புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் மூன்றாவது முறையாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியிடுகிறார். 2016-ம் ஆண்டு இதே தொகுதியில் விஜயபாஸ்கர் போட்டியிட்டபோது, தனது 8 வயது மகளான ரிதன்யா பிரியதர்ஷினியை பிரசாரத்துக்கு அழைத்து வந்து வாக்குச் சேகரித்தார். அதேபோல், தற்போதும் கடந்த சில தினங்களாகவே தனது மகள் ரிதன்யா பிரியதர்ஷினியைப் பேசவைத்து வாக்குச் சேகரித்துவருகிறார் விஜயபாஸ்கர். தற்போது தனது இளைய மகள் அனன்யாவின் கையிலும் மைக்கைக் கொடுத்திருக்கிறார்.

விராலிமலை தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டுவரும் சிறுமி அனன்யா, “ நான் விஜயபாஸ்கரோட ரெண்டாவது பொண்ணு. எல்லாருக்கும் வணக்கம். எங்க அப்பா தினமும் இரவும் பகலும் உங்களுக்காகத்தான் உழைக்கிறாரு. ஏதாச்சும் உங்களுக்கு ஆகிருச்சுன்னா துடிச்சிப்போயிடுவாரு. உங்களுக்கு காது கேக்கலைன்னா காது மெஷினா வருவாரு. கண்ணு தெரியலைன்னா கண்ணாடியா வருவாரு. கஜா புயல்னா கரன்ட்டா வருவாரு. கொரோனான்னா மருந்தா, மாத்திரையா வருவாரு. பொங்கல்னா சீரா, சிறப்பா வருவாரு. தீபாவளி, பொங்கலைக்கூட எங்களோட செலிபிரேட் பண்ணாம, உங்ககூடதான் பண்ணணும்னு நெனப்பாரு. எங்கப்பான்னு சொல்லுறதைவிட, உங்க வீட்டுப் பிள்ளைன்னுதான் சொல்லணும்.
உங்க வீட்டுப் பிள்ளைக்கு இரட்டை இலைச் சின்னத்தில் ஓட்டுப் போடுவீங்களா?” என்று மழலைக் குரலில் பேசி வாக்குச் சேகரித்தார்.
தேர்தல் பிரசாரத்தில் சிறுவர்களை ஈடுபடுத்தக் கூடாது என்பது தேர்தல் விதிமுறைகளில் ஒன்று. ஆனால், அமைச்சர் விஜயபாஸ்கர் தனது மகள்களைப் பிரசாரத்தில் ஈடுபடுத்தியிருப்பது சரிதானா என்ற கேள்வியையும் இது ஒருபக்கம் ஏற்படுத்தியுள்ளது.