தமிழகச் சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது. பிரதான அரசியல் கட்சிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் தலைமைக்கு எதிராகப் போராடுவதும், மாற்றுக் கட்சிகளுக்குத் தாவுவதும் என நாம் அனைவரும் எதிர்பார்த்த, எதிர்பாராத சம்பவங்கள் அனைத்தும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

அந்த வகையில், சசிகலா சிறையிலிருந்து விடுதலையாகி சென்னை திரும்பிய போது, அவரது காரில் அதிமுக கொடியைப் பயன்படுத்தக் கூடாதென்று பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. சசிகலா அந்த நேரத்தில் திருவள்ளூர் மாவட்ட அதிமுக துணை செயலாளர் தட்சிணாமூர்த்தி என்பவற்றின் காரில் ஏறி அதிமுக கொடியுடன் சென்னை வந்தடைந்தார்.

தட்சிணாமூர்த்தியின் காரில் பயணித்த சசிகலா

சசிகலாவுக்கு கார் கொடுத்த விவகாரம் தீயாயை பரவியதைத் தொடர்ந்து தட்சிணாமூர்த்தியை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி அதிமுக தலைமை ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டது. அதன் பின் அதிமுகவிலிருந்து விலகி அமமுகவில் இணைந்த தட்சிணாமூர்த்தி டிடிவி தினகரனுக்கு மிகவும் இணக்கமாகிப் போனார்.

அதிமுகவில் இந்தமுறை முன்னாள் அமைச்சர் மூர்த்திக்கு மாதவரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளராகவும், பால்வளத் துறை அமைச்சராகவும் பதவி வகித்து வந்த மாதவரம் மூர்த்தி, 2013-ல் ஆவின் பால் கலப்பட விவகாரத்தில் சிக்கினார். அதனையடுத்து, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அமைச்சர், மாவட்டச் செயலாளர் என மூர்த்தியின் அனைத்து பதவிகளையும் பறித்தார். தொடர்ந்து 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மூர்த்தியை ஒதுக்கி வைத்து விட்டு மாதவரம் தட்சிணாமூர்த்தியை வேட்பாளராக்கினார்.

மாதவரம் மூர்த்தி

ஆனால், மாதவரம் மூர்த்தியின் உள்ளடி வேலைகளால் தட்சிணாமூர்த்தி வெற்றிவாய்ப்பை இழந்து திமுகவிடம் தொகுதியைப் பறிகொடுத்தார். தோல்வியைத் தழுவிய போதிலும், மாவட்ட துணை செயலாளர் பதவியில் தட்சிணாமூர்த்தி இருந்து வந்தார். ஆனால், ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு கட்சியில் மீண்டும் தலைகாட்டத் தொடங்கிய மூர்த்தி, தலைமைக்கு நெருக்கமானவர் என்பதால் மீண்டும் மாவட்டச் செயலாளர் பதவியை வாங்கினார். அதிலிருந்தே தட்சிணாமூர்த்தி, அவரது ஆதரவாளர்களை மாதவரம் மூர்த்தி தொடர்ந்து கட்சி வேலைகளில் புறக்கணித்து வந்துள்ளார்.

முன்னாள் அமைச்சர், தொகுதியில் செல்வாக்கு மிக்க நபர் எனப் புராணம் பாடிய மூர்த்தியை இந்தமுறை மாதவரம் தொகுதி வேட்பாளராக அறிவித்திருக்கிறது அதிமுக தலைமை. இந்நிலையில், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட தட்சிணாமூர்த்தி சசிகலாவைச் சந்தித்து மாதவரம் தொகுதி கள நிலவரம் குறித்து எடுத்துக்கூறியிருக்கிறார். சசிகலாவும் தட்சிணாமூர்த்தி தக்க நேரத்தில் தனக்குச் செய்த உதவிக்கு நன்றிக்கடனாக டிடிவி தினகரனிடம் மாதவரம் தொகுதியில் தட்சிணாமூர்த்தியை வேட்பாளராக முன்னிறுத்த வலியுறுத்தி இருக்கிறார்.

சசிகலா- தினகரன்

அதைத் தொடர்ந்து, சசிகலாவுக்கு கார் வழங்கியதால் அதிமுக-விலிருந்து நீக்கப்பட்ட தட்சிணாமூர்த்தியை மாதவரம் தொகுதி அமமுக வேட்பாளராக அறிவித்திருக்கிறார் டிடிவி தினகரன். மாதவரம் தொகுதியில் மூர்த்திக்கு எதிராக அமமுக சார்பில் களமிறங்கி இருக்கும் தட்சிணாமூர்த்தி கடந்த தேர்தலில் மாதவரம் மூர்த்தி தனக்குச் செய்த உள்ளடி வேலைகளை, வட்டியும் முதலுமாகத் திருப்பி செய்வதற்கு முனைப்புக் காட்டி வருகிறாராம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.