தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில், அ.தி.மு.க சார்பில் மூன்றாவது முறையாக ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். தி.மு.க சார்பில் அக்கட்சி தேனி வடக்கு மாவட்டச் செயலாளரான தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார். அதே போல, அ.ம.மு.க சார்பில், அக்கட்சியின் தேனி தெற்கு மாவட்டச் செயலாளரான முத்துச்சாமி போட்டியிடுகிறார். ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி, போடியில் பிரசாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், முத்துச்சாமியை ஆதரித்து பிரசாரம் செய்ய, அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று தேனி வந்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசாரத்தை முடித்துவிட்டு, நேற்று இரவு பெரியகுளம் வந்த அவர், இரவு 10 மணியைக் கடந்ததால், பெரியகுளத்தில் காத்திருந்த தொண்டர்களுக்கு கையசைத்துவிட்டு, போடி சென்றார். அங்கே, தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த டி.டி.வி.தினகரன், இன்று மாலை போடி தேவர் சிலை அருகே பிரசாரம் செய்தார்.
Also Read: `தேனியில் இருந்தாலும், நான் எடப்பாடியின் ஆள்..!’ – ஜக்கையனைப் பழிவாங்கினாரா ஓ.பி.எஸ்?
பிரசார வாகனத்தில் வந்த டி.டி.வி தினகரனை, கட்சித் தொண்டர்கள் மலர் தூவி வரவேற்றனர். மலர் தூவுவதை நிறுத்தச்சொன்ன டி.டி.வி தினகரன், மைக்கை பிடித்து, “இப்படித்தான் ஒருமுறை பிரசாரத்தின் போது, மலர் தூவினார்கள். பூவில் இருந்த புழு ஒன்று உடலில் ஏறிவிட்டது… பன்னீர், தங்கம் மாதிரி. அதனால் தான் சட்டையில் மேல் பட்டனை எப்போதும் போட்டுக்கொண்டிருக்கிறேன்.” என்றார். இதனைக் கேட்ட அ.ம.மு.க தொண்டர்கள் ஆரவாரம் செய்ய, தனது பேச்சைத் தொடர்ந்தார் டி.டி.வி தினகரன்.

“நான் பன்னீரை சேர்மன் என்று தான் கூப்பிடுவேன். அவரும் என்னை அப்படி தான் கூப்பிடச் சொல்வார். இரண்டு நாள்கள் எங்களோடு தான் இருந்தார். யார் சொன்னாங்கனு தெரியலை, திடீர்னு ஞான உதயம் பிறந்தது மாதிரி தியானம் பண்ண போயிட்டார். ’சசிகலா மீது கலங்கம் வந்துவிடக்கூடது என்பதற்காக தான் தர்மயுத்தம் நடத்தினேன்’ என தொலைக்காட்சியில் பேட்டி கொடுக்கிறார். என் மீது மரியாதை உண்டு என்றும், நான் அவசரப்படுவேன் என்றும் சொல்கிறார். நானா அவசரப்படுகிறேன். நான் நிதானமானவன். வேகமானவன். பன்னீர் நிதானமாக இருந்ததுனால தான் தர்மயுத்தம் நடத்தினார். இரட்டை இலையை முடக்கினார். எடப்பாடி ஆட்சிக்கு எதிராக வாக்களித்தார். ஆனால், நான் அவசரப்படுகிறேனாம். எனக்கு சிரிப்பு தான் வருது.
Also Read: ஓ.பி.எஸ் பெயரில் ரூ.61 லட்சம்; மனைவி பெயரில் ரூ.7 கோடி – துணை முதல்வரின் மொத்த சொத்துப் பட்டியல்
இங்கே இன்னொருத்தர் இருக்காறே… தங்க தமிழ்ச்செல்வன். அவர் எதுக்கு நம்ம கூட வந்தார். எதுக்கு நம்ம கூட இருந்தார்னு தெரியல. அவர் பெயரில் தான் தங்கம். குணத்தில் தகரம். இவர்கள் நமக்கு எதிரிகள், துரோகிகள் என யாரை எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் சொன்னார்களோ, அவர்களுடன் சேர்ந்துகொண்டார். 2001-ம் ஆண்டு நான் எம்.பி-யாக இருந்த போது, ’அமைத்திப்படை’ பன்னீரும், ’தகரம்’ தங்க தமிழ்ச்செல்வனும் எப்படி இருந்தார்கள், இப்போது எப்படி இருக்கிறார்கள் என பாருங்கள். போடி மக்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும்.” என்றார்.