கேரளத்தின் மலப்புரம் மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் தொகுதி வெங்காரா. இந்தத் தொகுதியின் செல்வாக்கு மிக்க தலைவர் என்றால், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் (ஐயூஎம்எல்) கட்சியின் குன்ஹாலிக்குட்டி என்பவர்தான். இவர் தற்போது எம்.பி.யாக இருக்கிறார். சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக எம்.பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தேர்தல் களத்தில் குதித்துள்ளார். வலுவான தலைவராக இவர் களத்தில் பணிகள் செய்து வருகின்ற நிலையில், இதே தொகுதியில் இன்னொரு வேட்பாளர் மக்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறார். அவர்தான் பல்கலை வித்தகரான திருநங்கை அனன்யா குமாரி அலெக்ஸ்.

கேரளாவில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் முதல் ‘திருநர்’ வேட்பாளர் இவர்தான். அனன்யா ஒன்றும் கேரள மக்களுக்கு புதியவரா, பரிச்சயமில்லாதவாரோ கிடையாது. நன்கு அறிமுகமானவர். இன்னும் சொல்லப்போனால் தினமும் அனன்யாவின் குரலையோ அல்லது அவரின் முகத்தையோ கேரள மக்கள் பார்த்து வருகிறார்கள். ஆம், அனன்யா வானொலி வர்ணனையாளர், ஒப்பனைக் கலைஞர், நிகழ்ச்சித் தொகுப்பாளர் என மீடியாக்களில் பல பணிகளை செய்து வருகிறார்.

டிவி பிரபலம் என்பதோடு நின்றுவிடாமல், பாலின சமத்துவத்துக்காகத் தொடர்ந்து போராடி வரும் ஒரு போராளியும் கூட இந்த அனன்யா. கொல்லம் மாவட்டத்தின் பெருமண் பகுதிதான் இவரின் பூர்விகம். பள்ளிகளில் படிக்கும் காலத்திலேயே தன்னை மூன்றாம் பாலினத்தவராக உணர்ந்த அனன்யா, இதை குடும்ப நபர்கள், நண்பர்களிடம் வெளிப்படுத்த, அவர்கள் இவரை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. விளைவு, வீட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார். 12-ம் வகுப்பு படிக்கும்போதே படிப்பை பாதியில் விட்டுவிட்டு வீட்டில் இருந்து வெளியேறி பெங்களூரு சென்றார்.

அங்கு திருநங்கை மேக்கப் கலைஞர் ரெஞ்சு ரெஞ்சிமார் என்பவர் அனன்யாவைத் தத்தெடுக்க, அவரின் பராமரிப்பில் சில ஆண்டுகள் அங்கேயே வாழ்ந்து வந்தார். பல கடினமான சூழ்நிலைகளுக்கு மத்தியில் வாழ்ந்து வந்த அனன்யாவின் கேரள வரவு இந்தமுறை கொஞ்சம் மாறுதலை கொண்டிருந்தது. தனது திறனை வளர்த்துக் கொண்டுவந்த அனன்யா ரேடியோ ஜாக்கியாக உருவெடுத்தார். அனன்யா இதில் காட்டிய உழைப்பு மற்ற படிகளில் அவர் ஏற வழிவகுத்தது. இதன்பின் ஒப்பனைக் கலைஞர், நிகழ்ச்சி தொகுப்பாளர் எனப் பல்வேறு வடிவங்களில் பணியாற்ற தொடங்கினார். சமீபத்தில் எர்ணாகுளத்தில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவை தொகுத்து வழங்கியதும் இவரே.

image

இந்தநிலையில்தான் தேர்தலில் போட்டி என்கிற முடிவுக்கு அனன்யா வந்துள்ளார். “இது முழு திருநர்களுக்கும் ஒரு வரலாற்று தருணம் என்பதால், ஒரு வலுவான வேட்பாளருக்கு எதிராக போட்டியிட வேண்டும் என்று விரும்பினேன். அதனால் வெங்காரா தொகுதியை தேர்ந்தெடுத்தேன். எனது போராட்டம் ஆண், பெண் மற்றும் திருநர் இடையிலான சமத்துவத்திற்காக இருக்கும். மனிதர்கள் தொடர்பான விஷயங்களை நாம் எங்கு குறிப்பிட்டாலும், ஆண்கள், பெண்கள் மற்றும் திருநர்களுக்கு சமத்துவம் என்று நாம் கருத வேண்டும். திருநர்களுக்கு சம அங்கீகாரம் அவசியம்.

திருநர்களுக்கும் அரசியல் பிரதிநிதித்துவம் வேண்டும். நான் வெற்றி பெற்றால் திருநர்களைத் துன்புறுத்துபவர்களுக்கு எதிராக சட்டம் இயற்றக் குரல் கொடுப்பேன். அதேபோல் திருநர்கள் வாழ்வுக்கு வழிவகுக்கும் சட்டங்களை இயற்றவும் பாடுபடுவேன். கல்வியின் மூலம் மட்டுமே எந்த சமூகமும் சுயமரியாதையையும் அங்கீகாரத்தையும் அடைய முடியும். நாங்கள் தலையை உயர்த்திப் பிடிக்க, எங்களுக்கு திடமான கல்வி தேவை” என்று கூறி தற்போது வாக்குகளை அறுவடை செய்யும் பணிகளில் வெங்காரா தொகுதி முழுவதும் ஈடுபட்டுள்ளார்.

“கட்சி, சாதி, மதம் கடந்து சிந்திக்கும் கேரள மக்கள் என்னையும் மனதார ஏற்பார்கள்” என்று நம்பிக்கையுடன் தேர்தல் களம் கண்டுள்ளார் அனன்யா.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.