மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் ஐ.பி.எஸ் அதிகாரியான அமிதாப் தாகூருக்கு கட்டாய ஓய்வு அளித்துள்ளது உத்தரபிரதேச அரசு.
1992-ஆம் ஆண்டு உத்தரபிரதேச கேடர் ஐபிஎஸ் அதிகாரியான அமிதாப் தாகூர், 2016-ஆம் ஆண்டில் உத்தரப்பிரதேசத்திலிருந்து வேறு மாநிலத்திற்கு இடமாற்றம் செய்யக்கோரி மத்திய அரசுக்கு விண்ணப்பித்திருந்தார். உத்தரப்பிரதேச அரசு அதிகாரிகள் தன்னை எதிரியாக கருதுகிறார்கள் என்று குற்றம்சாட்டி இந்த கோரிக்கையை வைத்திருந்தார்.
முன்னதாக, சமாஜ்வாடி கட்சியின் தலைவரான முலாயம் சிங் யாதவ் தன்னை அச்சுறுத்தியதாக குற்றம் சாட்டிய சில நாட்களுக்கு பின்னர், ஜூலை 13, 2015 அன்று அமிதாப் தாகூர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். முலாயம் சிங் யாதவ் தன்னை அச்சுறுத்தியதாகக் கூறப்பட்ட ஆடியோ பதிவை அவர் பகிரங்கப்படுத்தியிருந்தார். பின்னர் அவர் 2016-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உத்தரப்பிரதேச மாநில அரசால் மீண்டும் பணியமர்த்தப்பட்டார்.
இந்நிலையில் தற்போது, அவர் ஐபிஎஸ் அதிகாரியாக பணிபுரியத் தகுதியற்றவர் எனக் கூறி, அவருக்கு கட்டாய விருப்ப ஓய்வு வழங்கி வெளியேற்றியுள்ளது உத்தரபிரதேச அரசு. இதனையடுத்து, அமிதாப் தாகூர் தனது வீட்டில் மாட்டப்பட்டுள்ள பெயர்ப்பலகையில் பெயருக்குப் பின் ‘கட்டாய ஓய்வு’ என குறிப்பிடப்பட்ட பெயர்ப்பலகையை புகைப்படம் எடுத்து தனது ஃபேஸ்புக் ஐடியில் பதிவிட்டுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM