பேருந்து பயணச் சீட்டுடன் பயணிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகளை கொடுத்து நட வைத்த கோவையைச் சேர்ந்த பேருந்து நடத்துனர் யோகநாதன் என்பவரை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

மாதந்திர மனதின் குரல் நிகழ்ச்சி வாயிலாக பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது யோகநாதனின் சேவையை குறிப்பிட்ட பிரதமர் கடந்த 25 வருடங்களில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான மரக்கன்றுகளை அவர் நட வைத்துள்ளதாக கூறினார். தனது ஐவகை மரம் வளர்க்கும் பொது நலத் திட்டத்திற்கு அரசு ஆதரவு தர வேண்டும் என பிரதமரால் பாராட்டப்பட்ட நடத்துநர் யோகநாதன் தெரிவித்துள்ளார்.

யார் அந்த மாரித்து யோகநாதன்?

கோவையை சேர்ந்த யோகநாதன் அரசு பேருந்து நடத்துநராக உள்ளார். யோகநாதனுக்கு சிறுவயது முதலே இயற்கையின் மீதும் மரங்களின் மீதும் தீராக்காதல். அதன் காரணமாக, தன் பணிக்கு நிகரான நேரத்தையும், ஊதியத்தின் ஒரு பகுதியையும் மரக்கன்றுகளை நடுவதற்காக ஒதுக்கி, பயன்படுத்தி வருகிறார். கடந்த 33 வருடங்களாக மரக்கன்றுகளை நடுவதில் அதித ஆர்வம் கொண்டுள்ளார். மேலும் மரம் வளர்ப்பு பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சியும் அளித்து வருகிறார்.

சுற்றுச்சூழல் மீதான அக்கறையும், ஆர்வமும் யோகநாதனுக்கு மத்திய அரசின் பசுமைப்போராளி, தமிழக அரசின் சுற்றுச்சூழல் சேவை வீரர் ஆகிய விருதுகளைப் பெற்றுத் தந்துள்ளது. இவரது ஆர்வத்தைக் கண்ட அமெரிக்காவில் வசிக்கும் தமிழரான வாசுதேவன் என்பவர், தனது சொந்த செலவில் கோவை ஆலந்துறையில் 2 ஏக்கர் நிலம் வாங்கிக் கொடுத்துள்ளார். அந்த இடத்தில் ‘மரம் சூழலியல் நடுவம்’ என்ற அமைப்பை நிறுவியுள்ள யோகநாதன், ஆர்வத்துடன் வருபவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கி வருகிறார். அழிவின் விளிம்பில் உள்ள மரங்களின் விதைகளை மீட்டு, மரக்கன்றுகளை வளர்த்தெடுப்பதே நோக்கம் என்று கூறி வருகிறார் அவர்.

இதுவரை 3 லட்சம் மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வரும் யோகநாதன், எட்டாயிரம் பள்ளிகளுக்குச் சென்று மாணவ,மாணவிகள் மத்தியில் மரம் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். சிறுவர், சிறுமிகளுக்கு மரக்கன்றுகளை பதியம் போடுவது, மாடித்தோட்டம் உள்ளிட்ட பயிற்சிகளையும் அளித்து வருகிறார் யோகநாதன். மரங்கள் வளர்த்து வருவதோடு மட்டுமின்றி, ஆர்வம் கொண்டவர்களுக்கு இலவச மரக்கன்றுகளும், பயிற்சியும் வழங்கி வரும் யோகநாதன், சிபிஎஸ்இ-யின் ஐந்தாம் வகுப்பு பாடப்புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளார் என்பது கூடுதல் சிறப்பு.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.