உலகின் இரு பலம்வாய்ந்த அணிகள் மோதினால் ஆட்டம் எப்படியிருக்கும் என்பதற்கான சாட்சியாக நடந்துமுடிந்திருக்கிறது இந்தியா – இங்கிலாந்து தொடர். 1-1 என சமநிலையில் இருந்த ஒருநாள் தொடரை இரு அணிகளும் வெற்றிகொள்ள கடுமையாகப் போராடியதில் இந்தியா த்ரில் வெற்றிபெற்றிருக்கிறது.

எப்போதும்போலவே கோலி டாஸைத் தோற்க, இந்தியா முதலில் பேட்டிங் ஆடியது. இங்கிலாந்தில், டாம்கரணுக்கு பதில் உட் சேர்க்கப்பட்டிருந்தார்‌. இந்தியத்தரப்பில், குல்தீப் வெளியேற்றப்பட்டு, நடராஜன் சேர்க்கப்பட்டிருக்க, பிரதான சுழல்பந்து வீச்சாளர்களே இல்லாமல் களம்காணும் கோலியின் முடிவு சரிதானா என்ற விவாதத்தோடே தொடங்கியது இந்திய இன்னிங்ஸ்.

ஓப்பனர்களாகக் களமிறங்கிய தவானும் ரோஹித்தும், நிதானமாகத் தொடங்கினர். போட்டியின் ஐந்தாவது ஓவரை சாம்கரண் வீச, அந்த ஓவரில் மூன்று பவுண்டரிகளுடன் களைகட்ட ஆரம்பித்தது இவர்களது வெற்றிநடை. உட்டின் வேகத்தில் மடிந்து மெய்டன் தந்தாலும், அதற்கடுத்த டாப்லியின் ஓவரில் நான்கு பவுண்டரிகள் அடித்து விட்டதைப்பிடிக்க, இந்தத் தொடரில் முதல்முறையாக, பவர்ப்ளே ஓவர்களின் முடிவில், ரன்ரேட் 4.1ஐ தாண்டி, 6.5-ஐ எட்டித்தொட்டது. மிகச்சிறந்ததொரு தொடக்கமாக, இது அமைய, 44 பந்துகளில் வந்துசேர்ந்த தவானின் 32-வது அரைசதத்தோடு, 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்போட்டது தவான் – ரோஹித் கூட்டணி. ரோஹித் இன்று அடிக்கப்போவது டபுள் சென்சுரியா, ட்ரிப்பிள் சென்சுரியா என ரசிகர்களை மகிழ்ச்சியில் மூழ்கிய நேரம் ரஷித்தின் கூக்ளியில் போல்டாகி, 37 ரன்களில் வெளியேறினார் ரோஹித்.

#INDvENG

பன்ட்டோடு ராகுல் இணைந்தார். எதிரணி உருவாக்கும் ப்ரஷரை அவர்கள் பக்கமே திருப்புவதுதானே பன்ட்டின் பாணி. வேகத்துக்கே மட்டுப்படாதவன் நான், சுழலா என்னைச் சுருட்டிவிடும் என ரஷித் வீசிய பந்தை லாங்ஆனில் சிக்ஸருக்கு அனுப்பி, தனது அதிரடி ஆயுதத்தைக் கையிலெடுத்தார். மறுபுறம், ராகுல், திணறிக் கொண்டிருந்தார். அவர், பந்துகளை வீணடித்துக் கொண்டிருக்க, ஓப்பனர்கள் ஏற்றிவைத்த ரன்ரேட் இறங்குமுகம் கண்டது. ஸ்பின் எடுபடுவதால் லிவிங்ஸ்டோனை உள்ளே பட்லர் கொண்டுவர, அவர் வீசிய இரண்டாவது பந்தே ராகுலின் விக்கெட்டை எடுக்கும் பந்தாக மாற, வரிசையாக நான்கு இந்திய பேட்ஸ்மேன்கள் ஸ்பின்னில் வீழ்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, ஒரே பார்ட்டைம் ஸ்பின்னரோடு களமிறங்கியுள்ள இந்தியாவின் முடிவு சரியா என்ற பயத்தையும் அதிகரிக்கச்செய்தது.

அடுத்ததாக இணைந்தது, போட்டியின் உயிரோட்டமாக இருந்த பன்ட்-பாண்டியா கூட்டணி. போட்டியின் சரிபாதி ஓவர்களே முடிந்திருந்தது. இவர்களையும் ஸ்பின்னர்களை வைத்து காலிசெய்ய பட்லர் முயற்சிக்க, இந்தக்கூட்டணி, பெரிய ஷாட்களுடன் பதிலடி கொடுக்கத் தொடங்கியது. ஹர்தீக், மொயின் அலியின் ஓவரில், மூன்று சிக்ஸர்களைத் தூக்கி இங்கிலாந்தின் அட்டாக்கை சிதறடித்தார்.

அடுத்த 12 ஓவர்களும் இவர்களது அதிரடி தொடர்ந்தது. ரஷித் வீசிய பந்தை சிக்ஸருக்குத் தூக்கி, 44 பந்துகளில் அரைசதத்தை அடித்தார் பன்ட். ஒன் ஹேண்டட் சிக்ஸர் உள்ளிட்ட புது அன்ஆர்த்தடாக்ஸ் ஷாட்கள் உள்ளடக்கிய, தனக்கான சொந்த கிரிக்கெட் புத்தகத்தையே எழுதிக் கொண்டிருந்தார் பன்ட். கன்ட்ரோல், டைமிங், பேலன்ஸ் என பத்துப்பொருத்தமும் பக்காவாகப் பொருந்த ஆடிக் கொண்டிருந்த பன்ட் சதத்தைத் தொடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, சாம் கரணின் பந்தில், பட்லர் பிடித்த ஒரு அசாத்தியமான கேட்சால், 78 ரன்களை எடுத்திருந்த பன்ட் வெளியேறினார். 70 பந்துகளில், 99 ரன்களைக் குவித்த இக்கூட்டணி முறிந்தது. 400-ஐ சுலபமாக தொடவேண்டிய இந்திய ஸ்கோர் குறைந்ததற்குக் காரணம் இந்தக்கூட்டணி முறிந்ததுதான்.

அடுத்ததாக பாண்டியா பிரதர்ஸ் ஒன்று சேர, பெரிய பார்ட்னர்ஷிப் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வெகுவிரைவிலேயே, 64 ரன்களுடன் ஹர்திக் ஸ்டோக்ஸால் வெளியேற்றப்பட, முடிவைக் கண்டது பிரதர்ஸ் கூட்டணி. இதன்பின் தாக்கூர் உள்ளே வந்து, 21 பந்துகளில் 30 ரன்கள் என ஒரு மினிகேமியோ ஆட, 300ஐ தொட்டது இந்தியா. ஆனாலும், உட் தனது வேகத்தில் அவரையும் அடுத்ததாக, க்ருணாலையும் வெளியேற்றினார். அடுத்ததாக வந்த ஆறே பந்துகளில், பிரசித்தையும் புவனேஷ்வரையும் முறையே, உட்டும் டாப்லியும் வெளியேற்ற, 48.2ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 329 ரன்களுக்கு இன்னிங்ஸை முடித்தது.

#INDvENG

ஓப்பனிங்கும், லோயர்மிடில் ஆர்டரும் நன்றாக அமைந்திருந்தாலும், ராகுல், கோலி சோபிக்கத் தவறியதுடன், டெய்ல் எண்டர்கள் பிரச்னையும் வழக்கம் போல் விழித்துக்கொள்ள, 380-ஐ சுலபமாகத் தொட்டிருக்க வேண்டிய ஸ்கோர், 329 ஆக முடிந்துபோனது. முன்வரிசை வீரர்களைச் சுழலால் சுருட்டிய இங்கிலாந்து, பின்வரிசை வீரர்களை வேகத்தால் மிரட்டி விரட்ட, பத்து பந்துகளை விளையாட ஆளின்றி வீணாக்கிய இந்தியா, 330ஐ இலக்காக நிர்ணயித்தது.

330 டார்கெட் எல்லாம், பேர்ஸ்டோவுக்கும் ஸ்டோக்ஸுக்குமே பத்தாதே எனும் பயத்தோடே பெளலிங்கை ஆரம்பித்தது இந்தியா. நினைத்ததைப் போலவே, ராய், புவனேஷ்வர் வீசிய முதல் ஓவரில், மூன்று பவுண்டரிகளை விளாச, கொஞ்சம் மிரண்டது இந்தியா. ஆனாலும், அதே ஓவரின் கடைசிப்பந்தில், ராயை வெளியேற்றி, அவரது இயல்புக்கு மாறான கொண்டாட்டத்தை வெளிப்படுத்தி, சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தார் புவனேஷ்வர்.

