அருப்புக்கோட்டை அருகே புறவழிச்சாலையில் கார் கவிழ்ந்த சாலை விபத்தில் ஒரு பெண் 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.
சென்னை அம்பத்தூரை சேர்ந்த கோகுல், தனது குடும்பத்தினர் 8 பேருடன் காரில் இன்று திருச்செந்தூரில் உள்ள தனது குலசாமி கோயிலில் தரிசனம் செய்துவிட்டு மீண்டும் சென்னை நோக்கி மதுரை தூத்துக்குடி பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி புறவழிச்சாலையில் வந்து கொண்டிருந்த போது நான்கு வழிச்சாலையில் நடைபயிற்சிக்கு சென்றுவிட்டு திடீரென சாலையை கடக்க முயன்ற கெங்கமநாயக்கன்பட்டியை சேர்ந்த சந்தோஷ் மற்றும் மதிவாணன் ஆகிய சிறுவர்கள் மீது எதிர்பாராத விதமாக கார் மோதியது.
அதன் பின்பு நிலைதடுமாறிய கார் சாலை தடுப்பின் மீது மோதி மறுபக்கம் சாலையில் பாய்ந்து கவிழ்ந்து உருண்டு விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சாலையை கடக்க முயன்ற சந்தோஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் காரில் பயணம் செய்த கோகுலின் உறவுப்பெண்ணான கனி மற்றும் கோகுலின் மகன் மாதேஷ் ஆகிய இரண்டு பேர் காரிலிருந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மேலும் இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த பந்தல்குடி காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து குறித்து பந்தல்குடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM