இடுக்கியில் மூன்று குட்டிப்புலிகளுடன் உலா வரும் தாய்புலியை காருக்குள் இருந்து சுற்றுலா பயணி எடுத்த வீடியோ காட்சி கவனத்தை ஈர்த்துள்ளது. அதேநேரத்தில், புலிகளின் நடமாட்டத்தால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.
தமிழக – கேரள எல்லையை இணைக்கும் கேரள மாநிலம் இடுக்கி மற்றும் பத்தனம்திட்டா ஆகிய இரு மாவட்ட வன எல்லைகளுக்கு உட்பட்டு 925 சதுர கிலோ மீட்டர் பரப்பில் தேக்கடி பெரியார் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. 60-க்கும் அதிகமான புலிகள் இந்த காப்பகத்தில் உள்ளன. தற்போது கோடை என்பதால் வனங்களுக்குள்ளும் வறட்சி நிலவுகிறது. இதனால் உணவிற்காகவும், தண்ணீருக்காகவும் புலிகள் உள்ளிட்ட வன விலங்குகள் வனத்திற்குள் இருந்து வெளிவரத் துவங்கியுள்ளன.
தேக்கடி பெரியார் புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ள வண்டிப்பெரியாறு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் புலிகளும் சிறுத்தைகளும் வளர்ப்பு ஆடு – மாடுகளை வேட்டையாடுவதும் தொடர்ந்து வருகிறது, அத்துடன், தாய்ப்புலி ஒன்று தனது குட்டிகளுடன் உலவுவதை பார்த்த மக்கள், இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். ஆனால், வனத்துறையினர் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வண்டிப்பெரியாறு – கோட்டயம் சாலையில் கீரிக்கரை பகுதியில் நள்ளிரவில் காரில் பயணித்த சுற்றுலா பயணிகள் தாய்ப்புலி தனது குட்டிகளுடன் உலவுவதை காருக்குள் இருந்து துல்லியமாக வீடியோ எடுத்துள்ளனர். கவனம் ஈர்க்கும் அந்த வீடியோ காட்சி வெளியானதைத் தொடர்ந்து, புலி நடமாட்டம் உள்ளதாக கூறப்பட்ட கீரைக்கரை, ஆனக்குழி, புதுக்காடு, போர்ட்லேண்ட் பகுதி மக்கள் அச்சமும் பிதியும் அடைந்துள்ளனர். காலை, மாலையில் தோட்டங்களுக்கு செல்லவே அச்சப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்,
பொதுமக்கள் புகார் தெரிவித்தபோது கண்டுகொள்ளாத வனத்துறையினர், குட்டிகளுடன் உலவும் புலி குறித்த வீடியோ காட்சி வெளியானதை தொடர்ந்து, புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க தானியங்கி கேமரா மற்றும் கூண்டு வைத்து அவற்றைப் பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
– வி.சி.ரமேஷ் கண்ணன்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM