தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கும் ‘நானே வருவேன்’ படத்தின் அப்டேட் கொடுத்திருக்கிறார் இயக்குநர் செல்வராகவன்.
செல்வராகவன் – தனுஷ் கூட்டணி “மயக்கம் என்ன” படத்திற்கு அடுத்து சுமார் பத்து ஆண்டுகளுக்கு பிறகு ’நானே வருவேன்’ படத்தில் இணைந்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் என்பதால் இன்னும் எதிர்பார்ப்புகள் கூடியுள்ளன. தனுஷ் – செல்வராகவன் கூட்டணியில் உருவான ‘துள்ளுவதோ இளமை’, ‘காதல் கொண்டேன்’, ‘புதுப்பேட்டை’, ‘மயக்கம் என்ன’ ஆகிய படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. இதையடுத்து இவர்கள் கூட்டணி படத்துக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உருவானது. இந்நிலையில், கடந்த புத்தாண்டு அன்று ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ படத்தின் போஸ்டர் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மீண்டும் தனுஷுடன் செல்வராகவன் இணையும் கலைப்புலி தாணு தயாரிப்பில் ’நானே வருவேன்’ படத்தின் அறிவிப்பும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது.
தற்போது படத்தின் அப்டேட் கொடுத்திருக்கிறார் செல்வராகவன். தனது ட்விட்டர் பக்கத்தில், ”இந்த அளவிற்கு முன் தயாரிப்பில் நான் எந்தப் படத்திற்கும் ஒருபோதும் பணியாற்றவில்லை. நானே வருவேன் படப்பிடிப்புக்கு தயாராகிறது’ என்று பதிவிட்டுள்ளார். தற்போது அமெரிக்காவில் ’தி கிரே மேன்’ ஹாலிவுட் பட ஷூட்டிங்கில் இருக்கும் தனுஷ் இந்தியா திரும்பியவுடன் ‘நானே வருவேன்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM