புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை வி.ஐ.பி தொகுதியாகப் பார்க்கப்படுகிறது. சுகாதாரத்துறை அமைச்சராக இருக்கும் விஜயபாஸ்கர், மூன்றாவது முறையாகப் போட்டியிடுகிறார். தி.மு.க சார்பில் கடந்த முறை போட்டியிட்டு டஃப் கொடுத்த தென்னலூர் பழனியப்பன் மீண்டும் போட்டியிடுகிறார். தொகுதிக்குள் பல இடங்களில் பழனியப்பன் கண்ணீர் மல்க சென்டிமெண்டாகப் பேசி பிரசாரத்தில் ஈடுபட,“ உங்களிடம் கண்ணீர் சிந்த மாட்டேன். மாறாக, வியர்வையையும், ரத்தத்தையும் சிந்தி உழைப்பேன்” என்று பேசி பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறார் விஜயபாஸ்கர். இரு தரப்பினரும் பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல், பிரசாரம் செய்து வருகின்றனர்.

விஜயபாஸ்கர்

பொதுமக்களிடம் பிரசாரத்தில் ஈடுபடும் தி.மு.க வேட்பாளர் பழனியப்பன், “நான் நிற்கின்ற இறுதித் தேர்தல் இதுதான். விஜயபாஸ்கரை எதிர்த்துப் போட்டிப்போட்டு பணம் கொடுக்க முடியுமா செலவு செய்ய முடியுமா என்றால், முடியாது. விஜயபாஸ்கர் பணத்தை நம்பி நிற்கின்றார். நான் உங்களை நம்பி தான் நிற்கிறேன். உங்களுக்குத் தெரியும், 30 ஆண்டுகளில் மக்களின் இன்ப, துன்பங்களில் நான் செல்லாத வீடு, பார்க்காத மக்களே இருக்க மாட்டார்கள் என்று சொல்லும் அளவுக்கு, மிகுந்த அன்புடன் பழகுவதை மட்டும் என் சொத்தாகக் கருதுகிறேன். பணத்தை வைத்துக் கொண்டு சுகமாக இருக்கலாம் என்று விரும்பினால், இந்தத் தேர்தலில் செலவழிக்கும் தொகையை வைத்துக் கொண்டு கடன் பெறாமல் நிம்மதியாக இருக்கலாம்.

ஆனால், வாழ்வோ, சாவோ இந்த மக்களோடு மட்டும் தான். அதனால் தான் என் வீடாக இருந்தாலும் சரி, பெட்ரோல் பங்காக இருந்தாலும் சரி, எதை இழந்தாலும் உங்களை இழக்காமல் இருக்க என்னை வெற்றி பெற வைய்யுங்கள்…” என்று பேசியவர் நெஞ்சு புடைக்க விம்மி அழுதார்.

கட்சித் துண்டால் கண்களைத் துடைத்துக்கொண்டு பேசியவர், “ உங்களிடம் எனக்கு இருக்கின்ற அபிமானம். இரண்டு முறை தேர்தலில் நின்று தோற்றிருக்கிறேன். நான் தொடர்ந்து மக்கள் பணியில் சலிக்காமல் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். விஜயபாஸ்கருக்கு உறுதுணையாகத் அவரது தந்தை, அண்ணன் இருக்கின்றனர்.

பழனியப்பன்

எனக்கு அண்ணன், தம்பி, அப்பா எல்லாம் உங்களைப் போன்றவர்கள் தான். என்னை வெற்றி பெற வைத்தால், முன் மாதிரி சட்டமன்ற உறுப்பினராகத் தொகுதிக்கு நல்ல பெயரைச் சம்பாதித்துக் கொடுப்பேன்” என்று மீண்டும் விம்மி அழுதார்.

பழனியப்பனின் சென்டிமென்ட் பிரசாரத்திற்குப் போட்டியாக பேசி வரும் விஜயபாஸ்கர், “சிலர் உங்கள் கையப்பிடிப்பாங்க. சிலர் உங்கள் காலைப் பிடிப்பாங்க. சிலர் வர்றப்பவே கிளிசிரின் ஊத்திக்கிட்டு வந்து அழுகிற மாதிரி ஆக்ஷன் காட்டுவாங்க. அதை எல்லாம் நம்பாதீங்க. 5 வருஷத்துக்கு ஒரு தடவ பத்து, பத்து நாளு ஓட்டு மட்டும் கேட்டுட்டுப்போனவரு, ஓட்டு போடலைன்னா எனக்கு ஏதாவது ஆகிரும்னு அழுகுறார்னா, 10 வருஷமா இந்தத் தொகுதி மக்களுக்காக உழைச்சு ஓடா தேஞ்சு, மாடா தேஞ்சு, கொடுத்து, கொடுத்து உழைச்சிக்கிட்டே இருக்கேன்.

எல்லா கஷ்டத்தையும் தாங்கிக்கிட்டு, பொது வாழ்க்கையில பொதுமக்களோட கண்ணீரைத் துடைக்கத்தான் விஜயபாஸ்கருக்கு இந்த எம்.எல்.ஏ பதவியை மக்கள் கொடுத்திருக்கிங்க. என் குடும்பத்தைப் பார்க்கிறதுக்கோ, எனது சொத்தைப் பாதுகாக்கவோ இந்தப் பதவி கிடையாது. எதிர்க்கட்சியில இருக்க வேட்பாளர்கள் ஒருத்தரு அழுகுறாரு, ஒருத்தரு காலப்பிடிக்கிறாரு, ஒருத்தரு சொத்துப் போச்சு, சுகம் போச்சுன்னு சொல்றாரு. சொத்து நாமளா வாங்கித்தர முடியும். மக்கள் நீங்களா வாங்கித் தர முடியும். மக்கள் முன்னாடி நடிக்கக் கூடாது. உங்க கண்ணுல தண்ணீர் வரக்கூடாதுன்னு தான் விஜயபாஸ்கர் உழைக்கிறான்.

விஜயபாஸ்கர்

எனக்கு ஆயிரம் கஷ்டம் இருக்கு. நானே உங்ககிட்ட வந்து அழுது என் சொத்து போச்சு சுகம் போச்சு மீட்டுக்கொடுங்கன்னு சொல்றது எப்படி சரியா இருக்கு. என் சொத்தை மீட்கவா மக்கள் இருக்காங்க. அது என்னோட பிரச்னை. என்னோட பிரச்னையை நான் மனதுக்குள்ளே வைத்து, உங்கள் கண்களில் தண்ணீர் வராமல் பார்ப்பவன். உங்களுக்காக வியர்வையும், ரத்தத்தையும் சிந்துபவன் விஜயபாஸ்கர். உங்கள் முன்னாள் கண்ணீர் சிந்துபவன் விஜயபாஸ்கர் இல்லை. நான் எதையும் இழக்கத் தயாராக இருக்கிறேன். ஆனால், எதை இழந்தாலும், மக்களுக்காகத் தொடர்ந்து செய்வேன்” என்றார்.

போட்டி கொஞ்சம் டஃப் தான்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.