அதோடு நிற்காது, இந்தத் தொடர் முழுவதும், கிரீஸை விட்டு நன்றாக இறங்கி வந்து ஆடிக்கொண்டிருந்த பேர்ஸ்டோவுக்கு, கீப்பரை முன்னே வரச் செய்து, அவரை கீரிஸுக்குள்ளே நின்று ஆடச்செய்து, தான் வீசிய முதல்பந்திலேயே அவரை அவுட் ஆக்கினார் புவனேஷ்வர்.

எனினும், நடுவில், புவனேஷ்வர் ஓவரில், ஸ்டோக்ஸ் அளித்த ஒரு கேட்ச்வாய்ப்பை, ஹர்திக் தவறவிட, இது கேம் சேஞ்சிங் தருணமாக இருக்குமோ என்ற பயம் கவ்வியது. ஏற்படுத்திய தாக்கத்தை தொடரும் எண்ணத்தில், புவனேஷ்வர், நடராஜன், பிரசித்தைக் கொண்டு மும்முனைத்தாக்குதல் நிகழ்த்தினார், கோலி. அதன்பலனாக, பதினோராவது ஓவரிலேயே, நடராஜன், ஸ்டோக்ஸை தவானிடம் கேட்ச் கொடுக்கச்செய்து ஆட்டமிழக்கவைக்க, மூன்று விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து.

அதன்பின் பட்லர்-மலான் கூட்டணி இணைய, இவர்களைப் பிரிக்கும் நோக்கத்தில், தாக்கூர், ஹர்திக்கைக் கொண்டு தாக்குதலைத் தொடங்கியது இந்தியா. எக்கானமி எகிறினாலும் விக்கெட் எடுப்பதில் வித்தகரான தாக்கூர், இங்கிலாந்தின் ஆகச்சிறந்த பலமான பட்லரை, ஆட்டமிழக்கச் செய்து இங்கிலாந்தின் நம்பிக்கையைத் தகர்த்தார். நான்கு விக்கெட்டுகளை இழந்திருந்தாலும், ரன்ரேட் 6-க்குக் கீழே இறங்காமலே இங்கிலாந்து இன்னிங்ஸைத் தொடர்ந்தது கொஞ்சம் பயமூட்டுவதாகவே இருந்தது.

புதிதாக இணைந்த மலானும், லிவிங்ஸ்டோனும் வருவது வரட்டுமென இந்திய பௌலர்களை அட்டாக் செய்யத் தொடங்கினர். தாக்கூர் மற்றும் பிரசித் ஓவர்களில், இக்கூட்டணி, தலா மூன்றுமுறை பந்தை பவுண்டரி லைனைத் தாண்டச் செய்ய, முதன்முறையாக, நடப்பு ரன்ரேட், தேவைப்படும் ரன்ரேட்டைத் தாண்டி இந்திய முகாமுக்கு கிலியூட்டியது.

அந்த பயம் உச்சகட்டத்தை அடைந்தநேரம், தாக்கூர் வீசிய ஃபுல்டாஸ் பாலில், அவரிடமே கேட்ச் கொடுத்து லிவிங்ஸ்டோன் ஆட்டமிழக்க, 52 பந்துகளில் 60 ரன்களைச் சேர்த்திருந்த இக்கூட்டணியை முறித்து, வழக்கம்போல போட்டியின் போக்கை மாற்றினார்‌ தாக்கூர். அடுத்து மலானின் விக்கெட்டையும் வீழ்த்தி இந்தியாவை வெற்றியின் பக்கம் அழைத்துவந்துவிட்டார் தாக்கூர்.

கடைசியாக, மொயின் அலியின் அனுபவமும், சாம் கரணின் துடிப்பையும் கொண்டு சரிவிலிருந்து மீண்டெழப் போராடியது இங்கிலாந்து. சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், பந்துக்கும், தேவைப்படும் ரன்களுக்குமான வித்தியாசத்தை அதிகரிக்க விடாமல் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் போராடினர்.

இந்தக்கூட்டணியை முறித்தேயாக வேண்டுமென புவனேஷ்வர் கொண்டுவரப்பட, வீசிய மூன்றாவது பந்திலேயே மொயின் அலியை வீழ்த்தினார். ரஷித் சாம்கரணுடன் இணைந்தார். மூன்று விக்கெட்டுகள்தான் இருக்கிறதென்ற பயமேயில்லாமல், சிறப்பாக ஆடிய இந்தக் கூட்டணி, இந்தியாவுக்குச் சவால் விடுத்தது. சாம்கரண் 22 ரன்கள் இருந்தபோது, பவுண்டரி லைனில் அவரது கேட்சைத் தவறவிட்டார் ஹர்திக். இந்த ஒரு விக்கெட்டின் விலை மிகப்பெரியதாக இருக்கப்போகிறதென்பதை இந்தியா தாமதமாகத்தான் உணர்ந்தது.

50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை இந்தக்கூட்டணி எட்ட, சாம் கரண், அரைசதத்தை நெருங்க, கிட்டத்தட்ட ஒரு பந்து ஒரு ரன் எடுத்தாலே இங்கிலாந்துக்கு வெற்றி என்று வந்துநின்றது போட்டி. தாங்கள் ஏன் சாம்பியன் அணியென்பதை ஏழு விக்கெட் விழுந்த இக்கட்டான நிலையிலும் நிரூபித்து, பயமுறுத்திக் கொண்டிருந்தது இங்கிலாந்து.

போட்டி இங்கிலாந்தின் பக்கமாய் வேகமாக நகர்ந்து கொண்டிருந்தபோது, தாக்கூரை கோலி கொண்டுவர, தாக்கூர் வீசிய பந்தை ரஷித் அடிக்க, ஷார்ட் கவரில் நின்ற கோலி, இடப்புறமாகத்தாவி, ஒரேகையில், அற்புதமாக கேட்ச் பிடித்து அவரை வெளியேற்றினார்.

#INDvENG

உட் உள்ளே வந்தார். சாமின் விக்கெட்டே கோப்பைக்கான சாவியாக இருக்கப்போகிறதென்பது புரிந்தது. 44-வது ஓவரில், சாம்கரண் அடித்த சிக்ஸர், போட்டி கடைசிப்பந்து வரை த்ரில்லுடன் நகரப்போகிறதென்பதைத் தெளிவாக்கியது. இங்கிலாந்து கொஞ்சம் கொஞ்சமாக வெற்றிக்கோட்டை நோக்கிநகரத் தொடங்கியது.

மிகக் கால்குலேட்டிவான இன்னிங்ஸை ஆடிக்கொண்டிருந்த சாம்கரண் சிங்கிள்களைத் தவிர்த்துவிட்டு பெரிய ஷாட்களுக்கே போய், இந்திய பெளலர்களை அட்டாக் செய்து ஆடினார். கோப்பையை விட்டு இந்தியாவை நகர்த்துவதாகவே இருந்தது அவரெடுத்த ஒவ்வொரு ரன்னும். தாக்கூர் வீசிய 47-வது ஓவரில், 18 ரன்கள் வந்துசேர, மொத்த போட்டியையும் தன்பக்கம் திருப்பிக் கொண்டது இங்கிலாந்து.

19 ரன்கள் தேவை, 12 பந்துகளே மிச்சமென்ற நிலையில், ஹர்திக் வீசிய ஓவரில், இரண்டு கேட்ச்களை இந்திய ஃபீல்டர்கள் தவறவிட, கடைசி ஓவரில் 14 ரன்கள் எடுத்தால் வெற்றி என க்ளைமேக்ஸை நெருங்கியது ஆட்டம்.

கோப்பை யாருக்கென தீர்மானிக்கும் திக்திக் நிமிடங்கள் தொடங்க, மிகமுக்கியமான ஓவரை நடராஜன் வீசினார். முதல் பந்திலேயே உட் ஹர்திக்கால் ரன்அவுட் செய்யப்பட, டாப்லி இறங்கினார். இரண்டாவது பந்தில் ஒரு ரன்னெடுக்கப்பட்டு ஸ்ட்ரைக் சாம்கரணிடம் வர, மூன்றாவது பந்திலும் நான்காவது பந்திலும், ஸ்ட்ரைக்கைத் தன்னிடம் வைத்துக் கொள்ள ரன்னெடுக்காமல் விட்டு, ஐந்தாவது பந்தில் பவுண்டரி அடித்தார். கடைசிப் பந்தில் எட்டு ரன்கள் தேவை என்ற நிலையில், சாம்கரணால் ரன்னெடுக்க முடியாமல் போக, ஏழு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா. சாம் கரண் 95 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆட்டநாயகனாக சாம்கரணும் தொடர்நாயகனாக பேர்ஸ்டோவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கடைசிப்பந்து வரை பரபரப்போடே போட்டியை நகர்த்திச் சென்ற இரு அணிகளும், தாங்கள் ஏன் முதலிரண்டு இடத்தில் இருக்கத் தகுதி வாய்ந்தவர்கள் என நிரூபித்துள்ளனர். டெஸ்ட், டி20, ஒருநாள் தொடர் என மூன்றையும் வென்றுள்ளது இந்தியா‌.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.