புகழ் உயர உயர பகைமையும் சேர்ந்து வளரும் என்பது வரலாறு நெடுகிலும் பார்த்துவருகிறோம், கான் சாகிப் மதுரை மக்களிடம் புகழ்பெறுவதை ஆற்காட்டு நவாப் விரும்பவில்லை. அது அவருக்குப் பெரும் அச்சத்தையும் எரிச்சலையும் கொடுத்தது. தொடர்ந்து கான் சாகிப்பிற்குப் புதிய புதிய நெருக்கடிகளைக் கொடுத்தார், அவருடன் இணைந்து கும்பினியாரும் ஒரு கட்டத்தில் கான் சாகிப் புகழ்பெறுவதை விரும்பவில்லை.

மதுரை மக்கள் மத்தியில் பிரிட்டிஷாருக்கு எதிரான உணர்வை கான் சாகிப் உருவாக்குகிறார் என்கிற குற்றச்சாட்டின் அடிப்படையில் அவரைக் கைது செய்யும்படி கும்பினியார் கேப்டன் மான்சனிடம் உத்தரவிட்டனர், இதை அறிந்தவுடன் கான் சாகிப் தன்னை மதுரையின் சுல்தானாக ஒரு சுதந்திர ஆட்சியாளனாக அறிவித்துக்கொண்டார்.

1783 கடலூர் முற்றுகை

1763 செம்டம்பரில் தொடர் மழையின் ஊடே மதுரையை கும்பினி படைகள் 22 நாள்கள் தாக்கியது, கான் சாகிப்பின் தாக்குதலில் கும்பினி படைகள் பெரும் சேதத்தைச் சந்தித்து நிலைகுலைந்து போனது. மீண்டும் சென்னை, மும்பையிலிருந்து கூடுதல் படைகள் வரவழைக்கப்பட்டு நவீன ஆயுதங்களுடன் மேஜர் பிரஸ்டன் தலைமையில் மீண்டும் தாக்குதல் தொடங்கியது.

கான் சாகிப் உடன் இருந்தவர்கள் தங்கள் விசுவாசத்தை மாற்றிக்கொண்டனர், அவருடன் இருந்த பிரெஞ்சு தளபதி கமேண்டர் மெர்ச்சன் காட்டிக்கொடுக்க முன்வந்தார். கும்பினியாரிடம் விலைபோனவர்கள் தொழுகையில் இருந்த கான் சாகிப்பைப் பின்னிருந்து தாக்கிக் கட்டிப்போட்டனர். கான் சாகிப் கும்பினி படைகள் வசம் ஒப்படைக்கப்பட்டார். 1763 அக்டோபர் 15 அன்று கான் சாகிப் மதுரைக் கோட்டைக்குத் தெற்கே ஒரு மாமரத்தில் தூக்கிலிட ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இருமுறை கயிறு அறுந்து கீழே வீழ, மூன்றாவது தூக்குக்கயிறு கான் சாகிப்பின் உயிரைப் பறித்தது.

நெல்லூர் சுபேதார், ஈசப், யூசுப், யூசுப்கான், மகம்மது யூசுப், கான்சாகிப், கும்மந்தான் என்று மதுரையின் வரலாற்றில் பல பெயர்கள் கொண்ட ஒரு முக்கிய பாத்திரம் முடிவுக்கு வந்தது. ஒருவருக்கு இத்தனை பெயர்கள் எப்படி வந்தன? கான் சாகிப் தனது வீட்டை விட்டு ஓடி பாண்டிச்சேரி சென்றது முதலே பல வேலைகள், பொறுப்புகளில் இருந்துள்ளார். வேலை செய்த இடங்களிலெல்லாம் அவர் காட்டிய ஈடுபாடு அங்குள்ள அதிகாரிகளுடன் அவருக்கு நெருக்கத்தை ஏற்படுத்த ஒவ்வொருவரும் அவரை ஒரு புதிய பெயர் சொல்லி அழைத்தனர்.

கும்மந்தான் யூசுப் கான்

அதிகாரிகளைப் போலவே மதுரை மக்களின் மனங்களிலும் தனக்கான ஒரு தனித்துவமான இடத்தை கான் சாகிப் பெற்றிருந்தார் என்பது அவரைப் பற்றிய பல பனுவல்கள் நமக்கு உணர்த்துகிறது. நா.வானமாமலை தொகுத்து வெளியிட்ட கான் சாகிபு சண்டை, ந.சஞ்சீவி எழுதிய கும்மந்தான் கான் சாகிபு தவிர்த்து கான் சாகிப் பற்றிக் கதைப்பாடல்கள் ஏட்டுப் பிரதிகளாகவும் உள்ளன. இந்தக் கதைப் பாடல்களின் பாத்திரங்கள் பிரெஞ்சுக்காரர்களை எதிர்த்து கான்சாகிபு நடத்திய போர்களைப் பற்றிச் சுருக்கமாகக் குறிப்பிடுகின்றன. கான் சாகிப்பின் வரலாற்றில் முக்கியமான பகுதி திருநெல்வேலிப் பாளையக் காரர்களோடு நடத்திய போர்களாகும். இதைப் பற்றிக் கதைப் பாடல் எதுவும் கூறவில்லை. ஆனால் மதுரையில் கான்சாகிபு சுபேதாராகப் பதவியேற்ற காலம் முதல்தான் கதை தொடங்குகிறது. கான்சாகிபுவின் வாழ்க்கையில் கடைசி ஏழு ஆண்டுகளில் நடந்த நிகழ்ச்சிகள் இக்கதைப் பாடல்களின் பொருளாக உள்ளன.

