பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி தியாகராஜ நகர் ரயில்வே மேம்பாலத்தின் நடுவில் கொஞ்சம் பக்கம் நான்கு வருடங்களாக காணவில்லை. இதன் பின்னணி இதுதான்…
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ளது தியாகராஜ நகர். அரசு ஊழியர்கள், அரசு அலுவலகங்கள், மின்வாரிய அலுவலகம் என பல முக்கிய அலுவலகங்களில் உள்ளடக்கிய இந்தப் பகுதி திருநெல்வேலி மாநகராட்சியின் விரிவாக்க பகுதியாகவும் உள்ளது.
தியாகராஜ நகரில் ரயில்வே கிராசிங் உள்ளது. அன்பு நகர், தியாகராஜ நகர், ராஜகோபாலபுரம் பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான குடியிருப்புகளில் உள்ள மக்கள் கடந்து செல்லும் முக்கிய பாதை இது. திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலிக்கு ரயில்கள் செல்லும்போது இந்த ரயில்வே கேட் மூடி திறக்கப்படும். நாளொன்றுக்கு 13 முறைக்கும் மேல் கேட் திறந்து மூடப்படும். இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்பவர்களும், வேலைக்குச் செல்பவர்களும் தொழில் ரீதியாக பாதையை கடப்பவர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகும் சூழல் இருந்தது.
தியாகராஜ நகர் அன்பு நகர் ராஜகோபாலபுரம் பகுதியில் வாழும் மக்கள் பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வர வேண்டுமென்றால், இந்த ரயில்வே கேட்டைக் கடந்துதான் வரவேண்டும். கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக இந்த ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இருந்து வந்தது.
இந்த நிலையில்தான் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரயில்வே மேம்பாலத்திற்கான பூமிபூஜை போடப்பட்டு, 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாலம் கட்டும் பணி தொடங்கியது. ரூ.26.30 கோடி மதிப்பீட்டில் நெடுஞ்சாலைத்துறை இந்தப் பணியை மேற்கொண்டது. 695.426 மீட்டர் நீளம், 8.05 மீட்டர் அகலத்துடன் 9 தூண்களுடன் வடக்கு தெற்காக பாலம் கட்டப்பட்டுள்ளது.
ஆனால், ரயில்வே மேம்பாலப் பணிகள் முடிவடைந்தும், தண்டவாளத்தின் மேலே மேம்பாலத்தின் மத்தியில் பகுதியானது ரயில்வே துறையின் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியது. ஆனால், கடந்த நான்கு வருடங்களாக பாலத்தின் மத்தியில் இணைக்கப்படாமல் நடுவில் கொஞ்சம் பக்கம் இல்லாத மேம்பாலமாக காட்சியளிக்கிறது.
இந்த மேம்பால பணிகளுக்காக வாகன நெருக்கடி பொறுத்துக் கொண்ட பகுதி மக்கள், இப்போது மேம்பாலம் கட்டப்படும் பயன்பாட்டுக்கு வராமல் இருப்பது மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
மேம்பாலத்தின் நடுப்பகுதி இணைப்புக்கான பணிகள் இன்னும் தொடங்க பெறுவதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் ரயில்வே நிர்வாகம் மேற்கொள்ளவில்லை என்பது மிகவும் வேதனையான ஒன்று. மேம்பாலத்தின் 2 வழியாகவும் வாகனங்கள் ஏதும் மேம்பாலத்திற்கு பயணிக்காதபடி சிறிய அளவிலான தற்காலிக தடுப்புச் சுவர் கட்டப்பட்டுள்ளது.
– நாகராஜ்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM