“அரசியலுக்கு தாமதமாக வந்ததற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்றார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.
மதுரவாயல் சட்டப்பேரவைத் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பத்மபிரியா, பூந்தமல்லி தொகுதி வேட்பாளர் ரேவதி மணிமேகலை ஆகியோரை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் வளசரவாக்கத்தில் திறந்த வேனில் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசும்போது, “உயிரே, உறவே, தமிழே… வணக்கம், புதிய மாற்றத்துக்கான அரசியலை நீங்கள் தொடங்கப் போகிறீர்கள். மதுரவாயல் தொகுதியில் நிற்கும் வேட்பாளர் அதிகம் படித்தவர்; குறைவான வயது. உங்கள் சேவையில் அதிக நாள்கள் இருக்க முடியும்,
என்னை விட என் கட்சி இளையது. அதுபோன்று வடிவமைக்கப்பட்டு உள்ளது.
புதிதாக ஒட்டு போடும் இளைஞர்கள் அதிகம் வந்துள்ளனர் அவர்களால்தான் மாற்ற முடியும். புதுச்சேரியில் இருந்து வருகிறேன். அங்கு
பிரதமர் வரவுள்ளதால் 144 உத்தரவு போடப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் மக்களை சந்திக்க 144 தடை போடுகிறார்கள். நமது நாடு அப்படி உள்ளது.
சட்டத்துக்கு உட்பட்டு ஜெயிக்கக் கூடிய கட்சி, மக்கள் நீதி மய்யம் என்பதை நீங்கள் அளிக்க வேண்டும். புரட்சி என்றால் ரத்தம், வெடிகுண்டு வெடிக்க வேண்டும் என்று அர்த்தம் அல்ல; வீரத்தின் உச்ச கட்டம் அகிம்சை. எங்கள் வேட்பாளர்கள் யார் மீதும் குற்ற வழக்கு இல்லை; கட்ட பஞ்சாயத்து இல்லை. இந்த தலைமை நல்லவர்களை தேடிப் போகும். மக்களின் ஆட்சி தருவோம். காமராஜர் மக்களில் ஒருவர். அதனால்தான் மக்கள் ஆட்சி என்கிறோம். அரசியலுக்கு தாமதமாக வந்ததற்கு மன்னிப்பு கேட்கிறேன்” என்றார் கமல்ஹாசன்.