கான் சாகிப்பிற்கு மதுரை மக்கள் மத்தியில் இருந்த புகழைப் பார்த்து ஆற்காடு நவாப் அஞ்சியது போலவே அதனைக் கண்கூடாகப் பார்த்த கும்பினி அதிகாரிகள் அதிர்ந்தனர். கான் சாகிப்பின் உடல் புதைக்கப்படும் இடம் பெரும் நினைவுச் சின்னமாக மாறிவிடும் என்பதால் அவரது தலையைத் திருச்சிக்கும், கைகளைப் பாளையங்கோட்டைக்கும், கால்களை தஞ்சைக்கும், திருவிதாங்கூருக்கும் அனுப்பிவைத்தனர். கான் சாகிப்பின் உடலை மட்டும் தூக்கிலிட்ட சம்மட்டிபுரத்தில் புதைத்தனர். கான் சாகிப் தூக்கிலிடப்பட்டு 40 ஆண்டுகளுக்குப் பின் 1808-ல் அவரது உடல் புதைக்கப்பட்ட சம்மட்டிபுரத்தில் தர்கா ஒன்று ஷேக் இமாம் என்பவரால் எழுப்பப்பட்டு அது இன்றும் கான் சாஹிப் பள்ளி வாசல் என அறியப்பட்டு தொழுகை நடைபெற்று வருகிறது.

1808-ல் சம்மட்டிபுரத்தில் கட்டப்பட்ட கான் சாகிப் தர்கா

மதுரை தெற்கு மாசி வீதிக்கும், தெற்காவணி மூல வீதியையும் இணைக்கும் தெருவிற்கு கான்சா மேட்டுத்தெரு என்று பெயர். இந்த இடத்தில் இருந்த கான் சாகிப்பின் அரண்மனை அவர் தூக்கிலிடப்பட்டதும் இடிக்கப்பட்டு பல காலம் சிதிலங்களின் மேடாகக் காட்சியளித்தது, அதனாலேயே அது கான்சாகிப் மேடாகவும் பின்னர் கான்சாமேட்டுத்தெருவாகவும் உருமாறியது. மதுரை காமராஜர் சாலைக்கும் கீழவெளிவீதி மற்றும் முனிச்சாலை சாலை ஆகிய இந்த மூன்று சாலைக்கும் இடையில் உள்ள பகுதி இன்றும் ‘கான்பாளையம்’ என்றழைக்கப்படுகிறது. திருவில்லிபுத்தூர் வத்திராயிருப்பு அருகே முகமதுகான்சாகிப்புரம் என்று அழைக்கப்பட்ட ஊரே தற்போது கான்சாபுரம் என்றழைக்கப்படுகிறது. நெற்கட்டான் செவ்வலுக்குத் தென்புறம் ஒரு பெரிய மேடு இருக்கிறது. இப்போது அந்த இடத்தை ‘கான்சாமேடு’ என்று மக்கள் அழைக்கிறார்கள். வீராணம் ஏரியிலிருந்து பாசனத்திற்காக வெட்டப்பட்ட இடம் இவர் பெயரால் ‘கான்சாகிப் வாய்க்கால்’ என்றே அழைக்கப்பட்டது.

கான் சாகிப் காலத்து மதுரையின் பிரஞ்சு ராணுவ வரைபடம்

கான் சாகிப்பிற்குப் பிறகு அபிரல்கான் சகேப் மதுரைப் பகுதியின் வருவாய் ஆளுநராகப் பணியாற்றினார். 1781-ல் ஜார்ஜ் புரோக்டர் (George Procter) என்பவர் மதுரையின் கலெக்டராக நியமிக்கப்பட்டார், இத்துடன் கிழக்கிந்திய கம்பெனியின் நேரடி ஆட்சியின் கீழ் மதுரை வந்தது. அடுத்தடுத்து பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பெனிக்குக் கப்பம் கட்டிக்கொண்டு, தன்னிச்சையாக ஆண்ட மன்னர்களின் நிலப்பரப்புகள் சுருங்கி இந்த நிலப்பரப்பின் பெரும் பகுதி கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சிப் பகுதிகளாக மாறின.

நன்றி:

YUSUF KHAN – S.C.HILL

கான் சாகிபுச் சண்டை – நா. வானமாமலை

கும்மந்தன் கான் சாகிப் – ந. சஞ்சிவி

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.