தொகுதி உடன்பாடு எட்டப்படாத காரணத்தால் அதிமுகவில் இருந்து விலகுவதாக தேமுதிக அறிவித்துள்ளது. 2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் தொடர்ந்து மூன்று கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. தேமுதிக சார்பில் கேட்கப்பட்ட தொகுதி எண்ணிக்கையையும், தொகுதிகளையும் ஒதுக்க மறுத்து உடன்பாடு ஏற்படாத காரணத்தினால், மாவட்ட கழக செயலாளர்களுடனான அவசர ஆலோசனை கூட்டத்தில் ஏற்பட்ட ஒற்றை கருத்தின் அடிப்படையில் அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுவதாக அறிவித்துள்ளது.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் “அதிமுக – பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுகிறது. கேட்ட தொகுதிகள் கிடைக்காததால் தலைவர் விஜயகாந்த் இதை அறிவித்துள்ளார். தேமுதிகவுக்கு இன்றுதான் தீபாவளி. தமிழகத்தில் அனைத்து இடத்திலும் அதிமுக டெபாசிட் இழக்கும். அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி அதிமுகவுக்கு வேலைப்பார்க்கவில்லை. பாமகவுக்கு வேலைப்பார்த்து வருகிறார்” என சாடினார்.

image

இதையடுத்து கடலூர் பண்ருட்டியில் பேசிய விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் “நாங்க கேட்கிற சீட் கொடுக்க முடியவில்லை என்றால் ஒவ்வொரு சீட்டும் பறிக்கப்படும். எடப்பாடி தொகுதியில் முதலமைச்சர் பழனிசாமி தோல்வியடைவார். சாணக்கியனாக இருந்தது போதும். சத்ரியனாக இருக்க நேரம் வந்துவிட்டது. விஜயகாந்த், பிரேமலதாவை பார்த்திருப்பீர்கள்; இனி இருவரையும் கலந்து என்னை பார்ப்பீர்கள். சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும். அதிமுகவுக்கு இனி இறங்கு முகம்தான். சாதி பற்றி எனக்கு தெரியாது; நமக்கு தெரிந்த ஒரே சாதி தேமுதிகதான். சாதியை பற்றி பேசுவதில் நான் முட்டாளாகவே இருப்பேன்” என்றார். 

image

இதுகுறித்து அதிமுகவின் புகழேந்தி கூறுகையில் “அதிமுகவில் எல்லோரையும் அனுசரித்து போகவேண்டும் என்றுதான் கூட்டணி அமைத்து பேசி வருகின்றனர். பாமகவை நடத்துவது போன்றுதான் தேமுதிகவை நடத்துகிறோம். அதிமுகவுடன் தேமுதிக சேர்ந்து போக வேண்டும் என்றுதான் நினைக்கிறோம். எல்.கே.சுதீஷ் கூட்டணி பேசும்போதே கடுமையான வார்த்தைகளை உபயோகித்துள்ளார்.

அதிமுக டெபாசிட் இழக்கும் என கூறுவதை ஏற்க முடியாது. கே.பி.முனுசாமி தவறாக நடந்திருந்தால் அதை தலைமையிடம் சொல்லியிருக்கலாம். இப்போதுதான் சொல்லவேண்டுமா?” என்றார்.

இதுகுறித்து பாஜகவின் கே.டி.ராகவன் கூறுகையில், “தேமுதிகவின் முடிவு துரதிர்ஷ்டவசமானது. திமுக ஆட்சிக்கு வருவது தமிழகத்திற்கு மிகப்பெரிய கேடாக அமையும். அதனால்தான் தேசிய கட்சிகள் ஒன்றாக இணைய வேண்டும் என விரும்புகிறோம். இந்த முடிவு வருத்தத்தை ஏற்படுத்துகிறது. அதிமுகவும் தேமுதிகவும் பேச்சுவார்த்தை நடத்தின. பாஜக தலையிடவில்லை. இந்த கூட்டணி இணைய வேண்டும் என இப்போதுகூட பாஜக விரும்புகிறது” என்றார்.

image

மூத்த பத்திரிகையாளர் துக்ளக் ரமேஷ் கூறுகையில், “அதிமுகவுடன் கூட்டணி பேசிக்கொண்டிருந்தபோதே தேமுதிக அதிருப்தி வார்த்தைகளை தெரிவித்திருந்தது. இருந்தாலும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பாமகவுடன் போட்டிபோட்டுக்கொண்டு தேமுதிக செயல்பட்டதை பார்க்க முடிந்தது. தேமுதிகவை கூட்டணியில் தக்கவைத்துக்கொள்ள முடியாமல் வெளியேற வைத்திருப்பது அதிமுகவின் கையாளாகதத்தனத்தை காட்டுகிறது.

கே.பி.முனுசாமியை குற்றம் சாட்டி சுதீஷ் பேசியிருக்கிறார். அப்படி எதுவும் நடக்காமல் அவர் அவ்வாறு வெளியில் சொல்லியிருக்க வாய்ப்பில்லை. தேமுதிக விலகியிருப்பது அதிமுகவிற்கு ஒரு குறையாகவே நான் பார்க்கிறேன். திமுகவுக்கு போனால் கண்டிப்பாக அதிமுக கொடுத்த வாய்ப்பு கிடைக்காது. ஆனால் திமுகவுடன் செல்ல வாய்ப்புள்ளது” என்றார்.

மூத்த பத்திரிகையாளர் ஜென்ராம் கூறுகையில், “ அதிமுக தேமுதிகவை உதாசீனப்படுத்தியது உண்மை. தேமுதிக டிடிவி தினகரனுடன் செல்ல வாய்ப்புள்ளது. இல்லையென்றால் ராஜ்ய சபா சீட் கொடுத்தால் திமுகவுடன் செல்ல வாய்ப்புள்ளது. தனித்து போட்டி என்பதற்கு வாய்ப்பில்லை. விஜயகாந்தின் உடல்நிலை அதற்கு ஒத்துழைக்காது” எனத் தெரிவித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.