கொரோனா ஊரடங்கு காலத்தில் இருந்ததைக் காட்டிலும் தற்போது வீட்டில் பெண்களுக்கு எதிரான வீட்டு வன்முறை குறித்த புகார்கள் மேலும் அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரத்த்தில் தெரியவந்துள்ளது.
தேசிய பெண்கள் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில், கடந்த 2019 ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த புகார்கள் 19,730 புகார்கள் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2020 ஆம் ஆண்டு ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த புகார்கள் 23,722 ஆக அதிகரித்திருந்தது.
இந்நிலையில் தற்போதும் பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த புகார்கள் மாதம் 2000ஐ தாண்டுவதாக தேசிய பெண்கள் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் நான்கில் ஒரு பங்கு பெண்களுக்கு எதிராக வீட்டில் நடக்கும் வன்முறை குறித்த புகார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான வீட்டு வன்முறை தொடர்பான 1,463 புகார்கள் 2021 ஜனவரி முதல் 2021 மார்ச் 25 வரை பெறப்பட்டதாக புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் இதில் பல பெண்கள் வீட்டு வன்முறைக்கு உள்ளாகினர். இதனால் வீட்டு வன்முறை குறித்த புகார்களை தெரிவிக்க ஒரு வாட்ஸ்அப் எண்ணை தேசிய பெண்கள் ஆணையம் அறிவித்தது. அதையடுத்து வீட்டு வன்முறை தொடர்பான புகார்களின் எண்ணிக்கை மாதங்களில் அதிகரித்துக்கொண்டே வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
2020 ஏப்ரல் முதல் இப்போது வரை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான 25,886 புகார்கள் வந்துள்ளன. இதில் 5,865 வீட்டு வன்முறை புகார்கள் அடங்கும். இதுகுறித்து தேசிய பெண்கள் ஆணையத் தலைவர் ரேகா சர்மா கூறுகையில், “வீடு என்பது கணவன் மனைவி இருவரின் பணியிடமாகவும், தங்கள் குழந்தைகளுக்கான பள்ளிகள் மற்றும் கல்லூரிகளாகவும் மாறிவிட்டது. இந்த சூழ்நிலையில் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் இருந்து கொண்டு குடும்பங்களையும் கவனித்துக்கொண்டு பல தொழில்களையும் செய்து வருகின்றனர். பொருளாதார பாதுகாப்பின்மை, மன அழுத்த நிலைகள் அதிகரிப்பு, பதட்டம், நிதிக் கவலை மற்றும் பெற்றோர்கள், குடும்பத்தினரிடம் உணர்ச்சிபூர்வமான ஆதரவு இல்லாதது ஆகியவை 2020 ஆம் ஆண்டில் பல நிகழ்வுகள் வீட்டு வன்முறைக்கு காரணமாக இருக்கலாம்” என தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM